தமிழின அழிப்புக்கு அனைத்துலக நீதி வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணத்தின் 12 ஆம் நாள் பிரான்சின் கொல்மோர் என்ற நகரத்தில் இன்று காலை (24.02.2025) அகவணக்கத்துடன் ஆரம்பமாகி, கொல்மோர் நகரசபையில் சந்திப்பினை மேற்கொண்டு,மூலுஸ் நகரசபை நோக்கிப் பயணித்து மூலுஸ் நகரசபை சந்திப்பினை நிறைவுசெய்தனர்.தொடர்ந்தும் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நோக்கி அறவழிப்போராட்டம் சுவிஸ் எல்லையினை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.இன்று மாலை பாசல் மாநகரில் நிறைவடையும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு, தமிழின அழிப்பிற்கு எதிராக,உணர்வெழுச்சியுடன் அனைத்துல நீதி வேண்டி விடுதலை நோக்கி வீறுகொண்டு அறவழியில் இப்போராட்டம் பயணிக்கின்றது.
தமிழர்கள் இப்படியான தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்களூடாக, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், சிறிலங்கா சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தி,இனவழிப்பிற்கான நீதி வழங்கப்பட வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தியும் தமிழர்களுக்கு நிரந்தரத்தீர்வு தமிழீழம் என்பதை வலியுத்தியும் உரிமைக்குரல் எழுப்பும் நீதிக்கான போராட்டமானது ஜெனிவாவைச் சென்றடைந்து,முருகதாசன் திடலில் மாபெரும் நீதிக்கான போராட்டம் 03.03.2025 அன்று நடைபெறவுள்ளது.
எம் தமிழ் உறவுகளே!
தமிழின அழிப்பற்கு உள்ளாக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் ஏதிலிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழர்களாகிய நாம் ,தம்வாழிட நாடுகளில் தமிழின அழிப்பிற்கான நீதியினை வேண்டி,எம் வாழிட நாடுகளை தமிழர்களின் நியாயமான நீதிக்கான கோரிக்கைக்கு குரல்கொடுக்க வைப்பதற்கான அழுத்தினை கொடுக்க வேண்டும்.இதன் ஊடாக,அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் சிங்களப் பேரினவாத அரசினை நிறுத்தி தமிழின அழிப்புக்கு அனைத்துலக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை உறுதியாக வலியுறுத்த முடியும்.
எனவே இப்போராட்டங்களுடன் நீங்களும் இணைந்து ஓரணியாய் முரசறைவோம்.
“ காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கமைய போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை “ -தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்”
“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.”