தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை விடுத்துள்ள அறிக்கை 09.09.2024 .

You are currently viewing தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை விடுத்துள்ள அறிக்கை 09.09.2024 .

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையைச் சிரமேற்று இலட்சியத்தின் வழி பணி தொடர்வோம்   .

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சுவிஸ்வாழ் தமிழீழ மக்களே!

மூன்று தசாப்த காலமாக எமது விடுதலைப் போராட்டம் எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றதோடு உலகவரலாற்றிலேயே எந்தவொரு விடுதலைப் போராட்டமும் கொண்டிராத உயரிய ஒழுக்கத்துடனான முப்படைப் பரிமாணங்களையும், நடைமுறை அரசையும் உயர்ந்த தியாகங்களால் எமது தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் பெற்றுக்கொண்டு பயணித்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கமான ஆயுதப்போராட்டமானது தாயகத்தில் 2009 மே மாதம் மௌனிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையானது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளைச் சிரமேற்று தமது அமைப்புசார் செயற்திட்டங்களில் தம்மை ஈடுபடுத்தி வருவது தாங்கள் அறிந்ததே!

எமது விடுதலைப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை மறைத்து பொய்ப்பிரச்சாரத்தின் மூலம் சர்வதேச நாடுகளின் உதவியைப் பெற்று தமிழின அழிப்பினை சிங்களப் பேரினவாதம் இன்றும் தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றது. அதனடிப்படையில் காலத்திற்கேற்ப ஓரணியில் ஒன்றிணைந்து பயணிக்கும் இத் தருணங்களை மறந்து, மாவீரர் தியாகங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கவேண்டியவர்களே தம் சொந்த விருப்பு வெறுப்புகளுக்குள் ஒரு சிலரது தன்முனைப்புத் தன்மையுடன் எமது தமிழீழத் தேசியத் தலைவர் சார்ந்து வெளியிடப்படும் பொய்ப்பிரச்சாரங்களானது விடுதலைவேட்கையோடும், தம்சக போராளிகளோடும், தாம் நேசித்த மக்களோடும் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாது அடிபணியாமல் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்களின் இலட்சியங்களை சிதைக்கும் செயற்பாடாகவே நாம் பார்க்க முடிகின்றது.

கடந்த இரு வருடங்களாக தமிழீழத் தேசியத் தலைவர், அவரது துணைவியார் மதிவதனி,அவரது புதல்வி துவாரகா, புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் திரு பொட்டம்மான் போன்ற வேறு சில போராளிகளின் இருப்புச் சார்ந்து பலவதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வந்த வேளையில், அது அவர்களின் தனிப்பட்ட விருப்பாக கருதி; அவற்றிற்கு மதிப்பளித்து நாம் அமைதிகாத்து வந்ததோடு, அதுசார்ந்த எமது தொடர்ச்சியான கண்காணிப்புக்களையும் மேற்கொண்டிருந்தோம். ஆனால் கடந்த ஒருவருடமாக இப் பொய்ப்பிரச்சாரத்தின் தாக்கம் அதிகரித்து தமிழீழத் தேசியத் தலைவரின் அதிஉன்னதமான தியாகத்தினையும், அர்ப்பணிப்பினையும் மலினப்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்வதும், தலைமையின் பெயரில் பாரிய நிதிச் சேகரிப்புக்களும் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையினை, அவர்கள் சந்தித்து கலந்துரையாட வேண்டுமென கேட்டுக்கொண்டதற்கிணங்க, கடந்த காலங்களில் எமது முன்னாள் நிர்வாகமானது அவர்களுடன் ஒன்றுகூடி கலந்து பேசியிருந்த சந்திப்புக்களில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் விடயத்தில் அவர்களது நிலைப்பாடானது எமது செயற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியைத் தருவதும், எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாததுமாக உணரப்பட்டு அவ்விடயமானது எங்களால் மறுக்கப்பட்டதோடு, அவ்விடயங்களை உடனடியாகவே நிறுத்தக்கோரிய எமது கோரிக்கை முழுதாக நிராகரிக்கப்பட்டது. அத்துடன் அவர்கள் அதுசார்ந்த அடுத்தகட்டச் செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்தியமையையும் எம்மால் உணரமுடிந்தது. அதற்கமைவாக எம்மால் எமது அரங்க நிகழ்வுகளில் குறிப்பாக தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023, புத்தாண்டும் புதுநிமிர்வும் 2024, தமிழின அழிப்பு நினைவுநாள் 2024 மற்றும் ஏனைய நிகழ்வுகளிலும் மக்களுக்கான எமது நிலைப்பாட்டினைத் தெரியப்படுத்தியிருந்தோம்.

