விக்னேஸ்வரன் என்பவர் ஒரு மாயமான் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் மக்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்ற கஜேந்திரகுமாருக்கு பின்னால் வராமல் தனக்குப் பின்னால் வர வைக்கின்ற ஒரு ஏமாற்று நாடகத்தினை முன்னெடுத்து வருகிறார் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு – கோப்பாவெளியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“விக்னேஸ்வரனை நாங்கள் ஆரம்பத்தில் முழுமையாக நம்பினோம். அவரை வைத்து தான் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.2014ம் ஆண்டு அரசியலமைப்பினை உருவாக்கவிருந்த காலத்தில் ஒற்றையாட்சியினை நிராகரித்து தமிழ் தேசம் அங்கீகரிக்கும் சமஸ்டியை உருவாக்குவதற்கான அழுத்ததினை வழங்கும் வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படையில் ஓரு தீர்வுத்திட்டமும் எழுதப்பட்டது.
ஆனால் இந்த விக்னேஸ்வரனோ தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக செயற்படுபவர் என தன்னை காட்டிக்கொண்டு தமிழ் மக்களின் அபிலாசை மீது பற்று கொண்டவர் என காட்டிக்கொண்டு தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்டத்தில் தமிழ் தேசம் இறைமை என்பதை உள்ளடக்குவதற்கு அவர் மறுத்துவிட்டார்.
தமிழ் மக்கள் பேரவை ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு பேரெழுச்சியை விக்னேஸ்வரன் நாசமாக்கினார் குழப்பியடித்தார்.
இன்று விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை விமர்சிக்கின்றார். கூட்டமைப்பு தென்னிலங்கைக்கு விலைபோய்விட்டதாக கூறுகின்றார். ஆனால் இவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது. விக்னேஸ்வரன் கூட்டமைப்புடன் முரண்படுவது போன்று ஒரு நாடகமாடுகின்றார்.” என்று தெரிவித்தார்