தமிழ்த் தேசியப் போலிகளை தமிழ் மக்கள் இனங்கண்டு புறமொதுக்க வேண்டும்!

You are currently viewing தமிழ்த் தேசியப் போலிகளை தமிழ் மக்கள் இனங்கண்டு புறமொதுக்க வேண்டும்!

தமிழ் மக்களை அணி திரட்டும் நோக்கில் குடிமக்கள் அமைப்புக்கள் (Civil Society) மற்றும் சில அரசியல் கட்சிகளால் கூட்டாக இணைந்து நிறுத்தப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டுதல், கடந்த கால வரலாற்றுத் தவறுகளை மீள மேற்கொள்வதைத் தவிர்த்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டே நிறுத்தப்பட்டார்.

தமிழ்ப் பொது வேட்பாளரிற்கு அவரை முன்நிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பிற்கு அப்பால் பல குடிமக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியற் கட்சிகள் தேசத்திரட்சிக்காக பணியாற்றின என்பதோடு, மக்களும் தமிழர் தேசம் என்ற அடிப்படையிலே தங்கள் வாக்குகளை அளித்தார்கள் என்பதை யாரும் மறுக்கவியலாது.

பொது வேட்பாளரிற்காக வழங்கப்படும் கட்சிச் சின்னம் அடுத்து வரும் சில தேர்தல்களிற்கு பயன்படுத்தக் கூடாது எனும் குடிமக்கள் அமைப்புக்களின் அறம் சார் நிபந்தனைகளை அரசியற்கட்சிகள் எவையும் ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் சுயேட்சையாக வேட்பாளர் களமிறக்கப்பட்டார் என்பது அறியக்கூடியதாகவுள்ளது.

எனினும் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு உடன்பட்ட தரப்புக்களில் குடிமக்கள் சமூகங்களினதும் (Civil Society) ஏனைய கட்சிகளினதும் உடன்பாடுகள் ஏதுமின்றி தங்களிற்கிருந்த அறம்சார் கடப்பாட்டினை மீறி மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் கூட்டணியொன்று தேர்தல் ஆணைக்குழுவில் பொது வேட்பாளரின் சின்னத்தினைக் கோரிப் பெற்றுள்ளது.

குடிமக்கள் சமூகங்களின் கூட்டிணைவிற்குள் (Civil Society)  செயற்படும் சிலர் தங்கள் சிந்தனைகளோடு குடிமக்கள் சமூகத்தினரை நகர்த்திச் செல்ல முயற்சிப்பது வருந்தத்தக்கது. தொடர்ந்தும் மக்களை மடையர்கள் என்றெண்ணிச் செயலாற்றும் இதுபோன்ற அறம் பிழைத்தவர்களை மக்கள் நாங்கள் தோலுரித்தல் அவசியமாகும்.

தமிழ் மக்களை தேசமாகத் திரட்டுவதிலும் ஒரு சில அரசியற் கட்சிகளினதும் குடிமக்கள் அமைப்புக்களினதும் உழைப்பினால் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட சின்னத்தினைக் கைப்பற்றுவதன் ஊடாக மக்களின் இந்தத் தேசத்திரட்சியைக் கேலிக்குரியதொன்றாக்கியுள்ளதோடு, தொடர்ந்தும் மக்களையும் உழைத்த தரப்புக்களையும் ஏமாற்ற முயலும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்த தமிழ்த் தேசியப் போலிகளை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

இது போன்ற தமிழ்த் தேசியப் போலிகள் மக்களிடையே தமிழர் தேசத்திரட்சியின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதோடு, கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தையும் தகர்த்தெறிந்து தென்னிலங்கைக் கட்சிகளை நோக்கி மக்களை நகர்த்துவதற்கு தமிழ்த் தேசியத்தின் பெயரால் முயன்று கொண்டிருக்கின்றன.

சில தமிழ்த் தேசியப் போலிகள் அரச தலைவர் தேர்தலில் ஒரு பக்கம் தென்னிலங்கைக் கட்சிகளுடன் இருட்டு ஒப்பந்தமும்,  மறுபக்கம் தமிழ் மக்களின் வாக்குகளிற்காக பொது வேட்பாளர் தரப்புடன் இணைந்து கொண்டிருந்தமையினையும் யாரும் அறியாமலில்லை. அதற்காக உழைக்காத தரப்புக்கள் அரசியல் சூழ்ச்சிகளினால் இன்று பொது வேட்பாளரின் சின்னத்தைக் கைப்பற்றுவதனூடாக நாடாளுமன்றத் தேர்தலில் மக்களாணை பெற பகற்கனவு காணுகின்றன. பொது வேட்பாளரின் சின்னம் தற்பொழுது அவரை நிறுத்திய தரப்புக்களுடையதல்ல, வேறு கட்சிகளினுடையது என்பதனை அனைவரிடமும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.

தமிழ் மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் மயப்படுத்தப்படாமையும் தேசமாய் அணி திரட்டப்படாமையுமே அனைத்துத் தளங்களிலும் பலவீனப்பட்ட மக்களாய்ப் போகக் காரணம். தமிழ் மக்களின் அரசியல் தனியே அடையாளத்திற்கானதன்று; அது இறைமைக்கானது. தமிழ்த் தேசியம் என்பது வாழ்க்கை முறை, அதனை தேர்தல்க் கால வெற்றுக் கோசமாக மாற்றியமைத்தது சிங்கள – பௌத்த நிகழ்ச்சி நிரலிற்கு துணை போன தமிழ் அரசியற் கட்சிகளே!

நாங்கள் எமது தாயகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல் மற்றும் பொருண்மிய வளங்களை ஒன்று திரட்டி தற்சார்புப் பொருளாதாரத்தை முன்னெடுக்காமையும், ஆதிக்க சக்திகளையும் பகை முரண்களையும் கையாள்வதில் உரிய தந்திரோபாயங்களை வகுக்காமையுமே அவர்களிடமே சரணாகதியடைந்த தமிழ் அரசியலினால் இதுவரைகாலமும் விளைந்ததொன்று.

அகவயமாக முற்போக்கு அம்சங்களைக் கொண்ட புதிய மாறுதல்களிற்குத் தமிழ்த் தேசிய அரசியல் தயாராக வேண்டிய தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களின் கூட்டு முகவராண்மையைச் சிதைப்பதற்கு தமிழ்த் தேசிய போலிகள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் நாங்கள் அனைவரும் தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டினை அறிவுபூர்வமாக விழிப்புடன் அணுகுவதற்கு முன்வர வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகமாக அனைவரையும் சமூகப் பொறுப்புடன் வேண்டி நிற்கின்றோம்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply