தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான பாலா அண்ணா பேசுகிறார்!

You are currently viewing தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான பாலா அண்ணா பேசுகிறார்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான பாலா அண்ணா பேசுகிறார்.

இந்த வரலாற்றுத்தொடர் , தென்கிழக்காசிய வட்டகையின்,தமிழீழத்திற்கான தற்போதய நெருக்கடியிலிருந்து நாம் மீண்டுவருவதற்கு அல்லது சிக்கிவிடாமல் இருப்பதற்கு எம்மை தயார்ப்படுத்தும். வழிகாட்டும்
அந்த வரலாற்றுக்‌ காலகட்டத்தில்‌, அந்த மனிதரிடம்‌ தான்‌ தமிழ்நாட்டை ஆட்டிப்‌ படைக்கும்‌ அரசியல்‌ அதிகாரம்‌ இருந்தது. அரசியல்‌ அதிகாரத்துடன்‌ பண பலமும்‌ இருந்தது. இல்லாதோருக்கு வாரி வழங்கும்‌ மன வளமும்‌ இருந்தது. ஏழை மக்கள்‌ அவரை ஓரு தெய்வமாகப்‌ பூசித்தனர்‌. மக்கள்‌ திலகமென தமிழுலகம்‌ அவரைப்‌ போற்றியது. அவர்‌ ஒரு அபூர்வமான மனிதர்‌. அதிசயமான குணவியல்புகள்‌ கொண்டவர்‌. நெஞ்சில்‌ உறுதியும்‌, நேர்மையும்‌ கொண்ட ஒரு உன்னதமான மனிதாபிமானி. அவரிடம்‌ ஒரு புதுமையான மனிதம்‌ இருந்தது. அந்த மனிதப்‌ பண்பு மனிதர்களைக்‌ கவர்ந்து இழுக்கும்‌ சக்தி பெற்று விளங்கியது. அவர்‌ மிகவும்‌ கவர்ச்சி மிக்க தலைவராக விளங்கினார்‌. அவர்தான்‌ எம்‌.ஜி.ஆர்‌ என அனைவராலும்‌ அன்பாக அழைக்கப்படும்‌ தமிழகத்தின்‌ முன்னாள்‌ முதலமைச்சர்‌ திரு. எம்‌.ஜி.இராமச்சந்திரன்‌ அவர்கள்‌. எம்‌.ஜி.ஆர்‌ அவர்களின்‌ பெருமை பற்றி நான்‌ நிறையக்‌ கேள்விப்பட்டிருக்கின்றேன்‌. அவரது திராவிட இயக்கப்‌ பின்னணி பற்றியும்‌, கலை உலக, அரசியல்‌ உலக வாழ்க்கை பற்றியும்‌ அறிந்திருக்கின்றேன்‌. ஆயினும்‌ அவரை சந்தித்துப்‌ பழகும்‌ வாய்ப்புக்‌ கிட்டுமென நான்‌ கனவு கூட கண்டதில்லை. என்றாலும்‌ அந்த வாய்ப்பு கிட்டத்தான்‌ செய்தது. எதிர்பாராத விதமாக எம்‌.ஜி.ஆருக்கும்‌ விடுதலைப்‌ புலிகள்‌ அமைப்பிற்கும்‌ மத்தியில்‌ ஒரு உறவு பிறந்தது. அது ஒரு வரலாற்று உறவாக மலர்ந்தது.
தலைவர்‌ பிரபாகரனது புரட்சிகரமான வாழ்வும்‌, வீர விடுதலை வரலாறும்‌ எம்‌.ஜி.ஆரை வெகுவாகக்‌ கவர்ந்தது. அவர்கள்‌ மத்தியிலான உறவு நல்லுறவாக வளர்ந்து, நட்புறவாகப்‌ பரிணமித்தது. பிரபாகரன்‌ தலைமையில்‌ முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்‌ போராட்டத்திற்கு தன்னாலான உதவிகளை வழங்க எம்‌.ஜி.ஆர்‌ முன்வந்தார்‌. பல வழிகளில்‌ உதவியும்‌ செய்தார்‌. அவரது பேருதவிகள்‌ எமது விடுதலை இயக்கத்தின்‌ வளர்ச்சியிலும்‌ விரிவாக்கத்திலும்‌ என்றுமில்லாத ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தின.
எம்‌.ஜி.ஆர்‌ அவர்கள்‌ எமது விடுதலைப்‌ போராட்டத்திற்கு எந்த வழிகளில்‌, எப்படியாக உதவினார்‌? எத்தகைய ஆபத்தான எதிர்விளைவுகளையும்‌ பொருட்‌படுத்தாது எப்படியெல்லாம்‌ துணிந்து அவர்‌ காரியங்களை சாதித்தார்‌? எமது இயக்கத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள்‌, நெருக்குவாரங்களிலிருந்து எவ்வாறு எமக்கு கைகொடுத்து உதவினார்‌? இப்படியான பல விடயங்கள்‌ காலத்தால்‌ சாகாத நினைவுகளாக எமது போராட்ட வரலாற்றில்‌ பதிவு செய்யப்பட வேண்டியவை. எம்‌.ஜி.ஆர்‌ அவர்களை விடுதலைப்‌ புலிகள்‌ இயக்கம்‌ சார்பில்‌ முதன்முதலாக சந்தித்து உரையாடும்‌ வாய்ப்பு எனக்குக்‌கிட்டியது. அதனைத்‌ தொடர்ந்து, தனித்தும்‌, தலைவர்‌ பிரபாகரனுடனும்‌ பல சூழ்நிலைகளில்‌ முதலமைச்சரை சந்தித்து உறவாடும்‌ அரிய சந்தர்ப்பங்களும்‌ எனக்குக்‌ கிடைத்தன. அவற்றை எல்லாம்‌ உண்மை வழுவாது சுருக்கமாக இங்கு பதிவு செய்துள்ளேன்‌. தமிழீழ விடுதலை வரலாற்றில்‌ ஆர்வமும்‌ அக்கறையும்‌ கொண்ட அனைவருக்கும்‌ இக்‌குறிப்புகள்‌ பயன்படும்‌ என்பது திண்ணம்‌. முதன்‌ முதலாக தமிழக முதல்வர்‌ எம்‌.ஜி.ஆர்‌ அவர்களை சந்தித்த பின்னணி ஒரு சுவாரஸ்யமான கதை.
1984ம்‌ ஆண்டு, ஏப்ரல்‌ மாதம்‌. அப்பொழுது நானும்‌ எனது மனைவி அடேலும்‌ சென்னை நகரப்‌ புறத்திலுள்ள திருவான்மையூரில்‌ விடுதலைப்‌ புலிப்‌ போராளிகளுடன்‌ வசித்து வந்தோம்‌. எமது இயக்கத்தின்‌ தலைவர்‌ பிரபாகரன்‌ அவர்களும்‌, மூத்த தளபதிகள்‌ சிலரும்‌, போராளிகளும்‌ எமது இருப்பிடத்திற்கு சமீபமாக தங்கியிருந்தனர்‌. இந்திய மத்திய அரசு இரகசியமாக ஒழுங்கு செய்த இராணுவப்‌ பயிற்சி முடிந்தபோதும்‌, தமிழக நாட்டுப்‌ புறங்களில்‌ பயிற்சிப்‌ பாசறைகளை நிறுவி, புதிய போராளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அடையாறில்‌ அமையப்பெற்ற விடுதலைப்‌ புலிகளின்‌ அரசியல்‌ தலைமையகத்தில்‌ நான்‌ பணிபுரிந்து வந்தேன்‌.
அந்தக்‌ காலகட்டத்தில்‌, விடுதலைப்‌ புலிகள்‌ மட்டுமன்றி மற்றைய போராளி அமைப்புகளும்‌ சென்னையைப்‌ பிரதான பின்தளமாகக்‌ கொண்டு இயங்கி வந்தன. தமிழீழ விடுதலை இயக்கம்‌ (ரெலோ), ஈழ மக்கள்‌ புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்‌.எல்‌.எவ்‌), தமிழீழ மக்கள்‌ விடுதலை அமைப்பு (புளொட்‌), ஈழ விடுதலை அமைப்பு (ஈரோஸ்‌) ஆகியன, இந்திய இராணுவப்‌ பயிற்சியை முடித்துக்‌ கொண்டூ தமிழ்நாட்டில்‌ செயற்பட்டு வந்தன. பிளவுபட்டு, பிரிந்து நின்ற போராளி அமைப்புக்களை ஒரே இலட்சியத்தில்‌, ஒரே அணியாக ஒன்றிணைத்தால்‌ தமிழீழ விடுதலைப்‌ போராட்டம்‌ பலப்படும்‌ என தமிழ்‌ மக்கள்‌ மத்தியில்‌ அவ்வேளை பரவலாக கருத்தொற்றுமை நிலவியது. பல்வேறு வட்டாரங்களிலிருந்து ஒற்றுமை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில்‌ வசித்த ஈழத்‌ தமிழ்‌ பிரமுகர்கள்‌ சிலர்‌ சென்னைக்கு வருகை தந்து விடுதலை அமைப்புக்களின்‌ தலைவர்களைச்‌ சந்தித்து ஒற்றுமையை வலியுறுத்தினர்‌. தமிழீழ விடுதலைப்‌போராட்டத்தில்‌ ஆர்வமும்‌ அக்கறையும்‌ கொண்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும்‌ இந்த ஒற்றுமை முயற்சியில்‌ தீவிரமாக ஈடுபட்டனர்‌. 1983ம்‌ ஆண்டு ஜுலையில்‌ தமிழர்களுக்கு எதிராக சிங்களக்‌ காடையர்களால்‌ கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான இன ஒழிப்புக்‌ கலவரத்தை அடுத்து தமிழ்நாடு எங்கும்‌ தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி கிளர்ந்தது. என்றுமில்லாத வகையில்‌ தமிழின உணர்வு மேலோங்கி நின்றது. தமிழ்நாட்டில்‌ தஞ்சம்‌ புகுந்திருந்த போராளி அமைப்புகள்‌ மீது அனுதாபமும்‌ ஆதரவும்‌ நிலவியது. ஈழ விடுதலைப்‌ போராட்டத்திற்கு ஆதரவு நல்கி, தமிழ்நாட்டுத்‌ தமிழரின்‌ நல்லெண்ணத்தைப்‌ பெற்றுவிட வேண்டும்‌ என்பதில்‌ தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்‌ மத்தியில்‌ போட்டியும்‌ நிலவியது. இந்தச்‌ சூழ்நிலையில்தான்‌ ஒரு விசித்திரமான சம்பவம்‌ நிகழ்ந்தது. அப்பொழுது திரு.எம்‌.ஜி.இராமச்சந்திரன்‌ அவர்கள்‌ தமிழ்நாட்டின்‌ முதலமைச்சராக பதவி வகித்தார்‌. ஈழ விடுதலை அமைப்புகள்‌ ஒன்றுபட வேண்டும்‌ என்பதை வலியுறுத்தி வந்த அவர்‌, விடுதலை அமைப்புக்களின்‌ தலைவர்களுக்கு ஒரு பகிரங்க அழைப்பையும்‌ விடுத்தார்‌. ஒரு குறிப்பிட்ட நாளில்‌ ஈழ விடுதலை அமைப்புக்களின்‌ தலைவர்கள்‌ தம்மை சந்திக்குமாறு வேண்டிக்கொண்டார்‌. திரு.எம்‌.ஜி.ஆர்‌ அவர்களின்‌ இந்த அழைப்பை தமிழ்நாட்டுத்‌ தினசரிகள்‌ முக்கியத்துவம்‌ கொடுத்துப்‌ பிரசுரித்தன.
இந்த அழைப்பு விடுக்கப்பட்ட மறுதினம்‌ திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ தலைவர்‌ திரு.மு.கருணாநிதி அவர்களிடமிருந்து இன்னொரு அழைப்பு வந்தது. திரு.எம்‌.ஜி.ஆர்‌ அவர்கள்‌ குறிப்பிட்ட தினத்திற்கு முதல்நாள்‌ தம்மை சந்திக்குமாறு ஈழ விடுதலை அமைப்புகளின்‌ தலைவர்களுக்கு திரு.கருணாநிதி வேண்டுகோள்‌ விடுத்தார்‌. கலைஞரின்‌ அழைப்பினை தி.மு.க. பத்திரிகைகள்‌ முக்கியமளித்துப்‌ பிரசரித்தன.
ஈழ விடுதலை இயக்கங்களின்‌ ஒற்றுமை முயற்சியில்‌ தமிழ்நாட்டின்‌ இருபெரும்‌ தலைவர்களும்‌ போட்டியில்‌ இறங்கியது எமக்கு ஒரு சிக்கலையும்‌ சங்கடத்தையும்‌ ஏற்படுத்தியது. தமிழ்நாட்டு அரசியலில்‌ தலையிடுவதில்லை என்பது விடுதலைப்‌ புலிகளின்‌ நிலைப்பாடாக இருந்தது. தமிழ்நாட்டு அரசியலில்‌ பக்கசார்பற்ற நிலையைப்‌ பேணுவதும்‌ எமது கொள்கையாக இருந்தது. அப்படியிருக்கும்‌ பொழுது திராவிட இயக்கத்தின்‌ இருபெரும்‌ தலைவர்கள்‌ மத்தியில்‌ எழுந்துள்ள இப்போட்டி எமக்கு ஒரு புதிய சவாலாக அமைந்தது. திரு. பிரபாகரன்‌ அவர்களுடன்‌ இவ்விடயம்‌ குறித்து கலந்துரையாடினேன்‌.
கலைஞரின்‌ அழைப்பை ஏற்று அவரைச்‌ சந்தித்தால்‌ எம்‌.ஜி.ஆரைப்‌ பகைக்க நேரிடும்‌, கலைஞரின்‌ அழைப்பை நிராகரித்து, எம்‌.ஜி.ஆரை சந்தித்தால்‌ கலைஞரைப்‌ பகைக்க நேரிடும்‌.” இவ்விரு தலைவர்களினதும்‌, அவர்கள்‌ தலைமை தாங்கும்‌ அரசியல்‌ இயக்கங்களினதும்‌ ஆதரவும்‌ அனுதாபமும்‌ எமக்கு அவசியம்‌, எமது விடுதலைப்‌ போராட்டத்திற்கு அவசியம்‌. ஆகவே பக்க சார்பு நிலையெடுத்து யாரையும்‌ பகைத்துக்‌ கொள்ள நாம்‌ விரும்பவில்லை. அத்துடன்‌ எமக்கு இன்னொரு பிரச்சினையும்‌ இருந்தது. எமது இயக்கத்‌ தலைமையின்‌ பாதுகாப்புப்‌ பிரச்சினை அது. அக்‌ காலகட்டத்தில்‌ போராளி ஆமைப்புகள்‌ மத்தியில்‌ முரண்பாடும்‌, பகைமையும்‌ நிலவியது. குறிப்பாக விடுதலைப்‌ புலிகளுக்கும்‌, புளொட்‌ இயக்கத்திற்கும்‌ மத்தியில்‌ மோதல்‌ வெடிக்கும்‌ அளவிற்கு பகைமை இருந்தது. ஏற்கனவே, சென்னையிலுள்ள பாண்டி பஜாரில்‌ புளொட்‌ தலைவர்‌ உமா மகேஸ்வரனுக்கும்‌, பிரபாகரன்‌ அவர்களுக்கும்‌ மத்தியில்‌ நிகழ்ந்த துப்பாக்கிச்‌ சூட்டுச்‌ சம்பவத்தை அடுத்து, இரு அமைப்புகள்‌ மத்தியிலும்‌ விரோதம்‌ முற்றியிருந்தது. அப்படியான சூழ்நிலையில்‌ ஈழ விடுதலை அமைப்புகளின்‌ தலைவர்கள்‌ ஒரே இடத்தில்‌ ஒன்றாகக்‌ கூடுவது என்பது சாத்தியமற்றது. ஆபத்தானதும்‌ கூட. ஒற்றுமையை வேண்டி நின்ற தமிழக அரசியற்‌ தலைவர்களுக்கு எம்மிடையே நிலவிய முரண்பாடுகள்‌, பகைமை உணர்வுகள்‌ பற்றி எடுத்து விளக்கி புரிய வைப்பதும்‌ சாத்தியமில்லை. இந்தச்‌ சிக்கல்கள்‌ எல்லாவற்றிற்கும்‌ ஒரேயொரு தீர்வுதான்‌ இருந்தது. அதாவது கலைஞரையும்‌, எம்‌.ஜி.ஆரையும்‌ சந்திக்காமல்‌ தவிர்ப்பது. இந்த யோசனையை பிரபாகரன்‌ ஏற்றுக்‌ கொண்டார்‌.
கலைஞர்‌ கருணாநிதி அழைப்பு விடுத்த நாள்‌ வந்தது. விடுதலைப்‌ புலிகளையும்‌ புளொட்‌ இயக்கத்தையும்‌ தவிர ஏனைய அமைப்புகளின்‌ தலைவர்களான திரு.பத்மநாபா (ஈ.பி.ஆர்‌.எல்‌.எப்‌), திரு.சிறீசபாரெத்தினம்‌ (ரெலோ), திரு.பாலகுமார்‌ ஈரோஸ்‌) ஆகியோர்‌ கலைஞரைச்‌ சந்தித்தனர்‌. திரு.பிரபாகரனும்‌, திரு.உமா மகேஸ்வரனும்‌ தமது அழைப்பை ஏற்று வரவில்லை என்பது கலைஞருக்கு கவலைதான்‌. ஆயினும்‌, எம்‌.ஜி.ஆரை சந்திப்பதற்கு முன்னராக ஏனைய ஈழ விடுதலை அலமப்புகளின்‌ தலைவர்களைச்‌ சந்தித்ததை அவர்‌ ஒரு அரசியல்‌ வெற்றியாகக்‌ கருதியிருக்க வேண்டும்‌. அதனால்தான்‌ அந்த சந்திப்பை அவர்‌ ஒரு முக்கிய அரசியல்‌ நிகழ்வாக பெரிதுபடுத்தி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார்‌. மறுநாள்‌ அந்த சந்திப்பை தலைப்புச்‌ செய்தியாக புகைப்படங்களுடன்‌ தி.மு.க. பத்திரிகைகள்‌ பிரசுரித்தன.
தான்‌ குறித்த தினத்திற்கு முதல்‌ நாளே, கலைஞர்‌ கருணாநிதி மூன்று ஈழ விடுதலை அமைப்புகளின்‌ தலைவர்களைச்‌ சந்தித்து, ஒரு அரசியல்‌ நாடகத்தை மேடையேற்றி, அதனை ஒரு முக்கிய அரசியல்‌ நிகழ்வாக பத்திரிகைகளில்‌ விளம்பரம்‌ செய்தது எம்‌.ஜி.ஆருக்கு கடும்‌ சினத்தை ஏற்படுத்தியது. ஒரு நல்ல நோக்குடன்‌ தான்‌ மேற்கொண்ட ஓற்றுமை முயற்சியை சுயநல அரசியல்‌ நோக்கத்திற்காக கலைஞர்‌ குழப்ப முயற்சிக்கிறார்‌ என அவர்‌ எண்ணினார்‌ போலும்‌. அன்று மாலை, தமிழ்நாட்டு புலனாய்வுப்‌ பிரிவைச்‌ சேர்ந்த உதவிப்‌ பொலிஸ்‌ மாஅதிபர்‌ திரு.அலெக்ஸாந்தர்‌ அடையாறிலிருந்த எமது இரசியல்‌ செயலகத்திற்கு வருகை தந்து என்னைச்‌ சந்தித்தார்‌. ஜிரு.அலெக்ஸாந்தரை எனக்கு ஏற்கனவே தெரியும்‌. பல தடவைகள்‌ சந்தித்து உறவாடியதால்‌ நல்ல பழக்கம்‌. சென்னையில்‌ எழுந்த சில பிரச்சினைகளை அவர்‌ தலையிட்டுத்‌ தீர்த்து வைத்து எமக்கு உதவியவர்‌. முதலமைச்சர்‌ எம்‌.ஜி.ஆருடன்‌ நெருக்கமானவர்‌ என்பதும்‌ எனக்குத்‌ தெரியும்‌.
“கலைஞர்‌ கருணாநிதி மீதும்‌, அவரைச்‌ சந்தித்த போராளி அமைப்புகளின்‌ மீதும்‌ முதலமைச்சர்‌ கடும்‌ சினங்கொண்டிருக்கிறார்‌. அந்த மூன்று அமைப்புகளின்‌ தலைவர்களையும்‌ தான்‌ இன்று சந்திக்கப்போவதில்லை என்றும்‌ முதல்வர்‌ கூறினார்‌. விடுதலைப்‌ புலிகளை மட்டும்‌ அவர்‌ இன்று சந்திக்க விரும்புகிறார்‌. இன்று மாலை விடுதலைப்‌ புலிகளை, சென்னை பறங்கிமலையிலுள்ள தனது இல்லத்திற்கு அழைத்து வருமாறு எனக்கு அவர்‌ ஆணை பிறப்பித்து இருக்கிறார்‌” இவ்வாறு சொன்னார்‌ திரு.அலெக்ஸாந்தர்‌. எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. எதற்கும்‌ நான்‌ தலைமைப்பீடத்துடன்‌ கலந்துரையாடிய பின்னரே முடிவு எடுக்க வேண்டும்‌ என்றேன்‌. “முதலமைச்சர்‌ உங்களை ஆவலுடன்‌ எதிர்பார்த்துக்‌ காத்திருப்பார்‌. தயவு செய்து அவரை ஏமாற்றிவிட வேண்டாம்‌. நீங்கள்‌ முதலமைச்சரையும்‌ தமிழ்நாட்டு அரசையும்‌ பகைத்துக்‌ கொண்டால்‌ தமிழ்நாட்டில்‌ செயற்படுவது கடினமாக இருக்கும்‌” என்று லேசாக ஒரு எச்சரிக்கையும்‌ விடுத்தார்‌. உமா மகேஸ்வரனையும்‌ முதல்வர்‌ சந்திப்பாரா என்று கேட்டேன்‌. புலிகளின்‌ தலைவர்‌ பிரபாகரனுக்கும்‌, புளொட்டின்‌ தலைவர்‌ உமாவுக்கும்‌ மத்தியிலான பகை முரண்பாடு பற்றி அலெக்ஸாந்தர்‌ நன்கு அறிவார்‌. உமாவை பிறிதொரு தினத்தில்‌ முதலமைச்சர்‌ சந்திப்பார்‌ என்றும்‌, முக்கியமாக பிரபாகரனையும்‌ விடுதலைப்‌ புலிகளையும்‌ சந்திப்பதையே அவர்‌ பெரிதும்‌ விரும்புகிறார்‌ என்றும்‌ அலெக்ஸாந்தர்‌ சொன்னார்‌.
முதலமைச்சர்‌ எம்‌.ஜி.ஆரை சந்திப்பது தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டது. முதல்‌ சந்திப்பில்‌ எமது இயக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும்‌. எமது இயக்கத்தின்‌ போராட்ட இலட்சியத்தை எடுத்து விளக்க வேண்டும்‌. ஆகவே, முதற்‌ சந்திப்பிற்கு என்னைப்‌ போகுமாறு பிரபாகரன்‌ பணித்தார்‌. எம்‌.ஜி.ஆர்‌ வற்புறுத்தினால்‌ பின்பு தாம்‌ அவரைச்‌ சந்திக்கலாம்‌ என்றும்‌ பிரபாகரன்‌ முடிவு எடுத்தார்‌. எனது தலைமையில்‌ ஒரு குழுவாகச்‌ சென்று அன்று மாலை முதலமைச்சரை சந்திப்பதென்று முடிவாயிற்று. என்னுடன்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ மூத்த தலைவர்களில்‌ ஒருவரான பேபி சுப்ரமணியம்‌ (இளங்குமரன்‌), சமீபத்தில்‌ வீரச்சாவு எய்திவிட்ட கேணல்‌ சங்கர்‌, அன்று விடுதலைப்‌ புலிகள்‌’ பத்திரிகையின்‌ ஆசிரியராக பணிபுரிந்த திரு.மு.நித்தியானந்தன்‌ ஆகியோர்‌ எம்‌.ஜி.ஆர்‌ அன்று மாலை முதலமைச்சர்‌ எம்‌.ஜி.ஆரை அவரது இல்லத்தில்‌ சந்தித்தோம்‌. மிகவும்‌ மகிழ்ச்சியுடன்‌ காணப்பட்ட எம்‌.ஜி.ஆர்‌ எம்மை அன்புடனும்‌, பண்புடனும்‌ வரவேற்றார்‌. முதலில்‌ நாம்‌ எம்மை அறிமுகம்‌ செய்து கொண்டோம்‌. “உங்கள்‌ தலைவர்‌ பிரபாகரன்‌ வரவில்லையா? அவரைச்‌ சந்திக்க நான்‌ ஆவலாக இருப்பதாகச்‌ சொல்லுங்கள்‌” என்றார்‌. “அவர்‌ சென்னைக்கு வெளியே ஒரு பயிற்சிப்‌ பாசறைக்கு அவசர அலுவலாக சென்றிருக்கிறார்‌. அடுத்த தடவை நிச்சயமாக அவரை அழைத்து வருவோம்‌’” என்றேன்‌. “கலைஞர்‌ கருணாநிதியின்‌ அழைப்பை நீங்கள்‌ ஏன்‌ ஏற்கவில்லை? அவரை எதற்காக சந்திக்க மறுத்தீர்கள்‌?” என்று ஒரு சங்கடமான கேள்வியை எழுப்பினார்‌ எம்‌.ஜி.ஆர்‌.
“ஈழ விடுதலை அமைப்புகள்‌ ஒன்றுபட வேண்டும்‌. ஈழ விடுதலைப்‌ போராட்டம்‌ வலுப்பட வேண்டும்‌ என்ற உயரிய நோக்குடன்‌ நீங்கள்தான்‌ முதலில்‌ ஈழ விடுதலை அமைப்புகளுக்கு அழைப்பை விடுத்தீர்கள்‌. இன்றைய நாளை சந்திக்கும்‌ தினமாக குறிப்பிட்டிருந்தீர்கள்‌. ஆனால்‌ கலைஞர்‌ கருணாநிதி வீம்பிற்காக தானும்‌ ஒரு அழைப்பை விடுத்து ஒரு நாள்‌ முன்கூட்டியே ஈழ விடுதலை அமைப்புகளை சந்திக்க விரும்பினார்‌. கலைஞர்‌ விடுத்த அழைப்பு ஒற்றுமை முயற்சியை நோக்காகக்‌ கொண்டதல்ல. அவர்‌ உங்களுடன்‌ போட்டி போட்டு அரசியல்‌ இலாபம்‌ தேட முயற்சித்தார்‌. அதனால்தான்‌ நாங்கள்‌ அவரது அழைப்பை ஏற்றுக்‌ கொள்ளவில்லை” என்று விளக்கினேன்‌. முதல்வரின்‌ முகம்‌ மலர்ந்தது. “நீங்கள்‌ தமிழ்நாட்டு அரசியலை நன்கு புரிந்து வைத்திருக்கின்றீர்கள்‌” என்று சொல்லிவிட்டுச்‌ சிரித்தார்‌.
“ஈழ விடுதலைப்‌ போராளிகள்‌ ஐந்து அமைப்புகளாக ஏன்‌ பிளவுபட்டு நிற்க வேண்டும்‌. ஒரே அணியில்‌ ஒன்றுசேர முடியாதா?” என்று கேட்டார்‌ எம்‌.ஜி.ஆர்‌. “ஒற்றுமைக்கு நாங்கள்‌ எதிரானவர்கள்‌ அல்லர்‌. ஒரு உறுதியான, தெளிவான இலட்சியத்தின்‌ அடிப்படையில்தான்‌ போராளி அமைப்புகள்‌ ஒன்றுசேர முடியும்‌. ஆனால்‌ விடுதலைப்‌ புலிகளுக்கும்‌ ஏனைய அமைப்புகளுக்கும்‌ மத்தியில்‌ கருத்து வேறுபாடு நிறையவுண்டு. நடத்தையிலும்‌ வேறுபாடு உண்டு. விடுதலைப்‌ புலிகள்‌ தனித்துவமானவர்கள்‌. தனித்துவ பண்பியல்பு கொண்டவர்கள்‌. ஒழுக்கம்‌, கண்ணியம்‌, கட்டுப்பாடு போன்ற உயரிய பண்புகளை இறுக்கமாகப்‌ பேணுபவர்கள்‌. சாவுக்குத்‌ துணிந்தவர்கள்‌. எதிரியின்‌ கையில்‌ உயிருடன்‌ சிக்காதிருக்க நஞ்சுக்‌ குப்பிகளை அணிந்திருப்பவர்கள்‌.
தமிழீழத்‌ தாயக விடுதலை என்ற இலட்சியத்திற்காக தமது உயிரையும்‌ அர்ப்பணிக்கத்‌ தயாரானவர்கள்‌. இந்த அற்புதமான பண்புகளும்‌ இலட்சிய உறுதிப்பாடும்‌ ஏனைய அமைப்பினரிடம்‌ காணமுடியாது” என்று விளக்கினேன்‌. மெளனமாக ஆச்சரியத்துடன்‌ கேட்டுக்‌ கொண்டிருந்தார்‌ எம்‌.ஜி.ஆர்‌. விடுதலைப்‌ புலி வீரர்கள்‌ கடைப்பிடிக்கும்‌ பண்பியல்புகள்‌ அவரை வெகுவாகக்‌ கவர்ந்தன. உமா மகேஸ்வரனைப்‌ பற்றிக்‌ கேட்டார்‌. “அவரும்‌ புலிகள்‌ இயக்கத்தைச்‌ சேர்ந்தவராமே? தனது இயக்கம்‌ தான்‌ உண்மையான புலி இயக்கம்‌ என்று சொல்லித்‌ திரிகிறாராம்‌. பிரபாகரனுக்கும்‌ அவருக்கும்‌ என்ன பிரச்சினை?” என்று கேட்டார்‌.
“போராளி அமைப்புக்களைச்‌ சேர்ந்த அனைவரையுமே ஈழத்துப்‌ புலிகள்‌ என்று தமிழ்நாட்டு மக்கள்‌ அழைப்பது வழக்கமாகிவிட்டது. இந்தக்‌ குழப்பத்தால்‌ மற்றைய அமைப்புகள்‌ புரியும்‌ பாவம்‌, பழி எல்லாமே புலிகள்‌ இயக்கம்‌ மீது விழுந்து விடுகிறது. உமா மகேஸ்வரனும்‌ ஒரு காலகட்டத்தில்‌ புலிகள்‌ இயக்கத்தில்‌ இணைந்திருந்தவர்‌. இயக்கத்தின்‌ ஒழுக்க விதிகளை மீறி ஒரு பெண்ணுடன்‌ தகாத உறவு கொண்டதால்‌ அவர்‌ அமைப்பிலிருந்து விலக்கப்பட்டார்‌. அதனைத்‌ தொடர்ந்து அவர்‌ புளொட்‌ என்ற புதிய அமைப்பை உருவாக்கி விடுதலைப்‌ புலிகளுக்கு எதிராகச்‌ செயற்பட்டு வருகிறார்‌. புலிகளின்‌ தலைமையை அழிக்கவும்‌ முயற்சி செய்து வருகிறார்‌. அவர்‌ ஒரு கொடிய மனிதர்‌, தமிழ்‌ நாட்டிலுள்ள அவரது பயிற்சி முகாம்களில்‌ கொடுமைகள்‌ நிகழ்வதாகச்‌ சொல்லப்படுகிறது. அவை வதை முகாம்களாக மாற்றப்பட்டிருக்கின்றனவாம்‌. பல அப்பாவி இளைஞர்கள்‌ சித்திரவதைகளுக்கு ஆளாகிக்‌ கொல்லப்பட்டிருப்பதாக நம்பகமான தகவல்கள்‌ எமக்குக்‌ கிடைத்திருக்கிறது’” என்று கூறினேன்‌. “அப்படியான பேர்வழியா? எனக்கு அவர்‌ பற்றி விபரமாகத்‌ தெரியாது. அவரை நாளை சந்திப்பதாக நேரம்‌ ஒதுக்கியிருக்கிறேன்‌. அதை ரத்துச்‌ செய்ய வேண்டும்‌. இப்படியான பேர்வழியுடன்‌ எந்த உறவும்‌ வைத்திருக்கக்‌ கூடாது” என்றார்‌. “விடுதலைப்‌ புலிகளின்‌ கொள்கை என்ன? அரசியல்‌ சித்தாந்தம்‌ என்ன? விடுதலைப்‌ புலிகள்‌ கம்யூனிசத்‌ தீவிரவாதிகள்‌ என்று எனது அமைச்சர்‌ ஒருவர்‌ சொல்கிறாரே, அது உண்மையா?” என்று கேட்டார்‌ எம்‌.ஜி.ஆர்‌.
“விடுதலைப்‌ புலிகள்‌ கம்யூனிஸ்டுகள்‌ அல்லர்‌. விடுதலைப்‌ புலிகள்‌ புரட்சிவாதிகள்‌, சுதந்திரப்‌ போராளிகள்‌. தமது தாயகமான தமிழீழத்தின்‌ சுதந்திரத்திற்காகப்‌ போராடுபவர்கள்‌. சாதியக்‌ கொடுமை, பெண்‌ அடிமைத்தனம்‌ மற்றும்‌ சமூக முரண்பாடுகள்‌ நீங்கிய சமத்துவமும்‌ சமூக நீதியும்‌ நிலவும்‌ ஒரு உன்னதமான, சுதந்திரமான சமுதாயத்தைப்‌ படைக்கவே நாம்‌ போராடுகிறோம்‌.
இப்படியான எமது புரட்சிகரக்‌ கொள்கையைப்‌ புறிந்து கொள்ளாமல்‌ எம்மைக்‌ கம்யூனிசத்‌ தீவிரவாதிகள்‌ என சிலர்‌ தவறாகக்‌ கருதக்கூடும்‌. ஏழைகளின்‌ சுபீட்சத்திற்காகவும்‌, ஒடுக்கப்படும்‌ மக்களின்‌ விடிவிற்காகவும்‌ நாம்‌ ஆயுதம்‌ ஏந்திப்‌ போராடுகிறோம்‌. இரத்தம்‌ சிந்தி, உயிரை அர்ப்பணித்துப்‌ போராடுகிறோம்‌. எமது இந்த இலட்சிய உறுதியை தீவிரவாதம்‌ என்று சொல்ல முடியாது. விடுதலை வேட்கை என்று சொல்வதே பொருந்தும்‌.” என்று விளக்கினேன்‌. விடுதலைப்‌ புலிகளின்‌ கொள்கையையும்‌ சித்தாந்தத்தையும்‌ விபரிக்கும்‌ போது கடினமான, சிக்கலான சொற்பிரயோகங்கள்‌, கோட்பாடுகளைத்‌ தவிர்த்து மிகவும்‌ எளிமையாக அவர்‌ புரிந்து கொள்ளக்கூடிய மொழியில்‌ விளக்க முயன்றேன்‌.
“ஏழைகளின்‌ நண்பனாக, தொழிலாளர்களின்‌ தோழனாக, நசுக்கப்படும்‌ மக்களின்‌ நாயகனாக நீங்கள்‌ திரையுலகில்‌ நடித்து தமிழ்‌ நாட்டில்‌ சமூக விழிப்புணர்வை தட்டியெழுப்பவில்லையா? இதனால்‌ தமிழ்‌ மக்களின்‌ இதயங்களில்‌ ஒரு நிரந்தர இடத்தைப்‌ பிடிக்கவில்லையா? இன்னும்‌ தமிழகத்தின்‌ முதல்வராக உயர்‌ பதவி வகிக்கும்‌ நீங்கள்‌ ஏழைகளின்‌ துயர்‌ துடைக்க தொண்டாற்றவில்லையா? நீங்கள்‌ சினிமா உலகில்‌ சாதித்ததை விடுதலைப்‌ புலிகள்‌ நிஜவுலகில்‌ சாதிக்கிறார்கள்‌. உங்களுக்கும்‌ புலிகளுக்கும்‌ இலட்சியம்‌ ஒன்றுதானே?
கொள்கையளவில்‌ நோக்கினால்‌ உங்களையும்‌ பிரபாகரனையும்‌ சமூகப்‌ புரட்சிவாதிகள்‌ என்றுதான்‌ சொல்லவேண்டும்‌.” என்று விளக்கினேன்‌. அவர்‌ புன்முறுவலுடன்‌ தலையசைத்த போது நான்‌ கொடுத்த விளக்கம்‌ அவருக்கு நன்றாகப்‌ பிடித்துக்‌ கொண்டது என்பது தெளிவாகியது. கொடுமைகளையும்‌ ஈழத்‌ தமிழ்‌ மக்கள்‌ அனுபவித்துவரும்‌ தாங்கொணாத்‌ துன்பங்களையும்‌ எடுத்துக்‌ கூறினோம்‌. சிங்கள ஆயுதப்‌ படைகள்‌ தமிழர்‌ தாயகத்தில்‌ நிகழ்த்திய படுகொலைகளை விபரித்துக்‌ கூறிய திரு. பேபி சுப்பிரமணியம்‌, அந்தக்‌ கொடூரக்‌ காட்சிகளை சித்தரிக்கும்‌ புகைப்படங்களை எம்‌.ஜி.ஆரிடம்‌ காண்பித்தார்‌. அந்தக்‌ கொலைக்‌ காட்சிகளை படங்களில்‌ பார்த்ததுமே அவரது முகம்‌ விகாரமடைந்தது. “இதைப்‌ பார்க்க முடியவில்லையே. இப்படியெல்லாம்‌ கொடுமை செய்வார்களா?” என்று கவலையுடனும்‌ ஆச்சரியத்துடணும்‌ கேட்டார்‌. “ஈழத்தில்‌ இனக்கொலை நடக்கிறது. எமது மக்கள்‌ கொன்றொழிக்கப்பட்டு வருகிறார்கள்‌. இந்த தமிழினப்‌ படுகொலையைத்‌ தடுத்து நிறுத்தி, எமது மக்களையும்‌ மண்ணையும்‌ மீட்கவே நாம்‌ ஆயுதமேந்திப்‌ போராடுகிறோம்‌” என்று விளக்கினேன்‌.
“இலங்கையில்‌ தமிழ்‌ மக்களுக்கு எதிராக நடைபெறும்‌ கொடுமைகளை இந்திய அரசு சும்மா பார்த்துக்‌ கொண்டிருக்கிறதா? ஈழத்துப்‌ போராளிகளுக்கு ஏதோ இரகசியமாக உதவி செய்வதாகக்‌ கேள்விப்பட்டேன்‌. இராணுவப்‌ பயிற்சியும்‌, ஆயுதங்களும்‌, பணமும்‌ கொடுப்பதாகச்‌ சொல்லுறாங்க. உண்மையா?” என்று கேட்டார்‌ முதலமைச்சர்‌.
“மிகவும்‌ சிறிய அளவில்‌ உதவி புரிகிறார்கள்‌. யானைப்‌ பசிக்கு சோளப்‌ பொரி போட்ட மாதிரி. எமது அமைப்பைச்‌ சேர்ந்த இருநூறு போராளிகளுக்கு இராணுவப்‌ பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்‌. சிறிய தொகையில்‌ பழைய துருப்பிடித்த ஆயுதங்களும்‌ தந்திருக்கிறார்கள்‌. இவற்றில்‌ பல பாவனைக்கு உகந்தது அல்ல என்று எமது தளபதிகள்‌ சொல்கிறார்கள்‌. தமிழீழ மக்களின்‌ அரசியல்‌ விடுதலைக்காக இந்திய ஆரசு எமக்கு உதவி புரியவில்லை. தனது பூகோள – அரசியல்‌ நலனுக்காகவே எமக்கு உதவி புரிகிறது. அதாவது மேற்குலக அரசியல்‌ – இராணுவ வலைக்குள்‌ சிக்குண்டு நிற்கும்‌ இலங்கை அரசை தனது ஆதிக்க வியூகத்தினுள்‌ கொண்டு வருவதற்கே இந்தியா முயற்சிக்கின்றது. இந்த நோக்கை அடைவதற்காகவே ஈழத்துப்‌ போராளிகளை இந்தியா பகடைக்‌ காய்களாக பாவிக்கிறது. இந்த இராணுவப்‌ பயிற்சித்‌ திட்டத்திலும்‌ பாகுபாடு காட்டப்படுகிறது. ஆரம்பத்தில்‌ விடுதலைப்‌ புலிகளுக்கு இராணுவப்‌ பயிற்சி மறுக்கப்பட்டது. ஆயினும்‌ இந்திரா காந்தி அம்மையாரின்‌ தலையீட்டின்‌ பின்னரே இந்தப்‌ பயிற்சித்‌ திட்டத்தில்‌ நாம்‌ இணைக்கப்பட்டோம்‌. அப்படியிருந்தும்‌ எம்மைவிட மற்றைய அமைப்புகளுக்கே கூடுதலாக பயிற்சியும்‌ ஆயுதங்களும்‌ வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பணமும்‌ வழங்கப்படுகிறது. எமக்கு நிதியுதவி எதுவும்‌ வழங்கப்படவில்லை” என்று சொன்னேன்‌. “என்ன காரணத்திற்காக இப்படி பாராபட்சம்‌ காட்டுகிறார்கள்‌?” என்று கேட்டார்‌ எம்‌.ஜி.ஆர்‌.
