தமிழில் குடமுழுக்கு மறுப்பு – மனித உரிமை மீறலாகும்!
தஞ்சைக் கோயிலில் தமிழில் மட்டும் குடமுழுக்கு செய்ய இயலாது என அறநிலையத் துறையின் முதன்மைச் செயலாளர் உயர்நீதி மன்றத்தில் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோயில்கள் அனைத்திலும் கடந்த 22-11-1998இல் பக்தர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி 97.3சதவிகிதத்தினர் தமிழில் வழிபாடு செய்ய வேண்டுமென அளித்தத் தீர்ப்பை, அன்றைய தமிழக அரசின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு சென்றோம் என்பதை நினைவுபடுத்துகிறேன்.
இந்தியாவில் வாழும் 120 கோடி மக்களில் சுமார் 25,000பேர்கள் மட்டுமே சமற்கிருதம் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் என கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த விகிதாசாரப்படிப் பார்த்தால், தமிழ்நாட்டில் சமற்கிருதம் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 100 பேர்கள் மட்டுமே இருக்கும். இந்தச் சிறிய தொகையினருக்காக சமற்கிருதத்தில் குடமுழுக்கு நடத்துவது என்பது, 7½ கோடி தமிழர்களுக்கெதிராக இழைக்கப்படும் அநீதியாகும். மேலும் இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் வழிபாடு, குடமுழுக்கு ஆகியவை தமிழில் மட்டுமே நடத்தப்படவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பழ. நெடுமாறன்
தலைவர்
தமிழர் தேசிய முன்னணி