எனினும் குறிப்பிட்ட நபர்களினால் சுவிஸ் கிளையின் செயற்திட்டங்களைத் திட்டமிட்டுக் குழப்பும் வகையில் எமது பொறுப்பாளர்களை நோக்கி மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டங்களில் எமது முன்னாள் துணைப்பொறுப்பாளர் திரு. சிவநேசன் விஜயரத்தினம் (ரகுபதி) அவர்கள், தான் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை நேரடியாகச் சந்தித்ததாகவும், தேசியத் தலைவர் சுவிஸ்கிளைப் பொறுப்பாளராகத் தன்னை நியமித்த சமவேளையில் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைக்கும் பாரிய பொறுப்பும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் எந்தவொரு கால அவகாசங்களும், பதில்களும் தராமல் அவசர அவசரமாக 04.08.2024 அன்று நடைபெற்ற சந்திப்பில் தெரிவித்ததன் அடிப்படையில் திரு. ரகுராம் (ரகு) அவர்கள் தனது பொறுப்பிலிருந்து விலகியிருந்தார். சுவிஸ் கிளைக்குள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மாற்றமானது கிளைச்செயற்பாட்டாளர்களுக்கு மத்தியில் கடும் அதிருப்தியினை ஏற்படுத்தியதோடு அவர்கள் தமது எதிர்ப்புக்களையும் தெரிவித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக 10.08.2024 அன்று நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாமென்ற எமது செயற்பாட்டாளர்களின் கருத்துக்களை மீறி கலந்து கொண்ட திரு. ரகுபதி அவர்கள் இன உணர்வாளர்கள், முன்னாள் போராளிகளின் வேண்டுகோளினை ஏற்கமறுத்ததன் அடிப்படையில் சுவிஸ் காவற்துறையின் அறிவுறுத்தலில் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, 11.08.2024 அன்று மீண்டும் நிகழ்வில் கலந்துகொண்டு மேடையேற முற்பட்டபோது குழப்ப சூழல் உருவாகி மீளவும் நிகழ்விலிருந்து கடும் எதிர்ப்பையடுத்து வெளியேறினார்.

இறுதியாக கடந்த 01.09.2024 ஞாயிறு அன்று சொலத்தூர்ண் மாநிலத்தில் நடைபெற்ற சந்திப்பில் பெரும்பான்மையான செயற்பாட்டாளர்களின் ஒருமித்த பரிந்துரையின்படி 01.09.2024 தொடக்கம் 01.12.2024 வரையான காலப்பகுதியில் செயற்படக்கூடிய வகையில் இளையோர் அடங்கிய புதிய நிர்வாகக்குழு தெரிவு செய்யப்பெற்றது. இவ் இடைக்கால நிர்வாகம் தனது செயற்பாடுகளை விரைவாக முன்னெடுத்துச் செல்லும்போது அனைத்துச் செயற்பாட்டாளர்களினால் வழங்கப்பெற்ற ஆணைக்கு முரணாக அவசர அவசரமாக சந்திப்புக்கள் ஏற்பாடுகள் செய்வதும், 2009க்கு பின்னரான காலப்பொழுதில் பல சவால்களையும் எதிர்கொண்டு தலைவரின் சிந்தனையின்படி உறுதியோடு பயணிக்கும் சுவிஸ்கிளையின் செயற்பாட்டாளர்களையும் குற்றம் சாட்டுவதானது, முன்னரேயே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரலில் நடைபெறுவதாகவே இதனை கருதத் தோன்றுகிறது.

எமது செயற்பாட்டாளர்களே,

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மரபுரீதியான நிர்வாக ஒழுங்கு விதிகளை மீறி, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புமுறைமையையும் முற்றாக நிராகரித்து சுவிஸ் கிளைமீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எதிராகச் செயற்பட்ட சுவிஸ் கிளையின் முன்னாள் துணைப்பொறுப்பாளர் வி. ரகுபதி அவர்களை, எமது ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கட்டமைப்புசார் செயற்பாடுகளிலிருந்தும் உடனடியாகவே நீக்கம் செய்கிறோம். எனவே, திரு. ரகுபதி அவர்களுடனான அமைப்பு சார்ந்த சகல தொடர்புகளையும் நிறுத்திக் கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது அன்பான சுவிஸ்வாழ் தமிழீழ மக்களே!

தமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு அன்று தொடக்கம் இன்றுவரை உலகத்தமிழர்களோடு ஒன்றிணைந்து வலுச்சேர்த்தீர்கள். உங்களால் வழங்கப்பெற்ற ஒத்துழைப்பும் முழுமையான ஆதரவுமே தமிழர் உரிமைப்போராட்டத்தினை இந்தளவு தூரத்திற்கு நகர்த்திச்சென்றது.

புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் தமிழர் உரிமைப்போராட்டங்களையும், ஒற்றுமையினையும் சீர்குலைத்து, சிங்கள இனவாத அரசானது தமிழினவழிப்பையும் தனது கறைபடிந்த வரலாற்றுப்பக்கங்களையும் மறைக்க முற்படுகின்றது. இந்நிலையில் இருந்து விடுபடுவதற்கும், தாயகத்தில் வாழும் எம்தமிழ் உறவுகளை பாதுகாப்பதற்கும், எம் தாயகத்தை மீட்டெடுப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியொன்றில் இன்று நிற்கின்றோம்.

எமது போராட்டம் அறத்தின் வழி; முன்னெடுக்கப்பட்டது. நெறிதவறாமல் நேர்மையுடன் வழிநடாத்தப்பட்டவர்கள் நாம். இந்த நாட்டுச் சட்ட வரைமுறைமைக்கு அமைவாகவே எமது செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளன. ஈழத்தமிழருக்கு சுதந்திரத் தமிழீழம் ஒன்றே இறுதித்தீர்வு என்ற இலக்;கில் தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையானது எந்த சமரசத்தையும் செய்ய மாட்டாது என்பதோடு எந்தத் தருணத்திலும் எப்படியான சவால்கள் சூழ்ந்தாலும் தமிழீழ விடுதலை என்ற இலக்கில் இருந்து வழுவிச்செல்லாது இறுதி இலக்கை அடையும் வரை நம்பிக்கையோடும,; உறுதியோடும் எமது உரிமைப்போராட்டத்தினை வென்றெடுக்க நாம் தொடர்ந்தும் போராடுவோம் என்றும் உறுதி கூறுகின்றோம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தி. தீபராஜ்

இணைப்பாளர்,

நிர்வாகக்குழு சார்பாக,

தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை

ஏனைய நிர்வாகக்குழு உறுப்பினர்கள்:

இ.சகீலன் , பா.துவாரகன், இ.ஜினோதன், க.கனோஜன், சு.மகிந்தன், கா.காசியானந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை விடுத்துள்ள அறிக்கை 09.09.2024 . 1
தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை விடுத்துள்ள அறிக்கை 09.09.2024 . 2
பகிர்ந்துகொள்ள

Leave a Reply