தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் தமிழின உணர்வாளர் த.வெள்ளையன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது உடல், தூத்துக்குடி மாவட்டம் பிச்சிவிளை கிராமத்தில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரவைத் தலைவர் த.வெள்ளையன்(76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 3-ம் தேதி அவரதுஉடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலைக்குச்சென்றது. மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் த.வெள்ளையன் காலமானார்.
அதைத் தொடர்ந்து அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக பெரம்பூர் பேருந்து நிலையம் அருகேஉள்ள இல்லத்திலும் பெரம்பூர் வியாபாரிகள் சங்க கட்டிடத்திலும்வைக்கப்பட்டது. அரசியல் கட்சியினர், வணிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல் சென்னையில் இருந்து அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, நாளை பகல் 4 மணி அளவில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மற்றும் சென்னை புறநகர் என்று இருந்த வணிகர் சங்கத்தில் பொறுப்பு வகித்தார். தனது கடின உழைப்பாலும், தமிழகம்முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் வணிகர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையை உருவாக்கினார்.
வணிகர்கள் பிரச்சினைகள் மட்டுமின்றி விவசாயிகள், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கான போராட்டத்திலும் ஈடுபட்டார். குறிப்பாக, காவிரி, சிங்கள அரசு நடத்திய தமிழின அழிப்பு , மீத்தேன், ஸ்டெர்லைட் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, பலமுறை கைது செய்யப்பட்டு சென்னை சென்ட்ரல், புழல், வேலூர் சிறைகளிலும் அடைக்கப்பட்டார்.
2009 இல் தமிழகத்தில் கருணாநிதி அரசின் பாசிச ஒடுக்குமுறைகளையும் தாண்டி தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்தும் முகமாக மக்கள்/ மாணவர் எழுச்சிக்குத் தன்னாலான முயற்சிகளை முன்னெடுத்த ஒரு அதி மனிதர் த. வெள்ளையன்.
அன்னாரை தமிழீழம் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூரும். 🙏