“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க சொல்லி , தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் உண்ணா நோன்பிருந்த முதலாவது தினம் இன்றாகும்.
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் வட தமிழீழம் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .
இன்று (15.09.2024) ஞாயிற்றுக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 26 ஆம் திகதி வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடை பெறும். நினைவேந்தல் ஆரம்ப நிகழ்வுகள் காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், போராளி றொஷானின் தாயார் இரத்தினசிங்கம் பொற்கொடியால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து, திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் போராளி ஒருவர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் செலுத்தியதுடன் பலரும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.