தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய பேச்சாளராக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனும் நாடாளுமன்ற குழுவின் புதிய கொறடாவாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் நேற்று (21) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்தத் தெரிவுகள் இடம்பெற்றன.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அவரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த 5 வருடங்களாகக் கூட்டமைப்பின் பேச்சாளாராக பணியாற்றிய எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடாவாக சி.சிறிதரன் ஆகியோரின் செயற்பாடுகள் தொடர்பாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
சிறிதரன் கூட்டமைப்பின் கொறடா என்ற நிலையில், நாடாளுமன்றில் உரையாற்றுபவர்களின் பெயர்களை அவரே வழங்குவார். இதன்போது அவர் தனது பெயரையே அதிகமாக வழங்கியிருக்கின்றார். இதனானால் அவர் மட்டுமே நாடாளுமன்றில் உரையாற்றுவது போன்ற கபடத்தனத்தை மக்கள் மத்தியில் அரங்கேற்றினார்.
நேற்றைய தினமும் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட 18 நிமிடத்திலும் தாமே உரையாற்ற வேண்டும் எனக் கூறி தனது பெயரை வழங்கினார். இதன்போது செல்வம் அடைக்கலநாதன் தலையிட்டு கடும் பிரயத்தனத்தின் பின்னர் 9 நிமிடத்தை கோவிந்தன் கருணாகரனுக்கு பெற்றுக்கொடுத்தார்.
இவ்வாறு சிறிதரன் செய்யும் மோசடியாக வேலைகள் தொடர்பாக கூட்டத்தில் அவருக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவரை இனிமேல் கட்சியில் வைத்திருக்கவே கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டது. எனினும் சம்பந்தன் அதற்கு இடமளிக்கவில்லை.
மேலும், சுமந்திரனின் கடந்த கால செயற்பாடுகளால் கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்தது என அங்கு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதேவேளை, கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் ஒரு குழு தனக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சம்பந்தனும் உடந்தையாக இருந்தார் என மாவை சேனாதிராக வெளிப்படையாக குற்றம் சுமத்தினார். சம்பந்தன் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார்.
இது தொடர்பாக காரசாரமான விவாதம் இடம்பெற்றது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் இது தொடர்பாக சுமந்திரனின் அதீத தலையீடு கூட்டமைப்பிற்குள் இருக்கக்கூடாது என கருத்துரைத்தனர்.
எதிர்வரும் ஒரு வருடத்தில் கலையரசனை பதவி விலக வைத்துவிட்டு மாவை.சேனாதிராஜாவுக்கு எம்.பி பதவியை வழங்குவது என பலரும் அங்கு கருத்து முன்வைத்தனர். ஆனால், மாவை. அதற்கு சம்மதிக்கவில்லை.