தமிழீழ கடலில் உறுமிக் கொண்டு பயணித்த புலேந்திரன் , குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகள் .!

You are currently viewing தமிழீழ கடலில் உறுமிக் கொண்டு பயணித்த புலேந்திரன் , குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகள் .!
தமிழீழ கடலில் உறுமிக் கொண்டு பயணித்த புலேந்திரன் , குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகள் .! 1

ரகுவும் பழனியும் அலைகளை ஊடுருவி – இருளைத் துளைத்து – எப்போதும் பழக்கப்பட்ட தமது கண்களால் பார்த்தார்கள்…. சிறிலங்கா கடற்படைப் படகு அவர்களை நோக்கி மின் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது …….

‘கடற்புறாவை’ விரைவாக செலுத்த முயன்றார்கள் .

இயலவில்லை .

புலிகளின் விரைவுப் படகுகளில் ஒன்றல்ல ‘கடற்புறா’ என்பது அவர்களுக்குத் தெரியும் .

பருத்தித்துறைக் கடலில் மலைகளாய் எழுந்து அலைகள் வெறிக்கூத்தாடின.

பதினேழு விடுதலைப் புலிகள் ‘கடற்புறாவில்’ இருந்தார்கள்.

லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட……

நிலைமையைத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது .

சிறிலங்கா அரசின் கொடுமைகள் சிறிதும் குறையவில்லை . வல்லாளுமையாளரின் வெறித்தனங்கள்…….

இந்தியாவும், சிறிலங்காவும் சேர்ந்து விரித்த வலை இறுக்கமாக இருந்தது.

பதினேழு விடுதலைப் புலிகளும் நடுக்கடலில் கைதாகி அன்றிரவு சிறிலங்கா கடற்படைக் கப்பலில் ஏற்றப்பட்டார்கள்.

பழனி எதிரியின் கப்பலில் இருந்து கொண்டே கடலைப் பார்த்தான் . பின்பு நீண்டகால நண்பன் ரகுவைப் பார்த்துச் சொன்னான்;

‘’ஆசையோடு நாம் விளையாடித் திரிந்த கடல்’’

முன்பொருநாள் –

சிங்கள சிறிலங்காப் படைகளை எதிர்த்து தமிழீழம் வீறு கொண்டு போராடிய காலம்.

27,10.1986 மாலை நான்கு மணி.

தமிழீழ கடலில் உறுமிக் கொண்டு பயணித்த புலேந்திரன் , குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகள் .! 2

தமிழ்நாட்டுக் கடற்கரையில் இருந்து பயிற்சி முடித்த விடுதலைப் புலிகளின் முதற் பெண்கள் படைப்பிரிவு, தமிழீழம் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

கழுத்துகளில் ‘சயனைட்’ மாலைகள் – சிரித்த கலகலப்பான பேச்சு – களம் பார்க்கும் தாகம் – பத்துப் பெண் விடுதலைப் புலிகள் படகில் உட்கார்ந்திருந்தார்கள்.

தமிழீழக் கரையில் அவர்களைச் சேர்க்கும் பொறுப்பு ரகுவப்பாவிடமும், பழனியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

படகைக் கடலில் தள்ளிவிட்டு எல்லோரையும் பார்த்து பழனி சொன்னான்:-

சிரிக்கிறீங்க…… ஒண்டு சொல்லுறன்…. ‘’வழியில சிலவேளை நேவிக் கப்பல் வரலாம்……. ‘’ஹெலி’’ துரத்தலாம் ……அசையாதீங்கோ ….. பதட்டத்திலை குப்பியைக் கடிச்சுப் போடாதேங்கோ …..”

உறுமிக் கொண்டு மின்விசைப்படகு கடலில் பாய்ந்தது.

பெண்களில் ஒருத்தி சொன்னாள் ;

‘’பயப்பிடாதைங்கோ எண்டு சொல்லி எங்களை அவமானப்படுத்திறீங்கள் பழனி அண்ணா!’’

பழனி தனக்குள் சிரித்துக்கொண்டான் . ரகுவப்பாவும் , பழநியும் வல்வெட்டித்துறையில் பேர் போன படகு ஓட்டிகள் …..உறுதி வாய்ந்த விடுதலைப் புலிகள்.