“நாம்‌ தனித்துவமான போக்குடையவர்கள்‌ என்பது இந்திய அரசுக்குத்‌ தெரியும்‌. அத்தோடு, வரித்துக்கொண்ட இலட்சியத்தில்‌ நாம்‌ உறுதியாக நிற்போம்‌ என்பதும்‌ அவர்களுக்குத்‌ தெரியும்‌. எல்லாவற்றிற்கும்‌ மேலாக, இந்தியாவின்‌ இரகசிய திட்டங்களுக்கு இசைந்து போய்‌ வளைந்து கொடுக்க மாட்டோம்‌ என்பதும்‌ அவர்களுக்குத்‌ தெரியும்‌. ஏனைய அமைப்புகள்‌ அப்படியல்ல. அவர்களுக்கு உறுதியான இலட்சியம்‌ எதுவுமில்லை. இந்திய அரசின்‌ அழுத்தங்களுக்கு அவர்கள்‌ பணிந்து சென்று வளைந்து கொடுக்கத்‌ தயாராக இருக்கிறார்கள்‌. இதன்‌ காரணமாகவே ஏனைய போராளி அமைப்புகளை இராணுவ ரீதியாகப்‌ பலப்படுத்தி விடுதலைப்‌ புலிகளை பலவீனப்படுத்த இந்திய அரசு முனைகிறது.” என்று விளக்கினேன்‌. எல்லாவற்றையும்‌ மிகவும்‌ உன்னிப்பாகவும்‌ பொறுமையாகவும்‌ கேட்டுக்‌ கொண்டிருந்த எம்‌.ஜி.ஆர்‌, “எல்லாம்‌ எனக்குப்‌ புரிகிறது. இப்பொழுது நான்‌ என்ன செய்ய வேண்டும்‌? எத்தகைய உதவியை என்னிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள்‌?” என்று கேட்டார்‌.
“எமது விடுதலைப்‌ போராட்டத்திற்கு நீங்கள்‌ கைகொடுத்து உதவ வேண்டும்‌. இந்திய அரசு ஒழுங்கு செய்த பயிற்சி அறவே போதாது. இந்தியப்‌ பயிற்சி பெற்ற இருநூறு போராளிகளுடன்‌ சிங்கள இராணுவத்தை சமாளிப்பது மிகவும்‌ கடினம்‌. நாம்‌ தமிழ்‌ நாட்டில்‌ பயிற்சி முகாம்களை அமைத்து எமது போராளிகளுக்கு நாமே பயிற்சி கொடுக்கத்‌ திட்டமிட்டிருக்கிறோம்‌. குறைந்தது ஆயிரம்‌ போராளிகளுக்கு இராணுவப்‌ பயிற்சியளித்து அவர்களுக்கு ஆயுதம்‌ தரிக்க விரும்புகின்றோம்‌. இத்‌திட்டத்தை நிறைவு செய்ய பண உதவி செய்வீர்களா? அப்படி உதவினால்‌ அது எமது ஆயுதப்‌ போராட்ட வரலாற்றில்‌ ஒரு திருப்புமுனையாக அமையும்‌. அந்த உதவிக்காக எமது மக்கள்‌ என்றுமே உங்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்பார்கள்‌” என்றேன்‌.
“அது சரி என்னிடமிருந்து எந்தளவு பணத்தை எதிர்பார்க்கிறீர்கள்‌?’” என்று கேட்டார்‌ எம்‌.ஜி.ஆர்‌. மிகவும்‌ சங்கடமான கேள்வி. என்ன சொல்வதென்று தெரியாது தடுமாறியபடி, “பெரிய தொகையாகத்‌ தேவைப்படும்‌” என்று இழுத்தேன்‌. “அது சரி. எந்தளவு தொகையை எதிர்பார்க்‌கிறீர்கள்‌?” என்று மீண்டும்‌ கேட்டார்‌. நான்‌ சங்கடப்‌படுவதைக்‌ கண்ட கேணல்‌ சங்கர்‌ “குறைந்தது இரண்டு கோடியாவது தேவைப்படும்‌. ஆயிரம்‌ போராளிகளுக்கு பயிற்சி அளிக்க ஒரு கோடியும்‌, அந்த ஆயிரம்‌ பேருக்கும்‌ ஆயுதம்‌ தரிக்க இன்னொரு கோடியுமாக இரண்டு கோடி தேவைப்படும்‌” என்று சொன்னார்‌. “ஆக இரண்டு கோடிதானா? நாளைக்கே கொடுத்து விடுகிறேன்‌” என்று கூறிய முதலமைச்சர்‌, என்னைச்‌ சுட்டிக்காட்டி, மறுநாள்‌ இரவு பத்து மணியளவில்‌ ஒருவாகனத்துடன்‌ தனது வீட்டுக்கு வருமாறு கேட்டுக்‌கொண்டார்‌.
நாம்‌ வாயடைத்துப்‌ போனோம்‌. அந்த நேரத்தில்‌ இரண்டு கோடி இந்திய ரூபாய்‌ என்றால்‌ கனவிலும்‌ பார்க்க முடியாத தொகை. அப்பொழுது எமக்கு பயங்கரமான பணப்‌ பிரச்சினை. வெளிநாடுகளில்‌ புலம்‌ பெயர்ந்து வாழ்ந்து வந்த ஆதரவாளர்களிடமிருந்து கிடைத்த சிறு தொகைப்‌ பணத்தில்தான்‌ மிகச்‌ சிரமத்துடன்‌ முழு இயக்கமும்‌ ஓடிக்கொண்டிருந்தது. இப்படியாக திடீரென எம்‌.ஜி.ஆரின்‌ உருவத்தில்‌ அதிர்ஷ்ட தேவதை எம்‌ மீது கருணை காட்டுவாளென நாம்‌ எதிர்பார்க்கவில்லை. எம்‌.ஜி.ஆருக்கு புகழாரம்‌ பாடி, விரைவில்‌ தலைவர்‌ பிரபாகரனுடன்‌ வருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு விடை பெற்றோம்‌. வெளியே வந்ததும்‌, “இன்னும்‌ கூடுதலாகக்‌ கேட்டிருந்தால்‌ கொடுத்திருப்பார்‌ போலத்‌ தெரிகிறதே” என்று கேணல்‌ சங்கரிடம்‌ கேட்டேன்‌.
“முதலில்‌ இந்தத்‌ தொகை கிடைப்பதே பெரிய காரியம்‌. தேவை ஏற்பட்டால்‌ பின்பும்‌ உதவி கேட்கலாம்தானே?” என்றார்‌ சங்கர்‌. அவர்‌ சொன்னது எனக்குச்‌ சரியாகப்‌பட்டது. தலைவர்‌ பிரபாகரனுக்கு இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை தெரிவித்தபோது அவர்‌ முதலில்‌ நம்ப மறுத்துவிட்டார்‌. கேலி செய்கிறோம்‌ என்று எண்ணினார்‌ போலும்‌. பின்பு முழு விபரத்தையும்‌ கூறினோம்‌. மிகவும்‌ பூரிப்படைந்த பிரபாகரன்‌, சில தினங்களில்‌ எம்‌.ஜி.ஆர்‌ அவர்களை நேரில்‌ சந்தித்து நன்றி தெரிவிக்கப்‌ போவதாகச்‌ சொன்னார்‌.
