
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரனை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் இன்று (24) இரவு சற்றுமுன்
தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமனாறு இந்து மயானத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறை காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரதேச சபை உறுப்பினரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
தொண்டமனாறு, மயிலந்தனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று (24) இரவு 7.20 மணியளவில் கண்டுள்ளனர். அத்துடன் அது தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்த்துறையினருக்கும் தகவல் வழங்கினர்.
இரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்ற காவல்த்துறையினர், அங்கு காணப்பட்ட மணிப்பையிலிருந்த (பேர்ஸ்) தேசிய அடையாள அட்டையை வைத்து இலங்கநாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர்.
அதன் பின்னர் அவரது மோட்டார் சைக்கிள், இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றை காவல்த்துறையினர் மீட்டு காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் செந்தூரனின் வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையறிந்த உறவினர்கள், செந்தூரனின் நண்பர்களுடன் தொண்டமனாறு பகுதியில் தேடி வருகின்றனர். அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரியவில்லை என்று உறவினர்கள் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப்பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.