கடற்படை படகுகள் துரத்த – பலமுறைஅவர்கள் எதிரியின் கண்ணில் மண்ணைத்தூவி – கடலைக் கிழித்துப் பறந்திருக்கிறார்கள்.

பலதடவை கடற்போரில் அவர்கள் ஈடுபட வேண்டியிருந்தது . கடற்படையோடு எத்தனையோ முறை மோதியிருக்கிறார்கள். நாகர் கோவில் கடற்கரையில் சிறிலங்கா ‘ஹெலிகொப்டர்’ ஒன்றை அவர்கள் தாக்கி வீழ்த்திய போர் உணர்ச்சி மயமானது.

தமிழீழக் கடலலைகள் கொந்தளித்த வண்ணமே இருந்தன.

கப்பலிலிருந்து அடிக்கடி மத்தாப்புக்கள் வானத்தில் வெடிக்கப்படும் . கடலில் பெரிய வெளிச்சம் அடிக்கும் .படகுகள் பளிச்சென்று அடையாளம் காணப்படும் . படகை நோக்கி குண்டுகள் பறக்கும் ……

இந்தக் கடலில்தான் ரகுவப்பாவும் , பழநியும் விடுதலைப் புலிகளை ஏற்றி இறக்கினார்கள் . அவர்களுடைய படகோட்டம் விடுதலைப் புலிகளின் வீரம் நிறைந்த ஒரு பகுதியே ……

காரிருள் வானத்தை மூடத் தொடங்கிற்று . கடலும் வானமும் இருளாகிக் கொண்டு வந்தது. அவர்கள் இப்போது நடுக் கடலில் இருந்தார்கள் .

இரவு ஆறரை மணி .

திடீரென்று …படகை யாரோ வலிய கைகளால் பற்றி இழுத்தது போன்ற அதிர்ச்சி .

அலைகள் ‘ஓ’ என்று மோதித் தெறித்தன.

கண்களின் முன்னால் படகு உள்ளே குப்புறக் கவிழ்ந்தது . மீனுக்கு விரித்த வலைகளில் ஒன்றில் படகின் வெளி இயந்திரங்கள் சிக்கி……

‘’பொலுத்தீன் பொதிகளைப் பிடித்துக் கொள்ளுங்கோ…..” என்று உரக்கக் கத்தினான்.

‘பொலுத்தீன் ‘ பொதிகளோடு பெண்புலிகள் உட்பட அனைவரும் கோர அலைகளில் மிதந்தார்கள் . ஒரு பொதியோடு லெப் . துர்க்கா….( இவள் பின்னர் உடையார்கட்டுக் காட்டுக்குள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு நடைபெற்ற மோதலில் வீரமரணமடைந்தாள்.)

வசந்தி கவிழ்ந்த படகைப் பற்றிக்கொண்டு மிதந்தவள் ‘’ஐயோ …! பழநி அண்ணா இவள் ஒருத்தி குப்பியைக் கடிக்கிறாள் …..” என்று கூச்சலிட்டாள்.

அந்தப் பெண்புலி அப்போது வசந்திக்கு அருகில் மிதந்து கொண்டிருந்தாள். கடல் அலைகள் பொங்கி விழுந்து புரண்டன….

ரகுவப்பா மீண்டும் கத்தினான் –

‘’யாரும் சயனைட் கடிக்காதைங்கோ … நங்கள் இருக்கிறம் கரைக்கு போயிடலாம்….. யோசிக்காதேங்கோ.”

அலைகளின் மோதலுக்கிடையில் அரை குறையாகக் கடிபட்ட அவளின் குப்பியைக் கடல் அடித்துக் கொண்டு போயிற்று.

ஆழ்கடலில் – கரைதெரியாத வெறும் நீர்வெளியில் பத்துப் பெண் புலிகள்……

பழநி மூன்று பெண்களின் ‘பொலுத்தீன் ‘ பைகளைப் பிடித்து இழுத்தபடி மெல்ல மெல்ல மன்னாரை நோக்கி நீந்தத் தொடங்கினான் ……போகும் போது அவன் கத்திகொண்டே போனான்.

