தமிழீழம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என கோரும் தீர்மானமொன்றை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பித்துள்ளனர்.
அமெரிக்க காங்கிரசின் டெபரா ரொஸ், பில் ஜோன்சன் இருவரும் இணைந்து ஈழத்தமிழர்கள் ஜனநாயக ரீதியாகவும் சமத்துவமாகவும் பிரதிநிதித்துவம் செய்யப்பட வேண்டும்,நீடித்த அமைதியான அரசியல் தீர்வை காண்பதற்கு பொதுவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோரும் இருகட்சி தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் தமிழ்இன அழிப்பின் 14 வருடநினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழர்கள் ஈடுபட்ட தருணத்திலேயே அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளனர்.
அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் தமிழர் தாயகப்பகுதிகளை இலங்கை இராணுவம் தொடர்ந்தும் ஆக்கிரமித்துள்ளதாகவும் ஒடுக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காக குரல் எழுப்புவதை தடுக்கும் ஆறாவது திருத்தச்சட்டம் காரணமாக கருத்துசுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள தீர்மானம் தெரிவித்துள்ளது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும்,ஈழத்தமிழர்களின் பாராம்பரிய தாயகத்தை அங்கீகரிக்கவேணடும் எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் தீர்மானத்தின் நகலில் தெரிவித்துள்ளனர்.