தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் “தொழிலாளர் தினம் – 2023” பிரகடனம்!

You are currently viewing தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் “தொழிலாளர் தினம் – 2023” பிரகடனம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
மே தினச்  பிரகடனம்  – 2023

பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளால் சிங்கள இனம் வழிதவறிச்சென்று தொடர்ந்தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்துகிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையில் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள்.

இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்ந்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தக் கருத்தாதிக்கம் பாடசாலைக் கலைத்திட்டங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், கருத்தியலாக ஊடுருவி நிற்கிறது.

சிறிலங்காவில் தொடர்ச்சியாக பதவிக்கு வந்த அரசாங்கங்கள், அனைத்துவிதமான இனத்துவ பாகுபாடுகளையும் ஒழித்தலை வலியுறுத்தும் ஐ.நா. பிரகடனத்தை (ஊழnஎநவெழைn ழn வாந நுடiஅiயெவழைn ழக யுடட குழசஅள ழக சுயஉயைட னுளைஉசiஅiயெவழைn) அப்பட்டமாக மீறி வந்துள்ளன. அதே அணுகுமுறையையே தற்போதைய அரசாங்கமும் பின்பற்றி வருகிறது. அரசாங்கத்தின் அத்தகைய மீறல்கள், சட்டத்திற்கு புறம்பான முறையில் ஆட்களைக் கைது செய்தல், தடுத்துவைத்தல், படையினரால் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கள், மனிதப்புதைகுழிகள், வலிந்து காணாமற் போகச் செய்தமை, சட்டத்திற்கு புறம்பாக தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமை எனத் தொடர்ந்தன. அது இன்று கட்டமைப்புசார் இனவழிப்பாக தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது.

அரசாங்கமானது அவசரகாலச் சட்ட விதிகளின்படியும், பயங்கரவாதத் தடைச்சட்டமூலத்தின் வழியாகவும் தமிழ் மக்களைக் கைதுசெய்வதும், துன்புறுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது. அதேவேளை, இக் கொடூரமான சட்டத்தின் மூலமே கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதுடன், படையினருக்கும், காவல்துறையினருக்கும் மிதமிஞ்சிய அதிகாரத்தையும் வழங்கியுள்ளது. இவ்வதிகாரத்தைப் பயன்படுத்தி மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற பணிகளை மேற்கொள்ளும் தமிழர்கள் மீது ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிங்கள அரசு தமிழருடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, இங்கு பயங்கரவாத பிரச்சினை மட்டுமே உள்ளதாகக் கூறி, போரை முடிவுக்குக் கொண்டு வந்து 14 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், இன்றுவரை தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை தொடர்ந்தும் இருக்கிறது என்கின்ற நிலையை நாம் தக்கவைத்திருப்பதற்கான ஒரேயொரு காரணம், இந்த நாட்டின் பிரதான சட்டமாக இருக்கும் மூன்று அரசியலமைப்புக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்திருந்தமையேயாகும். இவ்வாறிருக்க, 1980 களில் இலங்கையை மையமாகக் கொண்டிருந்த அமெரிக்க – இந்திய பூகோளப்போட்டி காரணமாகவே இந்தியா தனது நலனை அடைவதற்காக தமிழர்களின ; இனப்பிரச்சினையைக் கையிலெடுத்திருந்தது. 1987 இல் இலங்கையானது, .இந்திய நலன்சார்ந்து செயற்பட தயாரான நிலையில், இந்தியா தனது தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தி, சிங்கள தரப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர், எந்த ஒற்றையாட்சிக் கெதிராக தமிழ் தரப்பை பயன்படுத்தியதோ, அதே ஒற்றையாட்சிக்குள்ளான 13 ஆம் திருத்தத்தையே தமிழ்மக்களுக்கான தீர்வாக இலங்கை அரசு முன்வைத்திருந்த நிலையில், தமிழ்த் தரப்பை; இந்தியா கைவிட்டிருந்தது.

இந்நிலையில் அப்போதிருந்த தமிழ் தரப்புகளாலும் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேர்மையான தலைமைத்துவத்தின் காரணமாக ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது. 2005 இன் பின்னர், வல்லரசுகளுக்கிடையிலான பூகோளப்போட்டி மீண்டும் இலங்கையில் தீவிரமடைந்திருந்த பின்னணியிலேயே ஒரு இனப்படுகொலையூடாக ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், இந்தியா மீண்டும் தனது ஆதிக்கத்திலுள்ள தமிழ்த் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழ் அரசியலை ஒரு துருப்புச்சீட்டாகக் கையாண்டு இலங்கை அரசோடு பேரம்பேசி வருகின்றது. இலங்கை, சீனாவின் விவகாரத்தில் இந்திய நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் செயற்படுமானால், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ் தரப்புகளை பயன்படுத்தி, தமிழரின் அரசியலை ஒற்றையாட்சிக்குள்ளான 13ஆம் திருத்தத்திற்குள் முடக்குவதற்கும் இணங்கியுள்ளது.

