தமிழீழம் உருவாக்கப்பட்டிருக்குமானால் அதனை ஆறுதல் வார்த்தையிலாவது அனுமதித்திருந்திருப்போம் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயற்பட்டாளரான, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தனிநாட்டை பெற்றிருந்தால், சர்வதேச அளவில் நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் சேதங்கள் கூட ஏற்பட்டிருக்காது .
கோட்டாபய ராஜபக்ச ஹிட்லரைப் போல மாற வேண்டும். ஆனால் அவர் அவ்வகையில் இன்னும் மாறவில்லை என்று அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். அதுவே இன்றைய பிரச்சினை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆட்சிக்கு அவர் வரமுன்னரே அவர் ஹிட்லரைப் போல செயற்படுவார் என்றே சில பௌத்த பிக்குமார்களும் கூட தெரிவித்தனர். எனினும் ஹிட்லர் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருப்பது குறைவான விடயமே என்று கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகம் தெரிவித்திருக்கின்றது.
உண்மையில் ஹிட்லரைப் போல மாறினால் இறுதியில் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலையே செய்துகொள்ள நேரிடும். ஹிட்லர் இறுதியில் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டார். ஆகவே கோட்டாபயவும் சுட்டுத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்றா இவர்கள் கூறுகின்றனர்? சில அமைச்சர்கள் இதனை இன்று அறியாமல் தெரிவிக்கின்றனர்.
இன்று கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஒட்டுமொத்த நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு தாக்கம் செலுத்துகின்றது. தனிநாடாகவே அது உருவாகின்றது.
உண்மையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் போரின்போது தனிஈழ நாட்டை பெற்று வெற்றிபெற்றிருந்தால் நாட்டிற்கு இவ்வளவு சேதமொன்று ஏற்பட்டிருக்காது.
எங்களோடு எமது நாட்டோடு இருப்பவர்கள் என்று நினைத்து விடுதலைப் புலிகள் தனிநாடாக செயற்படுவதை சரியென்றும் ஆறுதல் கூறியிருந்திருக்கலாம்.
எனினும் இப்போது போர்ட் சிட்டியை முழுமையாக தனிநாடாக சுதந்தரித்துக் கொள்வதற்காக சீனா முயற்சிக்கின்றது. கோட்டாபயவுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களும் இன்று இதனை சிந்திக்க வேண்டும் என்றார்.