தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை நசுக்கும் விதமாகவே சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் காணப்படுகின்றன என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் குறித்து பேசுவதற்கு இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர அண்மையில் தெரிவித்திருந்தார் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மேலும் தெரிவித்ததாவது, அமைச்சர் சரத் வீரசேகர மோசமான இனவெறி சிந்தனைக்குள் புதைந்துள்ளார். ஆகவேதான் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இலங்கையில் முப்பது வருடகாலம் இடம்பெற்ற போரின் போது தமிழர்கள் மீது இலங்கையின் முப்படைகளும் தாக்குதல்களை நடத்தினர்.
ஆகவேதான் இலங்கை அரசபடைகள் மற்றும் இலங்கை அரசின் மீது போர்க் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன அதனை சரத் வீரசேகரவும் எதிர்கொள்ளவேண்டும்.
இதேவேளை தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதை தடுப்பதற்கும் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை நசுக்குவதற்குமே சரத் வீரசேகர இவ்வாறான திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றார்.
இது ஜனநாயக விரோதச் செயற்பாடாகும். அவ்வாறான சட்டவரைவு கொண்டுவரப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக நாம் செயற்படுவோம் இவ்வாறான செயற்பாடொன்றை இலங்கை அரசு செய்யும்பட்சத்தில் சர்வதேசத்திற்கு முன்பாக தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.