தமிழ்த் தேசிய அரசியலின் பின்னடைவுக்கு சம்பந்தனும் சுமந்திரனுமே காரணமானவர்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாள் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல்களின் போது இனப்பிரச்சினைக்கு தீர்வாக சம்ஸ்டித் தீர்வைக் கோரி வாக்குப் பெற்றுவிட்டு தேர்தல் முடிந்த கையோடு மக்களிடம் பெற்ற ஆணைக்கு மாறாகவே அவர்களுடைய செயற்பாடு அமைந்திருந்தது.
பிரதான கட்சியாக இருந்த தமிழரசுக்கட்சி வேகமாக தனது செல்வாக்கை இழந்து வந்திருக்கிறது. சம்பந்தனின் மறைவுக்கு பின்னர் தமிழரசுக் கட்சியில் பிரதான முடிவுகளை எடுப்பதாக அடையாளப்படுத்தப்பட்ட சுமந்திரன் அவர்கள் மக்களால் நிராகரிப்பட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளார். இவை முக்கியமான விடயம். 2001 இல் இருந்து முக்கியமான ஒரு தரப்பாக இருந்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் படிப்படியாக தமது செல்வாக்கை இழந்திருப்பதென்பது முற்றிலும் கொள்கைக்கு புறம்பாக செயற்பட்டமையே பிரதான காரணமாகும்.
இந்த பின்னணியில் தான் தமிழரசுக் கட்சிக்குள் பதவி மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை
“தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக உள்ளமையால் அந்தக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது.”
“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பைச் சரியாகப் புரிந்துகொண்டு, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரின் ஆதிக்கத்தைக் கட்சி தொடர்ந்தும் அனுமதிப்பதன் ஊடாகத் தொடர்ந்தும் ஒரு மோசமான கொள்கை ரீதியான பாதையில் தமிழ்த் தேசிய அரசியலைத் தள்ளும்.” – என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஒரு பொதுப்புள்ளியில் சந்திப்பதற்குத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரனுடன் ஏற்கனவே பேச்சுகளை ஆரம்பித்துள்ளதாகவும், அதேபோல் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் பேச்சுகளை ஆரம்பித்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவித்தார்.
இந்தப் பேச்சுகளை அடுத்த ஆண்டில் முன்கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழரசுக் கட்சி சரியான மாற்றங்களைச் செய்யுமானால் தமிழினத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் ஒரு சுபீட்சமாக அமையும் என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.