தமிழ்மக்களின் விடுதலை அரசியலுக்கு அடிக்கும் அபாயமணி பதின் மூன்றாவது திருத்த வரைபு!

You are currently viewing தமிழ்மக்களின் விடுதலை அரசியலுக்கு அடிக்கும் அபாயமணி பதின் மூன்றாவது திருத்த வரைபு!

1987இல் இருந்து தமிழ்மக்களாலும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளாலும் நிராகரிக்கப்பட்ட பதின்மூன்றாம் திருத்தத்சட்ட முறைமையானது மூச்சிழுத்து இருந்த நிலையில் இதற்கு உயிர் கொடுக்கும் நிலைப்பாட்டில் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமை என்ற பெயரில் சிறீலங்காவின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்க முனையும் அடிவருடி அரசியலானது தமிழ்மக்கள் விடுதலைக்காக கொடுத்த விலையை நீர்த்துப்போவதற்கான முரண்பாட்டு அரசியலை உருவாக்கியுள்ளது.

பதின் மூன்றாவது திருத்த வரைபுக்கு முழுமையாக உயிர் கொடுத்தாலும், வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டாலும், தமிழ்மக்கள் தன்னாட்சி அதிகாரமற்ற சிறீலங்காவின் ஆளுனரின் அதிகாரத்துக்குள் அடக்கப்படுகின்ற அரசியலுக்குள் முடக்கப்படுவார்கள் என்பதுதான் உள்ளார்ந்த அரசியற்கோட்பாடு இதை இப்போது பெற்றுவிட்டு பின் சமஸ்டியை நோக்கிப் பயணிக்கலாம் என்று இயலாமைக்கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களை ஏமாற்ற முனையாது இப்போது இருக்கும் நிலைக்கும் பதின்மூன்றின் தீர்வுக்கும் வடக்கு கிழக்கு இணைவைத்தவிர எந்த வேறுபாடும் இல்லை என்பதை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும்.


இந்த முயற்சியானது தமிழ்மக்களின் விடுதலை அரசியலுக்கு அடிக்கும் அபாயமணி என்பதை எம்மால் திட்டவட்டமாக கூறமுடியும் காரணம் தமிழ்த்தேசி ய அரசியலை சரியான நேர்த்தியான முறையில் முன்னெடுத்து செல்லும் அமைப்புகளை தாயகத்திலும் புலத்திலும் ஒரங்கட்டுவதற்காகவும் சிதைப்பதற்காகவும் அயல்நாட்டு சக்திகளின் செயற்பாடுகள் எம்மவர்களுக்கூடாக முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தப்பணியில் சில ஊடகவிலாளர்களும் ஊடகங்களும் புதிது புதிதாக முளைக்கும் அமைப்புகளும் அயல்நாடுகளுக்கு வலிக்காத அரசியலை நாசுக்காக முன்னெடுப்பதற்கு சிலரும், அவர்களின் முகவர்களாக நேரடியாக சிலரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள்.

இதனுடைய தொடர்ச்சிதான் அதிசயமாக ஒற்றுமையாகியுள்ளார்கள் என்ற போர்வையில் கொள்கை பிறழ்ந்த அரசியல் கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழரின் விடுதலை அரசியலை ஓங்கி அடிக்க முனைகின்றார்கள்

விடுதலைப்புலிகளால் விட்டுக்கொடுக்காமல் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழ்மக்களின் வேணவாவை வென்றெடுப்பதற்கான விடுதலை அரசியல் துரோக அரசியலால் தூர்த்து மூடப்படும் துன்பியல் காலமாக மாறியுள்ளது.

தாயகம் தேசியம் இறையாண்மை என்ற அடிப்படை உரிமைகளை உரத்துபேசமுடியாத ஊமைகளாக  பிடரி குனிந்த நிலையில் அயல்நாடுகளின் அரசியல் வேணாவுக்குள் வீழ்ந்து கிடப்பது தமிழ் மக்களின் சாபக்கேடாக அரங்கேறியுள்ளது.

தமிழ் மக்களை பாதளத்தில் வீழ்த்த முனையும் இந்த பாதகச்செயலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அணியும்,  ரவூப் கக்கீம் கட்சியும், மனோ கணேசன் கட்சியும் கைகோர்த்துள்ளனர்.

இதேவேளை கஜேந்திரகுமார் தலைமயிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மட்டும் இந்த துரோகச்செயலை எதிர்த்துள்ளது வழமைபோன்று தமிழ்மக்களுக்கான நியாயமான அரசியலின் பாதுகாவலர்களாய் தங்கள் நிலைப்பாட்டையும் தமிழ்மக்களின் அரசியல் உறுதிப்பாட்டையும் நிலைநிறுத்தியுள்ளார்கள்.

ஆகவே சரியான அரசியல் நிலைப்பாட்டில் இருக்கும்  அரசியல் கட்சிக்கு பின்னால் தமிழ்மக்கள் அணிதிரண்டு மண்ணின் உரிமையை அடுத்தவனின் அரசியலுக்காக விற்பனை செய்ய துடிக்கும் நடவடிக்கைகளை தடுக்க முன்வருவதால் மட்டுமே பதின்மூன்றாம் திருத்த சட்ட வரைபு என்ற மாயையிலிருந்து மீளமுடியும்.

-தமிழ்முரசம்-

பகிர்ந்துகொள்ள

Leave a Reply