தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னெடுக்கும் காத்திரமான நகர்வு!

You are currently viewing தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னெடுக்கும் காத்திரமான நகர்வு!

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஏனைய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்குத் தான் தயாராக இருப்பதாக கஜேந்திரகுமார் அறிவித்துள்ளார்.

அந்த அழைப்பின் அடிப்படையில் அண்மையில், யாழ்ப்பாணத்தில் சிறீதரனின் வீட்டில் இரண்டு கட்சியின் தலைவர் கயேந்திரகுமார் மற்றும் செயலாளர் கயேந்திரன் ஆகியோர் சிறீதரனை சந்தித்திருக்கிறார்கள்.

முதலாவதாக இந்த நகர்வை வரவேற்க வேண்டும்.ஏனென்றால் இது ஏதோ ஒரு அடிப்படையில் தமிழ் ஐக்கியத்துக்கான முயற்சிதான்.

நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளின் பின்னணியில் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது.

என்பிபி அரசாங்கம் ஒரு யாப்பை மாற்றக்கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு யாப்பை அவர்கள் உருவாக்க முயற்சிக்கக்கூடும்.

அந்தத் தீர்வானது ஏற்கனவே 2015இல் இருந்து 18 வரையிலுமான காலப்பகுதியில் ஒரு புதிய யாப்பை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் முன்வைக்கப்பட்ட “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வை அடிப்படையாகக் கொண்டதாக அமையலாம் என்ற சந்தேகங்களின் பின்னணியில், கஜேந்திரகுமாரின் மேற்படி அறிவிப்பு வந்திருக்கின்றது.

அந்த யாப்புருவாக்க முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியும் உட்பட ஏனைய கட்சிகளும் பங்களிப்பைச் செய்தன.

அது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வு என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூறியது. அநுர அரசாங்கம் அந்த தீர்வு முயற்சியைத் தொடரலாம் என்ற சந்தேகம் இப்பொழுது உண்டு.

எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம் அவ்வாறு யாப்புருவாக்க முயற்சியை முன்னெடுக்கும் பொழுது தமிழ்த் தரப்பானது தன் எதிர்ப்பை வலிமையாக ஒற்றுமையாகக் காட்டவேண்டிய ஒரு தேவை எழுந்திருக்கிறது.

அந்த தேவையின் அடிப்படையில்தான் கயேந்திரகுமார் அவர்கள் மேற்படி நகர்வு முன்னெடுக்கின்றார்.

முன்னணி ஈடுபாடு காட்டிய ஐக்கிய முயற்சிகளின்போது உருவாக்கப்படும் ஆவணங்களில்,விட்டுக்கொடுப்பற்ற தமிழ் நிலைப்பாடுகளை எடுப்பதற்கும், அந்த ஆவணங்களின் கொள்கைரீதியான தெளிவான சரியான நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் முன்னணிதான் அதிகம் பங்களிப்பை செய்வதுண்டு.

தமிழ்மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவு விடயத்திலும் முன்னணியின் உழைப்பு அதிகம் உண்டு.

சிவில் சமூகமும் அரசியல் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பு பேரவையாகும். அதன் இணைத் தலைவர்களில் ஒருவராக அப்பொழுது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் இருந்தார்.

எனவே பேரவையின் முன்மொழிவுக்கு கனதி அதிகமுண்டு.அந்த முன்மொழிவை உருவாக்கும் பொழுது பேரவையில் அங்கம் வகித்த கட்சிகள் பின்னர் ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கொண்டன.பேரவையும் செயலிழந்தது.

எனினும் இப்பொழுது அந்த முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் ஒரு ஐக்கியத் தளத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னணி முன்வந்திருக்கிறது.

கயேந்திரகுமார் அழைப்பு விடுத்திருப்பது பிரதானமாக இரண்டு தரப்புகளுக்கு. ஒன்று ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணி.மற்றது தமிழரசுக் கட்சி.

இதில் ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் குறிப்பிட்ட சில கட்சிகள் ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவைக்குள் அங்கம் வகித்தன.தீர்வு முன்மொழிவை உருவாக்கும் நடவடிக்கைகளிலும் பங்களிப்பை நல்கின.

அதேசமயம் அக்கட்சிகள் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் இருந்தன.

கூட்டமைப்பு ரணில் மைத்திரி அரசாங்கத்தோடு சேர்ந்து உருவாக்கிய எக்கிய ராஜ்ய என்ற வரைவுக்கும் அவை பங்களிப்பை வழங்கின.

அந்தத் தீர்வு முயற்சியில் தமிழ்த் தரப்பில் சுமந்திரன் தீர்மானிக்கும் சக்தியாகச் செயற்பட்டார்.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply