பயங்கரவாத தடைச் சட்டத்தை விட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் பாரதூரமானது எனவும் இதனால் பலர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா. செந்தில்வேல் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆக கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் எனவும் தங்களுடைய உரிமைகளை கேட்ட ஒரே காரணத்துக்காக தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் போராடியதற்காக, பல இளைஞர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தமது வாழ்வினை இழந்துள்ளனர் என்றும் சி.கா. செந்தில்வேல் தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ள முடியாது, தொழிற்சங்க போராட்டம் மேற்கொள்ள முடியாது எனவும் அரசாங்கத்தை பொது மேடைகளில் கூட விமர்சிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.