‘எல்லா மக்களும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். இந்நெறிமுறைகளின்படி, தமது அரசியல் நிலைப்பாட்டையும், பொருண்மியம் மற்றும் சமூக கலாச்சார விடயங்களையும் மேற்கொள்ளும் வழிவகைகளைத் தீர்மானிக்கும் உரித்துடையவர்களாக அவர்கள் இருப்பர்’  என்று வியன்னா உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பிரகடனத்தில், மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிப்பது மனிதவுரிமை மீறலாகவும், அவர்களது உரிமையினை முறைப்படி நிலைநாட்டுவதனை மறுதலிக்கும் செயல் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில்- தமிழர்கள் ஒரு தேசமாக, சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய அனைத்துத் தகைமைகளையும் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்மக்கள் தமது பொருண்மிய, சமூக, கலாசார மேம்பாட்டை மேற்கொள்வதற்கான உரிமையை, தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் மறுத்துவந்த காரணத்தாலும், தமிழ் மக்களது இருப்புக்கு ஆபத்து உருவாகி வந்ததனாலும், 1977ம் ஆண்டு, தமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தனிநாட்டினை அமைப்பதற்கு ஆதரவு வழங்கி, ஜனநாயக ரீதியில் பெருந்திரளாக வாக்களித்திருந்தார்கள்.

இந்த வகையில் தமிழ்த் தேச மக்கள் தொடர்ச்சியாக ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை 75 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வந்திருக்கின்ற நிலையிலே, 2009 இல் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரும், ஒற்றையாட்சியை நிராகரித்தும், தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தைக் கோரியுமே ஒவ்வொரு தேர்தல்களுடாகவும் தங்களது ஏகோபித்த ஆணையை வழங்கி வந்திருக்கிறார்கள்.

தமிழ்த் தேசமும் – அதன் இறைமையும் அங்கீகிக்கப்படுகின்ற தீர்வுக்குப் பதிலாக – ஒற்றையாட்சிக்குள் இருக்கக்கூடிய எந்தவொரு வகையான தீர்வுக்கும் (13 ஆம் ; திருத்தச் சட்டமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ) இணங்குவதானது, தமிழ் மக்களுடைய ஆணைக்குத் துரோகம் இழைப்பதாகவே அமையும்.
1987 ஆம் ஆண்டு முதல் சிறிலங்காவின் அரசியலமைப்பில் உட்புகுத்தப்பட்ட 13 ஆம் திருச்சட்டம் கடந்த 36 ஆண்டுகளாக முழுமையாக நடைமுறையிலிருந்து வருகின்ற நிலையிலும், தமிழ் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளும், நில ஆக்கிரமிப்புக்களும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களும் இன்று வரை நடைபெற்றே வருகின்றன.

தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை இனப்படுகொலையூடாக முடிவிற்கு கொண்டுவந்து 14 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், இலங்கையின் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது.
நீதிமன்ற கட்டளையினை மீறி, தமிழரின் தொன்மையான வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டு அங்கு பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. தமிழர் தாயகமெங்கிலும், குறிப்பாக சிங்களவர்கள், பௌத்தர்கள் இயல்பாக குடியிருக்காத பகுதிகளில் கூட, பௌத்த மத ஆலயங்கள் சிறிலங்கா அரச நிர்வாக மற்றும் இராணுவ இயந்திரங்களின் துணையுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு – இவ்வாறு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த ஆலயங்களை சூழ இருக்கும் பகுதிகளில் , தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலை திட்டமிட்டு மாற்றியமைக்கும் முனைப்போடு, சிறிலங்கா அரச ஆதரவுடன் சிங்கள குடியேற்ற திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் நிலங்களில் தமிழர்கள் காலங்காலமாக 300,000 க்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் மேய்ச்சலுக்குப் பயன்படுத்திவரும் நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, அங்கு சட்டவிரோதமான முறையில் சிறிலங்கா அரச ஆதரவோடு சோளப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் சிங்களவர்களால், தமிழர்கள் மேய்ச்சல் நிலங்களில் இருந்து துரத்தப்படுகின்றனர். உண்மையில் இந்த தமிழர்களின் பாரம்பரிய – புராதன அடையாள நிலமானது, சிங்கள பௌத்தமயமாக்கலுக்கான பகுதியாக சிறிலங்கா அரசினால் குறிவைக்கப்பட்டு, அங்கு இனப்பரம்பலை மாற்றியமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

‘மாதுரு ஓயா வலதுகரை அபிவிருத்தி திட்டம்” எனும் பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமானது – அந்தபகுதியில் பாரம்பரியமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் தமிழர்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சிங்களவர்களை குடியேற்றி இனப்பரம்பலை மாற்றவே சிறிலங்கா அரசினால் பயன்படுத்தப்படுகிறது.  .

புராதன தமிழ் சைவ வழிப்பாட்டிடமான வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரிவிலுள்ள வெடுக்குநாறி மலையினை பௌத்த புராதன பிரதேசமாக மாற்றியமைத்து பிரகடனப்படுத்தும் நோக்குடன், சிறிலங்கா அரசின் தொல்பொருட்திணைக்களம் முயற்சித்து வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையின் தையிட்டியில் மிக உயரமான பௌத்த மத தூபியானது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தனியார் காணிகளை ஆக்கிரமித்து சிறீலங்கா ஆயுதப்படைகளது துணையுடன் குறித்த பௌத்த தூபியை சட்டவிரோதமாக அமைத்துள்ளார்கள்.

இலங்கையில் நீதிமன்ற அதிகாரமும் பௌத்த அரசியல் அதிகாரத்துக்குட்பட்டதாவே இருந்துவருகின்றது. இங்கே சிறிலங்காவின் இறைமையின் உறைவிடமாக பௌத்த பேரினவாதமே இருப்பதால் வடக்கு கிழக்கு நீதிமன்றங்கள் பௌத்த அரசியல் அதிகாரம் தொடர்பான விவகாரங்களில் செயலிழந்து இருக்கின்றன.
பௌத்தம் ஓர் ஆழமான ஆன்மீகத் தரிசனம். அன்பையும் அறத்தையும் ஆசைகள் அகன்ற பற்றற்ற வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மீகத் தத்துவம்.
இந்தத் தார்மீக நெறியை மேலாகக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் சிங்களம், இனவாத விசத்தினுள்ளே மூழ்கிக்கிடக்கிறது.

1948 இல் நாடு பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்டுக்கொண்டதன் பின்னர், மாறிமாறி வரும் அரசாங்கங்கள் இனத்துவ அடிப்படையிலும், இனத்துவ பாகுபாட்டுடனான கொள்கைகளையே கடைப்பிடித்து வருகின்றன. இவ்வரசாங்கங்கள், தமிழ் மக்கள் விடயத்தில் எதுவித சகிப்பதன்மையுமின்றி, இலங்கைதீவில் அவர்கள் தனித்துவமான ஒரு தேசமாக வாழ்வதனை கட்டமைப்பு ரீதியாக சிதைத்து அழிப்பதனையே குறியாகக்கொண்டு செயற்பட்டு வருகின்றன.
தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டபோது, சிறிலங்கா அரசாங்கங்கள் தாம் கடைப்பிடித்துவரும் இனரீதியான பாகுபாட்டுடனான நிலைப்பாடு, மேற்கொண்டுவரும் இனவழிப்பு சார்ந்த நடவடிக்கைகள் மீதான கவனத்தைத் திசை திருப்பி, தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாகவும் தமிழ்மக்களை பயங்கரவாதத்திற்கு ஆதரவானவர்களாகவும் காட்டின.

2009 இல் தமிழ்மக்களின் ஆயுதப்போராட்டமானது இனவழிப்புடன் முள்ளிவாய்க்காலில் முடிவுறுத்தப்பட்டதன் காரணமாக, எதிர்த்து நிற்கும் ஆற்றலை தமிழ்மக்கள் இழந்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் திருப்தியடைந்துள்ளது. தமிழர்களைப் போலன்றி, சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேள்விக்கு உள்ளாக்காத இலங்கை முஸ்லீம்கள் மீதும் தற்போது இனவாதத்தைத் திருப்பியுள்ளது.
வியன்னா பிரகடனத்தின் 62வது பந்தியில், வலிந்து காணாமற்போகச் செய்தலை தடுப்பதற்கும், அவ்வாறான செயலைச் செய்பவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்குமாக – வினைத்திறன் மிக்க – சட்டரீதியான – நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நாடுகள், தமது ஆட்புல எல்லைக்குள் இவ்வாறான நடவடிக்கைகள் நடைபெறுவதாக நம்புவதற்கு இடமிருக்கும்போது, அவை தொடர்பில் – விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியது அந்நாடுகளின் கடமை என்பதனையும், இக்குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் சம்பந்தபட்டவர்கள் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் அப்பிரகடனம் மீளவலியுறுத்துகிறது.
இருந்தபோதிலும், சுயாதீனமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவே மனித உரிமைகள் தொடர்பான பிரகடனங்களை மீறியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கும் பொறிமுறையிலிருந்து விலகிவருகின்றது.

இவ்வருடம் பெப்பிரவரி மாதம், சிறிலங்காவின் மனிதவுரிமை ஆணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் வடமாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட தரப்புகளான – வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், தமிழ் அரசியற்கட்சியைச் சேர்ந்தவர்கள் எனப் பலரையும் சந்தித்தனர். இச்சந்திப்புகளின்போது, மேற்குறித்த 62வது பந்தியில் குறிப்பிட்டுள்ள விடயங்களுக்கு மாறாக – பழையவற்றை மறந்துவிடுமாறும், பொறுப்புகூறலை வலியுறுத்த வேண்டாம் எனவும் முன்னைய குற்றச்செயல்கள் பற்றிய விடயங்களை சிறிலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு கையாளும் எனவும், தாம் சந்தித்தவர்களிடம் பரப்புரையில் ஈடுபட்டதுடன், அழுத்தங்களையும் பிரயோகித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களும், தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் இவ்வாலோசனைகளை நிராகரித்து, சர்வதேச குற்றவியல் பொறுப்புக்கூறல் பொறிமுறையை வலியுறுத்தியபோது, சிறிலங்கா மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேற்படி ஆணைக்குழு தனது களப்பயணத்தை முடித்துக்கொண்டு வெளியிட்ட அறிக்கையில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு போன்ற உள்ளகப் பொறிமுறையினை அமைப்பதற்கு, தாம் சந்தித்த பாதிக்கப்பட்ட தரப்புகள் இணங்கிக்கொண்டதாக அப்பட்டமான பொய்யுரைத்துள்ளது. மேலும் பல தவறான தகவல்கள் அவ்வறிக்கையில் காணப்படுகிறது.

தமிழர் தேசத்தில், இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்புக்கள் தொடர்வதுடன் தமிழ்த் தேசத்தின் பொருளாதாரம் திட்டமிட்டு சூறையாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்,  இந்திய மீனவர்களுக்கு வடக்கு கடலில் சட்டரீதியாகவும் அனுமதி அளிக்க முயற்சிக்கின்றார்கள். போதிய கடல்வளம் உள்ள தமிழ்த் தேசத்தில் மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத்தான் தமிழர்கள் கடலில் கால் வைக்க முடியும் என்ற நிலையே காணப்படுகின்றது.
இலங்கை சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் தான் பெற்று கொண்ட பொதுபடுகடன்களை மீள செலுத்த முடியாது முறிவடைந்து இருக்கின்றது.

நாடு என்ற ரீதியில் பொருளாதார வங்குரோத்தை எதிர்கொண்டுள்ள பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஆகு) ஒத்துழைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு முதலாவது கட்ட நிதி உதவியும் கிடைக்கப்பெற்றுள்ளது. முதலாவது கட்ட நிதியை பெற்றுக் கொண்டவுடன் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனை விவகாரத்தில் பாராளுமன்றம் ஒருமித்து செயற்படுகிறது என்பதை  பிரதான நிலை கடன் வழங்குநர்களுக்கு காண்பிப்பதற்கே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் இனப்பிரச்சினை தோற்றம்  பெற்றதை தொடர்ந்து பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது. தமிழ் மக்களை அழிப்பதற்காக மொத்த தேசிய வருமானமும், வெளிநாட்டு அரச முறை கடன்களும் முழுமையாக  பயன்படுத்தப்பட்டன. யுத்த சூழல் தமிழர்களை மாத்திரமல்ல ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் அழித்தது, அதற்கு சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் தலைமைத்துவம் வழங்கியது.
மொத்தத் தேசிய வருமானத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு மேற்கொள்ளப்படும் ஒதுக்கீடுகளை விட இரு மடங்கு தொகைகள் பாதுகாப்புக்கென ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், அந்நிதியில் மோசடிகளும் இடம்பெற்று வருகின்றன.

பொருளாதார பாதிப்புக்கு சர்வதேச நாணய நிதியம் என்பது குறுகிய கால ஒரு தீர்வாகவே அமைய முடியும். அது நிலை பேறான தன்மையை உருவாக்கப் போவதில்லை. இலங்கை புதிய பரிமாணத்தை நோக்கி பயணிக்க வேண்டுமாயின் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்N;டயாக வேண்டும். அதனைத் தவிர்த்து சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச தரப்பின் நிதி உதவியுடன் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென பேரினவாத ஆட்சியளார்கள் இன்றும் கற்பனையில் நகர்கிறார்கள்.

சிறிலங்காவின் இனவழிப்பு யுத்தத்தால், தமிழ்த் தேசத்தின் பொருளாதாரமானது ஐம்பது வருடங்கள் பின்தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழர் தேசத்தில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை அரசு தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் நிலையில், சிறிலங்காவின் செயற்பாட்டுக்கு நிபந்;தனை எதுவுமின்றி நிதிவழங்குவது, தமிழர்களின் பொருளாதாரத்தை நசுக்கும் சிறீலங்கா அரசின் செயற்பாட்டுக்கு சர்வதேச நாணய நிதியமும் துணைபோவதாகவே உள்ளது.
இச் சூழ்நிலையில் இம் மேதினத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஏற்பாட்டில் முல்லைமாவட்டம் மல்லாவி சிவன்கோவில் வளாகத்தில் ஒன்று கூடி சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ் தேசமானது – தனது அடிப்படையான அரசியல் உரிமைகளில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள தேசத்திற்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் 2023 மே தினத்தில் வலியுறுத்திக் கூறுகின்றோம்.

• தமிழ்மக்கள் 75 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற தமிழ்த் தேச அங்கீகாரத்தையும் – அதனுடைய தனித்துவமான இறைமையையும் – சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக அனுபவிக்கக் கூடிய ‘சமஸ்டி’ அடிப்படையிலான தீர்வை அடைய இந்திய அரசும் ஏனைய நட்பு நாடுகளும்; இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் கோருகின்றோம்.
• தமிழ் மக்கள் – காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தையோ அல்லது ஒற்றையாட்சிக்குட்பட்ட வேறு எந்தவொரு தீர்வையோ தமிழினம் நிராகரிக்கிறது.

• தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்படவேண்டும்.
• இனவழிப்பு யுத்தத்தால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு ஈழத் தமிழ்த் தேசத்தை, போரால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனம் செய்து, அத்தேசத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான விசேட நிதியேற்பாடுகள் செய்யப்படவேண்டும். அத்துடன் குறித்த செயற்திட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் போன்றோர் உள்வாங்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
• பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும்.
• அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலையை வலியுறுத்துவதோடு,
• தமது உரிமைகளுக்காக போராடும் தரப்புக்களை சிறைக்குள் தள்ளி – அச்சுறுத்தி, உரிமைகளை நசுக்க ரணில் அரசால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ அல்லது அதனையொத்த எந்தவொரு சட்டத்தையோ முற்றாக எதிர்க்கின்றோம்.
• வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி  நிலைநாட்டப்பட வேண்டும்.
• தமிழ்த் தேசத்தின் விவசாயிகள், மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும். அவர்களுக்குரித்தான நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும். தொழிலாளர்கள் ஒன்றுபட்டு செயற்படக் கூடிய அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்.
• தோட்டத் தொழிலாளர்களது உரிமைகள் வழங்கப்படல் வேண்டும்.
• கடற்தொழிலாளர்கள்; தமது கடற்தொழிலை தத்தமக்குரிய கடற்பரப்பில் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்படவேண்டும். தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறிய மீன்பிடிச் செயற்பாடுகள் தடுக்கப்படல் வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கான உதவிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். அத்துடன் கடற்தொழிலாளர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும். வெளிநாட்டு மீனவர்கள் எமது கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படக்கூடாது. எமது கடற்பரப்பினுள் அத்துமீறும் இந்திய மீனவர்களது நடவடிக்கைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
• உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்னும் போர்வையில் தொழிலாளர்களின் வாழ்நாள் சேகரிப்பின் பெறுமதியை குறைக்கும் அரசின் செயற்பாடுகள் நிறுத்தவேண்டும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
2023.05.01

பகிர்ந்துகொள்ள

Leave a Reply