‘’கெதியாய் வந்திடுவன் ….. போட் ( படகு ) கொண்டு வருவன் பயமில்லாமல் இருங்கோ ….”

பழநியோடும் ரகுவப்பாவோடும் இன்னும் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள் . அவர்களும் படகு கொண்டு வரும் நோக்கில் கரை இருந்த திசை நோக்கி விரைவாக நீந்தத் தொடங்கினார்கள் …..

வசந்தி அவள் பாட்டில் தனியாக அவர்கள் பின்னால் நீந்திக்கொண்டே போனாள்…..முன்பே அவளுக்கு நீச்சல் தெரியும்.

அலைகளின் ஆவேசமான இரைச்சல் …..காற்று வேகமாக உறுமியது. ‘சளாக் !’ என்று அடிக்கடி பெரிய மீன்கள் பாயும் ஓசை.

எட்டு மணிநேரம் கடலோடு கொடுமையான போராட்டம்.

கவிழ்ந்த படகில் உட்கார்ந்திருந்த ரகுவப்பா வானத்தைப் பார்த்தான். கொடிய இருளின் பின்னணியில் வெளிச்சம் காட்டும் விண்மீன்கள்.

அப்போதுதான் –

அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த படகை பழநி நடுக்கடலுக்குக் கொண்டு வந்தான்.

நீந்திக் கொண்டே இழுத்துச் சென்ற மூன்று பெண் புலிகளையும் கரையில் சேர்த்துவிட்டுப் பதட்டத்தோடும் – படகோடும் வந்திருந்தான்.

நல்லவேளை யாருக்கும் எதுவும் நடந்து விடவில்லை.

‘பொலுத்தீன்’ பொதிகளோடு மிதந்தவர்கள் படகில் ஏற்றப்பட்டார்கள் . அவர்களுக்கு நம்பிக்கையும் தெம்பும் ஊட்டிக்கொண்டிருந்த ரகுவப்பாவும் கடலில் ஏறினான்.

எட்டு மணிநேரம் கடலலைகளோடு போராடியதால் அனைவரும் களைத்துவிட்டனர். குப்பி கடித்த பெண் போராளி வாந்தி வாந்தியாக எடுத்தாள்……

ஆனால்,

அவள் உடல் நிலை ஆபத்தான நிலையிலில்லை.

காலை மூன்று மணி.

மன்னார்க் கரையில் வெள்ளை மணற்பரப்பில் ரகுவப்பா பழனி உட்பட பெண்புலிகள் அனைவரும் கரையை மிதித்தார்கள்.

தாய் மண்ணின் இனிய கடற்கரைக் காற்று சுகமாக வீசிற்று.

பழனி சயனைட் கடித்தவளைப் பார்த்துச் சொன்னான்:-

‘நான் சொல்லியும் நீ கேட்கவில்லை பார் …. சயனைட் முழுதாக உள்ளே போயிருந்தா உன்ரை நிலை என்ன ஆகியிருக்கும் ….?’

எல்லோரும் சிரித்தார்கள்.

பதட்டத்தில் ‘சயனைட்’ கடிக்க முனைந்ததை நினைத்து அவள் வெட்கப்பட்டாள்.

05.10.1987 காலை

பருத்தித்துறையில் கைதான பதினேழு விடுதலை புலிகளும் பலாலி இந்தியப் படை முகாமில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

கொழும்புக்கு அவர்களைக் கொண்டு செல்வதென்பதில் ஜெயவர்த்தனாவின் முடிவு இறுக்கமாக இருந்தது.

மாவீரன் புலேந்திரன் , சிங்கள இனவெறியர்களின் கண்ணில் மண்ணைத் தைத்தான் . தமிழ் மண்ணான திருகோணமலையைப் பறிக்க முனைந்த சிங்களக் காடையர்களை ஓட ஓட விரட்டியவன் புலேந்திரன் . எப்படியும் கொழும்புக்குக் கொண்டு சென்று ஆசை தீர அவனைச் சித்திரவதை செய்து சாகடிக்க வேண்டும் என்று அவர்கள் துடித்தார்கள் .