மறுநாள்‌ இரவு சரியாகப்‌ பத்து மணியளவில்‌ ஒரு கயஸ்வான்‌ வண்டியுடன்‌ பறங்கிமலையிலுள்ள எம்‌.ஜி.ஆர்‌ அவர்களின்‌ வீட்டுச்‌ சென்றோம்‌. ரசூ என்ற போராளி வாகனத்தை ஓட்டி வந்தார்‌. எம்மை எதிர்பார்த்தபடி அந்தப்‌ பங்களாவின்‌ முன்‌ வாசலில்‌ எமக்காகக்‌ காத்து நின்றார்‌ முதல்வர்‌. வாகனத்தை வீட்டுக்கு ஓரமாக நிறுத்தும்படி சொல்லிவிட்டு என்னை மட்டும்‌ வீட்டுக்குள்‌ அழைத்துச்‌ சென்றார்‌. “யார்‌ அந்தப்‌ பையன்‌?” என்று கேட்டார்‌. “பிரபாகரனின்‌ நம்பிக்கைக்கு உரியவர்‌. ஒரு விடுதலைப்‌ போராளி” என்றேன்‌.
வீட்டுக்குள்‌ ஒரு லிப்ட்‌ இருந்தது. அதைத்‌ திறந்து உள்ளே வர அழைத்தார்‌. பாதாளம்‌ வரை ஒரு தளத்துக்குக்‌ கொண்டு சென்று அது திறந்து கொண்டது. அங்கு விரிந்து அகன்ற ஒரு அறை. அந்த அறை நிறையப்‌ பெட்டிகள்‌. ஒன்றின்‌ மேல்‌ ஒன்றாக, நிரையாக பத்து அடி உயரம்‌ வரை அடுக்கப்பட்டு இருந்தன. அது ஒரு பாதாளப்‌ பண அறை. அந்த அறைக்குள்‌ இரண்டு காவலாளிகள்‌ ஓரமாக ஒதுங்கி நின்றனர்‌. அவர்களிடம்‌ இரு விரல்களைக்‌ காட்டி மலையாள மொழியில்‌ ஏதோ சொன்னார்‌. பத்துப்‌ பெட்டிகள்‌ வரை எடுத்து வந்து லிப்டுக்கருள்‌ அடுக்கினார்கள்‌. பின்பு வெளியே வந்ததும்‌ பெட்டிகள்‌ எமது வாகனத்திற்குள்‌ அடுக்கப்பட்டன. அந்த நள்ளிரவில்‌ கோடிக்கணக்கான பணத்துடன்‌ சென்னை நகரம்‌ ஊடாக திருவான்மையூரிலுள்ள எமது வீட்டுக்குச்‌ செல்வதில்‌ சிக்கல்கள்‌ எழலாம்‌. சில சமயம்‌ காவல்துறையினர்‌ மறித்துச்‌ சோதனையிட்டாலும்‌ பிரச்சினை வரலாம்‌. எம்‌.ஜி.ஆரிடம்‌ விடயத்தைக்‌ கூறினோம்‌. எமக்குப்‌ பாதுகாப்பு ஒழுங்கு செய்வதாகக்‌ கூறிவிட்டு யாரிடமோ தொலைபேசியில்‌ தொடர்பு கொண்டார்‌. ஒரு சில நிமிடங்களுக்குள்‌ இரு ஜீப்‌ வண்டிகளில்‌ ஆயுதம்‌ தரித்த காவல்துறையினர்‌ அங்கு வந்து சேர்ந்தனர்‌.
முன்பாக ஒரு ஜீப்‌ வண்டியும்‌, பின்னால்‌ இன்னொன்றுமாக, ஆயுதம்‌ தரித்த காவல்துறையினர்‌ புடைசூழ நானும்‌ ரகுவும்‌, இரண்டு கோடி ரூபா அடங்கிய பெட்டிகளும்‌ சென்னை நகர வீதிகளூடாக பவனி சென்று திருவான்மையூரை அடைந்தோம்‌. எமது வீட்டில்‌ தலைவர்‌ பிரபாகரனும்‌, நிதிப்‌ பொறுப்பாளர்‌ திரு. தமிழேந்தியும்‌, கேணல்‌ சங்கரும்‌ மற்றும்‌ சில போராளிகளும்‌ எமக்காகக்‌ காத்திருந்தனர்‌. எமது இருப்பிடம்‌ வந்தடைந்ததும்‌ காவற்துறையினர்‌ விடைபெற்றுச்‌ சென்றனர்‌. பணப்‌ பெட்டிகள்‌ வீட்டின்‌ மேல்மாடியிலுள்ள எமது படுக்கை அறைக்குள்‌ எடுத்துச்‌ செல்லப்பட்டன. ஒவ்வொரு பெட்டியாகத்‌ திறந்து நூறு ரூபா நோட்டுகள்‌ அடங்கிய கட்டுகளை எடுத்து அடுக்கி எண்ணி முடிக்க விடிந்து விட்டது. அன்றிரவு தூக்கத்தைத்‌ துறந்த போதும்‌, திடீரென அதிர்ஷ்டம்‌ ஏற்பட்டு துயரங்கள்‌ தீர்ந்தது போன்ற குதூகலம்‌ எல்லோரது முகத்திலும்‌ தென்பட்டது. வெகு விரைவாக முதலமைச்சர்‌ எம்‌.ஜி.ஆரைச்‌ சந்தித்து நன்றி தெரிவிக்கப்படும்‌ என்றார்‌ பிரபாகரன்‌.
ஒரு முக்கியமான வரலாற்றுக்‌ காலகட்டத்தில்‌ நிதி நெருக்கடியால்‌ நாம்‌ திணறிக்‌ கொண்டிருந்த வேளையில்‌ எம்‌.ஜி.ஆர்‌ அவர்கள்‌ செய்த பண உதவி எமது விடுதலை இயக்கத்தின்‌ வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தது. இராணுவ அரசியற்‌ பிரிவுகளின்‌ விரிவாக்கத்திற்கும்‌, புதிய பயிற்சி முகாம்களை அமைக்கவும்‌, நவீன ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்குமே எம்‌.ஜி.ஆர்‌ அளித்த நிதியுதவியை பிரபாகரன்‌ பயன்படுத்தினார்‌.
அந்த வாரமே பிரபாகரன்‌ – எம்‌.ஜி.ஆர்‌ சந்திப்பு நிகழ்ந்தது. நானும்‌ பிரபாகரனுடன்‌ சென்றிருந்தேன்‌. பிரபாகரனின்‌ வாழ்க்கைப்‌ பின்னணி, அவரது போராட்ட வாழ்க்கை, ஈழத்து அரசியல்‌ இராணுவ நிலைமை, தமிழீழ மக்கள்‌ அனுபவித்து வரும்‌ துயரங்கள்‌, இந்தியப்‌ புலனாய்வுத்‌ துறை ஒழுங்கு செய்த இராணுவப்‌ பயிற்சித்‌ திட்டம்‌, விடுதலைப்‌ புலிகளுக்கும்‌ ஏனைய போராளி அமைப்புகளுக்கும்‌ மத்தியிலான முரண்பாடு போன்ற பல்வேறு விடயங்கள்‌ கலந்துரையாடப்பட்டன. எம்‌.ஜி.ஆர்‌ காட்டிய ஆர்வத்தைப்‌ பார்த்த பொழுது, தமிழீழ விடுதலைப்‌ போராட்டத்தில்‌ அவர்‌ மிகவும்‌ அக்கறை கொண்டுள்ளார்‌ என்பது புலனாகியது. விடுதலைப்‌ புலிகளுக்கு ஆதரவாக நின்று, ஈழ மக்களின்‌ சுதந்திரப்‌ போராட்டத்திற்கு தன்னாலான உதவிகள்‌ செய்யத்‌ தயாராக இருப்பதாக தலைவர்‌ பிரபாகரனிடம்‌ சொன்னார்‌. முதற்‌ சந்திப்பிலேயே பிரபாகரனை அவருக்கு நன்றாகப்‌ பிடித்துக்‌ கொண்டது. அன்றைய நாளில்‌ ஒரு வரலாற்று நட்புறவுக்கு அடித்தளம்‌ இடப்பட்டது.
எம்‌.ஜி.ஆர்‌ அவர்கள்‌ பழகுவதற்கு மிகவும்‌ இனிமையானவர்‌. குழந்தை உள்ளம்‌ படைத்தவர்‌. நண்பர்களுக்கு நண்பர்‌ தனக்குப்‌ பிடித்தவர்கள்‌ மீது அளப்பரிய அன்பு காட்டுவார்‌. ஒரு தடவை அவரது அன்புத்‌ தொல்லையில்‌ நான்‌ சிக்குப்பட்டு இரு வாரங்கள்‌ வரை ஒரு மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு அவஸ்தைப்பட நேர்ந்தது. இதுவொரு சுவாரஸ்யமான சம்பவம்‌. சென்று அப்பலோ மருத்துவமனையில்‌ சேர்த்து விடுங்கள்‌. எனக்கு மிகவும்‌ வேண்டியவர்‌ என்று சொல்லுங்கள்‌. நன்றாகக்‌ கவனிப்பார்கள்‌.” என்று மருத்துவரிடம்‌ சொல்லிவிட்டு, என்னைப்‌ பார்த்து, “உடனே புறப்படுங்கள்‌” என்று ஆணையிட்டார்‌.
நான்‌ பரிதாபமாகப்‌ பிரபாகரனைப்‌ பார்த்தேன்‌. சிரிப்பை அடக்கிக்‌ கொண்டு, “சீரியஸான” முகபாவனையுடன்‌ “போய்‌ வாருங்கள்‌ அண்ணா” என்றார்‌ பிரபாகரன்‌. வீட்டுக்கு வெளியே வந்ததும்‌ மருத்துவரின்‌ காரில்‌ ஏறினேன்‌. “என்ன டாக்டர்‌. வீணாக என்னை மாட்டிவிட்டீர்களே. இன்சுலின்‌ ஏற்றுமளவுக்கு நீரிழிவு நோய்‌ முற்றியிருக்கிறது. அப்படியிருந்தும்‌ நோயைக்‌ குணப்படுத்த முடியும்‌ என்கிறீர்கள்‌. உண்மையாக அப்படிக்‌ கருதுகிறீர்களா?” என்று ஆத்திரத்துடன்‌ கேட்டேன்‌.
“முதலமைச்சர்‌ சொல்வதற்கு மாற்றுக்‌ கருத்து எப்படிச்‌ சொல்வது. எதற்கு எனக்கு வீண்‌ வம்பு. அப்பலோ மருத்துவமனையில்‌ எல்லா வசதிகளுடனும்‌ ஒரு தனி அறை ஒழுங்கு செய்து தரலாம்‌. ஓய்வு எடுத்தால்‌ உங்களுக்கு நல்லது. இரண்டு வாரங்கள்‌ தானே. பொழுது போவது தெரியாது.” என்று சொல்லிவிட்டுச்‌ சிரித்தார்‌. கன்னத்தைப்‌ பொத்தி அறைய வேண்டும்‌ போல இருந்தது. எம்‌.ஜி.ஆரின்‌ அன்புத்‌ தொல்லையால்‌ அப்பலோ மருத்துவமனையில்‌ இரண்டு வாரம்‌ சிறை இருந்தேன்‌. மூன்று மாதங்கள்‌ கழிந்த பின்‌ ஒரு நாள்‌ என்னையும்‌ பிரபாகரனையும்‌ காலை உணவருந்த அழைத்தார்‌ எம்‌.ஜி.ஆர்‌. இம்முறை இன்சுலின்‌ மருந்தைக்‌ கூடுதலாக ஏற்றிவிட்டுச்‌ சென்றேன்‌.
என்னைக்‌ கண்டதுமே, “சிகிச்சை எடுத்தீர்களா? நீரிழிவு நோய்‌ குணமாகிவிட்டதா?” என்று மிகவும்‌ ஆர்வுமாகவும்‌ கருணையுடனும்‌ கேட்டார்‌ முதலமைச்சர்‌. “ஆமா சார்‌. மிகவும்‌ நன்றி” என்றேன்‌. இட்டலி, தோசை, வடை, பூரி என்று எனக்குப்‌ படைத்ததை எல்லாம்‌ வயிறு நிறைய விழுங்கினேன்‌. எம்‌.ஜி.ஆருக்கு பரம திருப்தி. விடுதலைப்‌ புலிகள்‌ தலைமை தாங்கி முன்னெடுத்து வரும்‌ தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு எம்‌.ஜி.ஆர்‌ அவர்கள்‌ நல்கிய உதவி அளப்பரியது. எல்லாவற்றையுமே முழுமையாக இங்கு ஆவணப்படுத்த முடியாதபோதும்‌, ஒரு சில முக்கிய சம்பவங்களையாவது பதிவு செய்வது வரலாற்று ரீதியாகப்‌ பயன்படும்‌ எனக்‌ கருதுகிறேன்‌. இப்பொழுது தமிழ்நாட்டில்‌ விடுதலைப்‌ புலிகள்‌ என்ற சொல்லை உச்சரிப்பதே சட்டவிரோதமான ஒரு குற்றச்‌ செயலாகக்‌ கருதப்படுகிறது. எம்‌.ஜி.ஆர்‌ அவர்கள்‌ வளர்த்துவிட்ட அ.தி.மு.க கட்சியும்‌, அதன்‌ தலைமையும்‌ இன்று விடுதலைப்‌ புலிகளுக்கு எதிராகப்‌ போர்க்‌ கொடி உயர்த்தி நிற்கின்றன. ஆனால்‌ அன்று எம்‌.ஜி.ஆர்‌ அவர்கள்‌ ஈழ மக்களின்‌ விடுதலைக்காக மிகவும்‌ துணிச்சலான காரியங்களைப்‌ புரிந்து எமக்கு கைகொடுத்து உதவியிருக்கிறார்‌. ஒரு தடவை சென்னைத்‌ துறைமுகம்‌ ஊடாக ஆயுதங்களை தருவிக்க முயன்றோம்‌. எமக்கான நவீன ஆயுதங்கள்‌ அடங்கிய கொள்கலனுடன்‌ வெளிநாட்டுக்‌ கப்பல்‌ ஒன்று சென்னைத்‌ துறைமுகம்‌ வந்தடைந்தது. துறைமுகம்‌ ஊடாக ஆயுதக்‌ கொள்கலனை வெளியே எடுக்க நாம்‌ செய்த பகீரத முயற்சிகள்‌ பயனளிக்கவில்லை. சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான்‌ உமா மகேஸ்வரன்‌ ஒழுங்குசெய்த ஆயுதக்‌ கப்பல்‌ ஒன்று இந்தியப்‌ புலனாய்வுத்‌ துறையினரால்‌ கைப்பற்றப்பட்டது. பல கோடி பெறுமதியான ஆயுதங்களை புளொட்‌ இயக்கம்‌ இழக்க நேரிட்டது. புலிகளுக்கும்‌ இந்தக்‌ கதி நேரக்‌ கூடாதென விரும்பினோம்‌. ஆயுதங்களை பறிகொடுக்காமல்‌ வெளியே எடுப்பதற்கு எம்‌.ஜி.ஆரின்‌ உதவியை நாடுவதே ஒரேயொரு வழியாக எனக்குத்‌ தென்பட்டது. பிரபாகரனும்‌ நானும்‌, எம்‌.ஜி.ஆரிடம்‌ சென்றோம்‌. நிலைமையை எடுத்து விளக்கினோம்‌.
“நீங்கள்‌ கொடுத்த பணத்தில்‌ இந்த ஆயுதங்களை வாங்கியிருக்கிறோம்‌. சென்னைத்‌ துறைமுகத்தில்‌, ஒரு கப்பலில்‌, ஒரு கொள்கலனுக்குள்‌ இந்த ஆயுதங்கள்‌ இருக்கின்றன. எப்படியாவது அதனை வெளியே எடுத்துத்‌ தரவேண்டும்‌. நீங்கள்‌ மனம்‌ வைத்தால்‌ முடியும்‌.” என்று கேட்டோம்‌. எதுவித தயக்கமோ, பதட்டமோ அவரிடம்‌ காணப்படவில்லை. “இதுதானா பிரச்சினை? செய்து முடிக்கலாம்‌” என்று கூறிவிட்டு, துறைமுக சுங்க மேலதிகாரிகளுடன்‌ தொலைபேசியில்‌ கதைத்தார்‌.

தொடரும்….

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply