தமிழ் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முன் தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ், ஹரின் பெர்ணான்டோவிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று (25.12.2023) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், தமிழ்க் கட்சிகளிடம் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதற்கு முன்பாக நீங்களும் உங்கள் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் தமிழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என கூறமுடியுமா?
நல்லாட்சியில் அவர்கள் நடத்திய நாடகத்தை தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
ரணில் விக்ரமசிங்கவை தமிழ் கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என கோருவதற்கு முன்பாக ஜனாதிபதி மூலம் தமிழர்கள் எதிர்பார்க்கும் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதா?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவை அனைத்திற்கும் எதிர்மாறாக தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் கட்சிகளையும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றார்.ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்ட அரச திணைக்களத்தில் நடைபெறும் தமிழர் நில அபகரிப்பையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்களை சிறையில் அடைக்கப்படுவதையும் தொடர்ந்தும் மேற்கொள்கின்றார்.
இன்னும் சில மாதங்களே தேர்தலுக்கு இருக்கின்ற நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஹரின் பெர்ணான்டோவும் இணைந்து தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள்.
இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நாடாளுமன்றத்தால் மீளப் பெறாத அதிகாரப் பகிர்வை வழங்குங்கள். அப்பொழுது நீங்கள் கேட்கும் ஆதரவை பெரும்பான்மை தமிழ்க கட்சிகள் பரிசீலிக்கும் என மேலும் தெரிவித்துள்ளார்.