தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் குரலாக ஒலித்த மாமனிதர் நடராஜா ரவிராஜ்.!

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்து 10.11.2006 அன்று நாடாளுமன்றம் சென்றுகொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தால் சுடபட்டு படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணியும், யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
வாழ்க்கைக் குறிப்பு…..!
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.
அரசியலில் இணைவு……!
ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.
1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார்.
2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.
மறைவு……!
நவம்பர் 10, 2006 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ரவிராஜ் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் அவர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.
மாமனிதர் விருது….!
தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கௌரவித்துள்ளார்.
வரலாற்றில் நிலைத்து விட்ட ரவிராஜ்…..!
எமது இளந்தலைமுறையின் விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த 4 ஆண்டுகளில் எமது அரசியல் களம் வேகமான, மோசமான பல மாற்றங்களை அடைந்து, தற்போது இந்நாட்டில் தமிழினத்தின் இருப்பே ஒரு கேள்விக்குறியாக மாறியி ருக்கிறது.
இப்போது ரவிராஜ் உயிரோடிருந்திருந்தால் எமக்கு நல்லதொரு அரசியல் தலைமையை வழங்கியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இறுக்கமான அரசியல் சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் பாதையில் தனக்கேயுரித்தான ஆளுமையுடன் ஒரு ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்து, போராடும் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.
1962ஆம் ஆண்டு ஆடி மாதம் 25ஆம் திகதி ஆசிரியர்களான நடராஜா மங்களேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ரவிராஜ். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், பின் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும் கல்வி கற்று, அதன்பின் சட்டக் கல்லூரியில் பயின்று 1989ஆம் ஆண்டு சட்டத்தரணியாகக் கொழும்பில் தனது பணியைத் தொடங்கினார். அக்காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான அப்பாவித் தமிழ் இளைஞர்களை மீட்பதற்கு தனது சட்டப்புலமையைப் பயன்படுத்தினார்.
இதனை விட அவர்களுக்கு ஆதரவளித்து வழிகாட்டுவதிலும் கொழும்பில் முன்னின்றுபாடு பட்டு வந்தார். இப்பணியில் அவர் பெற்ற கசப்பான அனுபவங்கள் யாவும் இயல்பாகவே இனப்பற்று மிகுந்திருந்த அவரது உள்ளத்தை மேலும் உரமாக்கின. தமிழரின் உரிமைகளை வென்றெடுக்கும் அரசியல் போராட்டக் களத்துக்கு உந்தித்தள்ளவும் இவை காரணிகளாக அமைந்தன. 2001ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர முதல்வராகப் பதவியேற்றது முதல் தமிழர் அரசியலில் அவர் பிரகாசிக்கத் தொடங்கினார். போர்ச் சூழலில் நலிவுற்றிருந்த மாநகர சபையின் பணிகளை மீளக் கட்டியெழுப்புவதில் மும்முரமாக ஈடுபட்டார். அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். பின் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
மாமனிதர் ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலம் வெறும் 5 ஆண்டுகள்தான். எனினும், அக்குறுகிய காலப்பகுதியில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் செய்யமுடியாத பணிகளை அவர் ஆற்றியிருந்தார். இதனை எல்லோரும் அறிவர். எத்தகைய வேலைப்பளு இருந்தாலும் மாதாந்தம் சாவகச்சேரியிலுள்ள அவரது இல்லமான ராஜ் அகத்தில் திரளும் மக்களைச் சந்திப்பதற்கு அவர் ஒருபோதும் தவறியதில்லை.
மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதுடன், பிரதேசத்திலுள்ள கல்விமான்களதும், முதியோர்களதும் ஆலோசனைகளைச் செவிமடுத்து அதன்வழியே, தனது பணிகளைச் செய்து வந்தார். இன்னொரு ஹிரோஷிமா என ரணில் விக்கிரமசிங்கவினால் வர்ணிக்கப்பட்ட அழிந்து போன சாவகச்சேரி நகரத்தை மீளக் கட்டியெழுப்புவதிலும், தென்மராட்சிப் பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றுவதிலும் முன்னின்று உழைத்தார். துன்பப்படுவோருக்குத் தானாகவே முன்வந்து உதவும் பண்பைக் கொண்டிருந்தார். இதனால் தான் அவர் குறுகிய காலத்திலேயே எல்லோராலும் விரும்பப்படும் ஒரு தலைவரானார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும், அதற்கான நியாயங்களையும் மக்கள் அனுபவித்துவந்த சொல்லொணாத் துன்பங்களையும் சிங்கள மக்க ளுக்கும், சர்வதேசத்திற்கும் உரிய முறையில் கொண்டு சென்றார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் அவற்றினை மிக லாவகமாகக் கையாண்டு தனது கருத்துக்களைக் கேட்போர் மனதில் உறைக்கவும், உணரவும் வைத்தார். தமிழர் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார். குறிப்பாகச் சிங்கள ஊடகங்களை மிகச் செம்மையான முறையில் பயன்படுத்தி தமிழர் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார்.
இவரது இந்தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்பதற்குரிய முதன்மைக் காரணியாக இருந்தது எனப்பரவலாகக் கருதப்பட்டது.தெற்கிலுள்ள சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் அவரை விடுதலைப் புலியாகவே கருதினர். தமிழர் உரிமைக்காகப் போராடுபவர்கள் சிங்கள மக்களின் விரோதிகள் என்ற சிங்கள கோட்பாட்டாளரின் கூற்றைப் பொய்யென்று சிங்கள ஊடகங்களினூடாக எடுத்துக்கூறி, இனங்களுக்கிடையிலான நல்லுறவை ரவி ராஜ் வளர்த்து வந்தார்.
மனித உரிமைகள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த ரவிராஜ் மனித உரிமை அமைப்புகளில் இணைந்து இலங்கையிலுள்ள சகல மக்களதும் உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்தார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு போர் மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அவர் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையின் கீழ் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென நம்பினார்.
தமிழர் பிரச்சினைக்கு யுத்தம் மூலம் தீர்வு காணமுடியாது என ராவிராஜ் தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துக் கூறி வந்ததால் தான் அவர் கொல்லப்பட்டார் எனக் கருதிய தென்னிலங்கை சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் அவரது புகழுடலை விகாரமாதேவி பூங்காவுக்குச் சுமந்து சென்று யுத்தம் பிரச்சினைக்குத் தீர்வாகாது எனக் கோஷமெழுப்பினர். கொழும்பில் நடந்த அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர். இது ரவிராஜ் இன உணர்வுள்ள ஒரு தமிழனாகவும், நாட்டுப்பற்றுள்ள ஒரு இலங்கையராகவும் திகழ்ந்தமையை எடுத்துக் காட்டியது.
என் அப்பாவை இழந்து துன்பத்தில் வீழ்ந்து விட்டோம் எல்லோரும் இப்போது வருகிறார்கள். அப்பாவின் உடல் புதைக்கப்பட்டு விடும். அத்தோடு எல்லோரும் மறந்து விடுவார்கள். இந்த அர்த்தமுள்ள வார்த்தைகள் ரவிராஜின் இறுதி நிகழ்வின்போது அவரது மகள் பிரவீனாவால் கூறப்பட்டவை. அவர் கூறியது போல ரவிராஜை மட்டுமல்ல தமிழ்மக்களின் விடிவுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து உடன் பிறப்புக்களையும் கூட நாம் மறந்து விட்டோம். இவ்வாறே இன்றைய நிலைமைகள் தமிழர்களின் விடியலை நேசிக்கும் ஒவ்வொருவரையும் எண்ணவும், ஏங்கவும் வைக்கின்றன.
சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திரநாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று கூறப்பட்ட வார்த்தைகள். தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் ரவிராஜ் என்றும் நிலைத்திருப்பார் என்பதையே உணர்த்தி நிற்கின்றன.
மாமனிதர் ரவிராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றபோது.!



தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”