இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து அங்குள்ள அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் ஈழத்த்மிழர்கள் தற்போதைய கொரோனா நெருக்கடியிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவரமடைந்து வரும் நிலையில் அங்குள்ள அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களும் பாதிக்கப்பட்டு பெரும் உயிராபத்தை சந்தித்துள்ளனர்.
தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் 3 அகதிகள் முகாமில் மட்டும் இதுவரை சுமார் 150 ஈழத்தமிழர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டின், உடுமலை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள்கள் முகாம்களில் வசிக்கும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
உடுமலை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் 69 பேர் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம், மேட்டுப்பாளையத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசிப்பவர்களில் 41 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தும்பலஹள்ளி அகதி முகாமில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் மூவரது நிலை கவலைக்கடமாக இருந்த நிலையில் சிகிச்சையே கிடைக்காமல் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து தகவல் கிடைத்துள்ளது.
இந்தநிலையில் குறித்த ஏதிலிகள் முகாம்களில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 113 அகதிகள் முகாம்களில் சுமார் 75 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களும், வெளிப்பதிவு முறையில் அந்தந்த காவல் நிலையங்களில் பதிவு நடவடிக்கையினை செய்து தத்தமது சொந்த செலவில் சுமார் 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களும் உள்ளனர்.
இவர்களில் பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியும், தொற்று அபாயத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.
அதுதவிர கொரோனா நெருக்கடி காரணமாக வேலைகளுக்கு செல்லமுடியாமல் வருமானம் இன்றி பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், தமக்கு வசதி உள்ளவர்கள் உதவ முன்வருமாறு கோரிக்கை விடுக்கும் காணொளிப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறு தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் சுமார் ஒரு இலட்சம் ஈழத்தமிழர்களை கொரோனா நெருக்கடி நிலை நாதியற்றவர்களாக மாறியுள்ளது.