நோர்வேயில் தஞ்சமடைந்த ஈழத்தமிழ் குடும்பத்தினருக்கு, மனிதாபிமான அடிப்படையில் வதிவிட அனுமதி வழங்க நோர்வே அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீதான இனவழிப்பு போரின் போது, வன்னிப்பகுதியில் வாழ்ந்த தமிழ்க்குடும்பம், இனவழிப்பிலிருந்து தப்பிப்பிழைத்து 2009 இல் நோர்வேக்கு வந்திருந்த நிலையில் புகலிடக்கோரிக்கையை நோர்வே அரசிடம் விடுத்திருந்தது. வன்னியில் வாழ்ந்த காலப்பகுதியில், தமிழ்த்தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு, நாட்டுப்பற்றோடு சேவையாற்றியிருந்தமையினால், இலங்கையில் தொடர்ந்து வாழ்வது அவர்களது பாதுகாப்புக்கும், உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக அமையுமென்பதால், நோர்வேயில் தஞ்சம் கோருவதாக அக்குடும்பம் தெரிவித்திருந்தது.
எனினும், நோர்வே அதிகாரிகள் நடத்திய முதற்கடட விசாரணைகளின் போது, அக்குடும்பத்தின் முழு பின்னணியையும் அவர்கள் தெரிவிக்கவில்லை என காரணம்காட்டி, அக்குடும்பத்துக்கான புகலிடக்கோரிக்கையை நோர்வே அரசு நிராகரித்திருந்தது. மீண்டும் மறு விசாரிப்புக்கான விண்ணப்பத்தை விடுத்திருந்த மேற்படி குடும்பத்தினர், இறுதிக்கட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின்போது நடைபெற்ற விடயங்களை கண்ணால் கண்டிருந்த நிலையில், மிகவும் குழப்பகரமான நிலையிலேயே 2009 இல் நோர்வேக்கு வந்திருந்த நிலையில், மனம் ஒருமுகப்பட்ட நிலையில் இருந்திருக்காமையினால் எல்லாவற்றையும் நம்பிக்கையோடு தெரிவிக்கும் மனநிலை இருந்திருக்கவில்லை என தமது சட்டவாளரூடாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், வன்னியில் இருந்த காலப்பகுதியில், தமிழ்த்தேசிய செயற்பாடுகளோடு இக்குடும்பத்தினர் தம்மை இணைத்துக்கொண்டமை தொடர்பில் தம்மால் நம்பகமான முடிவுக்கு வர முடியாதென கூறிய நோர்வே அரசு தொடர்ச்சியாக இவர்களுக்கான அனுமதியை நிராகரித்தே வந்திருந்தது. இந்நிலையில், இக்குடும்பத்த்தினர் தமது பாதுகாப்பு கருதி, தாம் வாழ்ந்து வந்த இடத்திலிருந்த தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவ்விடத்து மக்களினதும், தேவாலயத்தினதும் ஆதரவோடு, தேவாலயத்திலேயே இருந்த இக்குடும்பம், கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக வெளியே நடமாட முடியாமலும், வெளியுலகம் தெரியாமலும் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையிலும், விடாமுயற்சியோடு தேவாலயத்தினதும், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் அரசியலாளர்களினதும் ஆதரவோடு, தமக்கான தஞ்சக்கோரிக்கையை பலமுறை மேன்முறையீடு செய்திருந்தனர்.
நோர்வே அரசுக்குத்தேவையான ஆவணங்கள், மற்றும் இக்குடும்பம் வன்னியில் வாழ்ந்த காலப்பகுதியில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளில் இணைந்திருந்தமை தொடர்பில் பல நம்பகமான ஆவணங்களை வழங்கியிருந்ததோடு, சமாதான காலப்பகுதியில் வன்னிக்கு சென்றிருந்த மேற்குலக அதிகாரிகளும் இக்குடும்பத்தினர் பற்றிய உண்மைத்தகவல்களை நோர்வே அரசுக்கு வழங்கியுமிருந்தனர். எனினும், தான் எடுத்த முடிவில் மாற்றம் செய்தால் எதிர்காலத்தில் மேலும் பல விடயங்களில் தமது முடிவுகளை மாற்ற வேண்டியிருக்கும் என்பதாலோ என்னவோ, நோர்வே அரசு தொடர்ந்தும் இக்குடும்பத்துக்கான தஞ்சக்கோரிக்கையை நிராகரித்தே வந்திருந்தது.
இந்நிலையில், அரசு, மற்றும் ஏனைய கட்சிகளோடு ஏற்பட்ட இணக்கப்பாடொன்றின் பயனாக, 5 வருடங்களுக்கும் மேலாக தேவாலயங்களில் தஞ்சமடைந்திருந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வதிவிட அனுமதி வழங்குவதாக அரசு முடிவெடுத்துள்ளதாக 29.11.2022 அன்று திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போது, கடந்த 8 வருடங்களாக மூடிய அறைக்குள் தமது வாழ்வை கழித்து வந்த இக்குடும்பத்தினர், ஏனையவர்களைப்போலவே தாமும் சமூகத்தோடு இணைந்து வாழும் உரிமையை பெற்றுள்ளனர்.
மேற்படி குடும்பத்தினரின் உரிமைகளுக்காக கடந்த 8 வருடங்களாக போராடி வந்த உள்ளோர் நோர்வே மக்கள், அரசியலாளர்கள், மனிதவுரிமை அமைப்புக்கள், தேவாலய நிர்வாகம் உள்ளிட்ட அனைவரும் மேற்படி விடயம் தொடர்பாக தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.