தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது அவசியம்!

You are currently viewing தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது அவசியம்!

இலங்கையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வொன்றை அடைந்து கொள்வதை முன்னிறுத்தி, அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இலங்கை மீதான விவாதத்தில் பல்வேறு நாடுகள் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த நிலையில், இலங்கை தொடர்பான விவாதத்தின் இரண்டாம்நாள் அமர்வு நேற்று திங்கட்கிழமை ஜெனிவா நேரப்படி காலை 9 மணிக்கு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்காவின் பிரதிநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளை வெளியிட்டிருப்பதுடன் அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 40 இற்கும் அதிகமானோர் விடுதலை செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

அதுமாத்திரமன்றி சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய நகர்வுகளும் முயற்சிகளும் பாராட்டுக்குரியவையாகும்.

இவ்விடயத்தில் மேலும் முன்னேற்றகரமான நகர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அடுத்ததாக சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீதான பாதுகாப்புத்தரப்பினரின் கண்காணிப்புக்கள் மற்றும் அடக்குமுறைகள் தொடர்கின்றன.

கருத்துச்சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கவேண்டிய அதேவேளை, சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர் மீதான அடக்குமுறைகளை அரசாங்கம் முடிவிற்குக் கொண்டு வரவேண்டும்.

மேலும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள் செயற்திறன் மிக்கவையாகவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவையாகவும் சுயாதீனமானவையாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியவையாக அமைய வேண்டியது அவசியமாகும்.

அத்தோடு அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் ஒன்றிணைந்து செயற்பாடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply