தமிழீழம் மலரும் என்கிறார் விமல் வீரவன்ச!

You are currently viewing தமிழீழம் மலரும் என்கிறார் விமல் வீரவன்ச!

இலங்கை சிங்கள–பௌத்த நாடு என்பதால் தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட்டே ஆக வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதைத் தமிழ் மொழியில் பாடினால் இந்த நாட்டில் இரண்டு பிரிவினர் இருக்கின்றார்கள் என்று அர்த்தப்படும்.

அந்த அர்த்தம் தனி நாடு உருவாகுவதற்கு – பிரபாகரன் விரும்பிய தமிழீழம் மலர்வதற்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

‘தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் பாடினால் அது மீண்டும் தமிழர்களைத் தனிநாடு கோருகின்ற நிலைக்கு தள்ளிவிடும்’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்:-தமிழர்களை உசுப்பேற்றுகின்ற வகையில் கருத்துக்களை வெளியிடுவதை ஜே.வி.பியினர் உடன் நிறுத்த வேண்டும்.

சிங்கள–பௌத்த நாடான இலங்கையில் சிங்களவர்களுக்கும்,சிங்கள மொழிக்கும் தான் முதலிடம். இந்த வரையறைக்குள் இந்த நாட்டில் வாழும் சகல இனத்தவர்களும் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

ஒரு நாட்டுக்குள் ஒரு தேசியக் கொடியும் ஒரு தேசிய கீதமும்தான் இருக்கின்றன. அப்படி இருக்கின்றபோது தேசிய கீதம் மட்டும் ஏன் இரண்டு மொழிகளில் பாடப்பட வேண்டும்?

தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால் தேசியக் கொடியையும் இரண்டு வகைகளில் தமிழர்கள் கேட்பார்கள்.அத்துடன், தமக்கென ஒரு நாடு வேண்டும் எனவும் கேட்பார்கள்.

அந்த நிலைமையை நாம் ஏற்படுத்த விரும்பவில்லை.அதுதான் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்

பகிர்ந்துகொள்ள