விடுதலைப் புலிகள் பொதுமன்னிப்பளிக்கப்பட்டவர்கள் என்பதும் , அவர்களைக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு செல்வது உடன்படிக்கைக்கு முரணானது என்பதும் புலிகளின் நிலைப்பாடு.

பலாலியில் அடைக்கப்பட்டிருந்த லெப். கேணல் குமரப்பாவும், புலேந்திரனும், மேஜர் அப்துல்லாவும் ஏனைய பதின்நான்கு புலிகளும் கொண்டிருந்த உறுதி வைரமானது.

‘’கொழும்புக்கு கொண்டு சென்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்” என்று அவர்கள் சிறிலங்கா அரசையும் – இந்திய அரசையும் எச்சரித்திருந்தார்கள்.

பலாலி முகாமில் ரகுவப்பாவும், பழனியும் நெஞ்சில் பழைய நினைவுகள் அலைபாய….

வசந்தி கண்முன் வருகிறாள்……

அன்று –

கடலில் தனியாக நீந்திக் கரை சேர்ந்த விடுதலைப் புலி வசந்தி , பின்பு ஒரு நாள் தன் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் கழுத்தில் குண்டுபட்டு – உடலை அசைக்க முடியாதவளாக – இன்று படுத்த படுக்கையாக …..

கொழுத்த கடலலைகளை உதைத்துத் தள்ளி வசந்தி அன்று நீந்தியதை ரகுவப்பா நினைவுக்குக் கொண்டுவந்தான் …

காலக்காற்று எப்படியெல்லாம் மாறி மாறிச் சுழல்கின்றது.

எத்தனயோ புலிகளைக் கரையேற்றிய ரகுவப்பாவும், பழனியும் கடலிலே கைதாகி இன்று பலாலி முகாமில் அடைபட்டுக் கிடக்கின்றார்கள் .

பதினேழு பேரில் –

திருமணமான புலிகள் மூவர் குமரப்பா, புலேந்திரன், கரன்….

குமாரப்பாவுக்குப் போன திங்கள் தான் திருமணம் நடந்தது…. மூன்று திங்களுக்கு முன்பு புலேந்திரனின் திருமணம்…. கரன் திருமணமாகி குழந்தைகளும் குடும்பமுமாய்….

பகல் 11 மணி ஆயிற்று.

பழனியின் மனதில் புலிகளை வழக்கமாகப் படகில் ஏற்றிக் கொண்டு புறப்படும் போது – அவர்களைப் பார்த்துக் கூறும் அந்தப் பழகிப் போன சொற்கள் நினைவுக்கு வந்தன;

‘’நாங்கள் இருக்கிறம் – பயப்பிடாதேங்கோ – அசையாதேங்கோ – என்ன நடந்தாலும் குப்பியைக் கடிச்சுப் போடாதேங்கோ ….”

பழனி நினைவிலிருந்து முழுமையாக மீளவில்லை….

அவர்கள் தங்கியிருந்த அறையின் கண்ணாடி யன்னல்கள் உடைந்து நொருங்கி விழும் கொடிய ஓசை காதைப் பிழந்தது. சிறிலங்காப் படை வெறியர்கள் ‘’திமு திமு’’ என்று உள்ளே துப்பாக்கிகளோடு பாய்ந்தார்கள்.

எதிர்பார்த்ததுதான்……

வெறுங் கைகளோடிருந்த புலிப்படை முரட்டுத்தனமான ஆயுத பாணிகளைப் புயலின் வீச்சில் மோதிற்று. எதிரிகள் கடுமையாக தாக்கப்பட்டார்கள்.

சாவதென்று முடிவு செய்து விட்ட வீரனின் வெறுங்கை சம்பளத்துக்கு படைவீரனாக இருப்பவனின் துப்பாக்கியை விட வலிமையானதே.

‘குப்பியைக் கடியுங்கோடா’ ….. என்று கத்தினான் புலேந்தி.

நொடியில் – விடுதலைப் புலிகளின் பதினேழு உடல்கள் சிங்களப் படை வண்டியில் தூக்கி வீசப்பட்டன.

பன்னிரண்டு பிணங்களாக ……ரகுவப்பாவும் பழனியும் கூடத்தான்.

வெளியீடு :களத்தில்  இதழ் (08.10.1997) 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply