தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைவதற்கு சாத்தியமில்லை!

  • Post author:
You are currently viewing தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைவதற்கு சாத்தியமில்லை!

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணை வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்றிருந்ததோடு, கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் அதற்கான அழைப்பினை விடுத்திருந்தார். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடர்ச்சியான தீர்மானங்களால் ஏற்பட்ட பின்னடைவுகளாலும், வாக்குவங்கியை நோக்கிய அரசியலுக்காகவுமே அவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் விமர்சனம் வெளியிட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் தற்போது தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் ஐக்கியப்படுவதற்கான எந்தவொரு சூழலும் இல்லாத நிலைமையே உருவாகியுள்ளது.

முதலாவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போதுள்ள பங்காளிகளான புளொட் மற்றும் ரெலோ ஆகியன இரகசிய சந்திப்புக்களை நடத்தியிருந்த நிலையில் அடுத்து வரும்காலத்தில் கூட்டமைப்பில் அவர்கள் நீடிப்பார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பொதுவெளியில் கூட்டமைப்பில் அவ்விரு கட்சிகளும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது தொடர்பில் கருத்துக்களை பகிராது விட்டாலும் அடுத்து பொதுத்தோர்தலில் தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம் கூட்டமைப்பினுள் அதிகமாகும் என்ற ஐயத்தினைக் கொண்டிருக்கின்றன. அதற்கேற்றால் போல் தமிழரசுக்கட்சியும் பொதுத்தேர்தலில் தமது கட்சி சார்ந்து வாக்குவங்கியுள்ள பலமான இளம்சந்ததியினரை களமிறக்குவதற்காக வடக்கு கிழக்கில் உள்ள அவர்களை நோக்கி வலைவிரிக்க ஆரம்பித்துள்ளது.

மறுபக்கத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான நீதியரசர்.சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் மாற்று கூட்டணியொன்றை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. 

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழம் உட்பட சிவில் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து பலமான அணியொன்றை அமைப்பதற்குரிய நடவடிக்கைள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது வடக்கு கிழக்கில் உள்ள சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சி.வி.விக்கினேஸ்வரன் இரகசியமாக சந்தித்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதோடு கூட்டணிக்கான பொதுக்கொள்கையில் உள்ளீர்க்கப்படும் விடயங்கள் தொடர்பிலான ஆலோசனைகளையும் முன்னெடுத்துள்ளார்.

இதேவேளை,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தான் சார்ந்த சிவில், பொது அமைப்புக்களை ஒருங்கிணைத்து தனியாகவே பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்குரிய தயார்ப்படுத்தல்களை கிராம மட்டங்களில் ஆரம்பித்துள்ளது. எவ்வாறாயினும் புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்கள், மதத்தலைவர்கள் ஆகியோர் கொண்ட அணியில் உள்ள ஒருசில பிரதிநிதிகள், தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள

கட்சிகள் ஐக்கியப்படுவதற்கான சந்தர்ப்பம் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதும் அந்த அரிய சந்தர்ப்பம் கைநழுவ விடப்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளதோடு தமது ஆழ்ந்த கவலையையும் வெளியீட்டிடம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள