தமிழக தமிழ் கடற்தொழிலாளர்களையும் , வடக்கு தமிழ் கடற்தொழிலாளர்களையும் கடலில் மோத வைக்கவே குடியியல் தன்னார்வ படையணி என்பதனை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உருவாக்க நினைக்கிறார் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
வட கடலில் தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்து காணப்படுகிறது. வடக்கு கடற்தொழிலாளர்களின் வலைகள் அறுக்கப்பட்டு , அவர்களின் படகுகள் சேதமாக்கப்பட்டும் வருகின்றன.
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். இந்தியாவில் கூட தடை செய்யப்பட்ட அடிமடி தொழிலை அவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து செய்கின்றனர்.
இதனை தடுக்க வேண்டிய கடமை கடற்தொழில் அமைச்சரின் கடமையாகும். அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதற்காக குடியியல் தன்னார்வ படையணி என கடல்பாதுகாப்பு படையணியை உருவாக்க உள்ளதாக கடற்றொழில் அமைச்சர், அமைச்சரவை பாத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.
அவ்வாறு கடல் பாதுகாப்பு படையை கடற்தொழில் அமைச்சர் உருவாக்கி கடலில் தமிழக கடற்தொழிலாளர்களுடன் படையணியை மோத விட போகிறாரா ?
உருவாக்கப்படவுள்ள கடல் பாதுகாப்பு படையில் தமிழர்களே உள்வாங்கபடுவார்கள். குறிப்பாக வடக்கு கடற்தொழிலாளர்களே அதில் அதிகம் உள்வாங்கபடுவார்கள். அவர்களை தமிழக கடற்தொழிலாளர்களுடன் நேரடியாக மோத விட போகின்றார்களா ?
இது இலங்கை கடற்படையை நல்லவர்களாக்கி , கடல் பாதுகாப்பு படையை தமிழக கடற்தொழிலாளர்களுடன் மோத விடும் செயற்பாடு.
அதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராடும் தமிழக கடற்தொழிலாளர்களை , வடக்கு தமிழ் கடற்தொழிலாளர்களுக்கு எதிராக போராட வைக்கும் முயற்சியே இது.
இந்த படையணி உருவாக்கப்படுமாக இருந்தால் , கடலில் தமிழக – வடக்கு , தமிழ் கடற்தொழிலாளர்களுக்கு இடையில் மோதலை உருவாக்கும் முயற்சி என்றே கருதுகிறோம்.
கடற்படை செய்ய வேண்டிய வேலைகளை கடல் பாதுகாப்பு படையை செய்ய தூண்டி பிரச்சனைகளை உருவாக்க கூடாது.
எனவே அமைச்சரவை பத்திரத்தை உடனடியாக கடற்தொழில் அமைச்சர் மீள பெற வேண்டும். அதற்கு இங்குள்ள கடற்தொழில் சங்கங்கள் அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.