தமிழ் வாக்காளர் மீதான வியாபார ஊடகத்தின் உளவியல் தாக்குதல்-ஆர்த்திகன்

You are currently viewing தமிழ் வாக்காளர் மீதான வியாபார ஊடகத்தின் உளவியல் தாக்குதல்-ஆர்த்திகன்

சிறீலங்காவில் பொதுத்தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் வேகமடைந்துள்ள நிலையில் தமிழர் தரப்பை குழப்பி அதன் மூலம் தமிழ் தேசிய இருப்பை சிதறடிக்க சிறிலங்கா பேரினவாத தரப்புகளும்,அவர்களுக்கு முண்டுகொடுப்போரும் முனைந்துநிற்பது வெளிப்படையானது.

இந்த நிலையில் தமிழ் தேசிய ஊடகங்களாக தம்மை வெளிக்காட்ட முனைந்து நிற்கும் வியாபார ஊடகங்களும் இதில் தீவிரமாக ஈடுபடுவது, ஊடக தருமத்தை குழிதோண்டி புதைக்கும் செயலாக அமைந்துள்ளதுடன் தமிழ் தேசியத்திற்கு எதிரான செயற்பாடாகவே அமைகிறது.

அதன் ஒரு அங்கமாகவே அண்மையில் குறித்த ஒரு ஊடகத்தினால் வெளியிடப்பட்டு மக்களிடம் பரப்பப்படும் ஒரு காணொளி அமைந்துள்ளது. மக்களை அச்சமூட்டும் விதமாக படங்கள் புனையப்பட்டு மக்களை,ஒரு மிரட்டும் தொனியில் பேசப்பட்ட அந்த காணொளியில்,கூட்டமைப்புக்கு வாக்களிக்கவிட்டால் மக்கள் பாரிய அழிவுகளுக்கு உட்படுவார்கள் என மக்களை நம்பவைக்க பாரிய முயற்சி மேற்கொள்ளப்டுகிறது.

மக்களுக்கு கிலியூட்டி அவர்களை அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக வாக்களிக்க வைக்க கடும் முயற்சி செய்யப்படுகிறது.இவற்றுக்கு மேலாக,

தமிழ்த் தேசியத் தலைமை உருவாக்கிய கூட்டமைப்பு” என்று பல தடவைகள் கூறி மக்களை ஏமாற்ற முனைந்து நிற்கின்றது இந்த காணொளி.உண்மையில் தமிழ் தேசியத் தலைமையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் அன்று தமிழ்த் தேசியத் தலைமையினால் உள்வாங்கப்பட்ட உறுப்பினர்களில் பலர் இன்று இல்லை.

மாறாக தமிழ் இனவிரோதிகளும், வியாபாரிகளும், பதவிமோகம் கொண்டவர்களும் உள்ளடங்கியுள்ள ஒரு ஏமாற்றும் சடப்பொருளாகவே கூட்டமைப்பு உள்ளது.பல தேசியவாதிகள் அதில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதே வரலாறு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கான தலைமை அல்ல என்பதை சிங்கள இனம் கூட நன்கு அறியும்.இந்த வரலாறுகளையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலையையும் மக்கள் அறியவில்லை என நினைப்பதும், அவர்கள் அப்படி அறிந்தாலும் அவர்களை மிரட்டி அல்லது குழப்பி பணியவைக்க முடியும் என இந்த ஊடகவியாபாரிகள் எண்ணுவதும் அவர்கள் தமிழ் மக்களை முட்டாள்களைக் கொண்ட ஒரு இனம் என தற்போதும் எண்ணுவதையே காட்டுகின்றது.

போரின் போது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியா தீட்டிய திட்டம் கூட்டமைப்புக்கு முன்னரே தெரியும் என இந்த வாரம் மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் அதன் தலைவர் சம்பந்தன் அவர்களே தெரிவித்துள்ள நிலையில்,

”கூட்டமைப்பை நிராகரித்தால் மாவீரர்களின் ஆன்மா உங்களை மன்னிக்காது” என மாவீரர்களை படுகொலை செய்ய துணைநின்ற கூட்டமைப்பையே ஆதரிக்க வேண்டும் என இந்த ஊடகம் கூறுவதும்,ஒட்டுமொத்த மாவீரர்களையும், விடுதலைக்காக உயிர்துறந்த மக்களையும் இழிவுபடுத்தும் செயலாகும்.

முப்படை கட்டி உலகநாடுகளை எல்லாம் எதிர்த்து தனது மண்ணில் புலிக்கொடியுடன் ஆண்ட ஒரு இனத்தை மூடர் கூட்டம் என்றும், மிரட்டல்களுக்கு எல்லாம் பயந்து நடுங்குபவர்கள் என்றும் எண்ணும் இந்த ஊடகத்தின் நோக்கம் என்ன?

எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பை கொண்டுவருவதன் மூலம் சிறீலங்கா அரசை அனைத்துலக அழுத்தங்களில் இருந்து காத்துக்கொள்வது. அதன்மூலம் தனக்கு கிடைக்கும் ஆதாயத்தின் மூலம் தனது வியாபாரத்தை பெருக்கிக் கொள்வது.

தமிழ் மக்களுடன் இருந்து மக்களுக்காக சேவை செய்கிறேன் என்று தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களை வைத்து வியாபாரம் செய்தவர்களின் முகத்திரைகளை தற்போதைய நெருக்கடி மெல்ல மெல்ல கிழித்து வருகின்றது.

எனவே அவர்களை சரியாக இனங்காண்பதுடன், அவர்களின் கபட நாடகங்களை புறந்தள்ளி தமிழ்த் தேசியக் கடமையை ஆற்ற தமிழ் இனம் தனது முடிவுகளை துணிவுடன் எடுக்க வேண்டும். அதன் மூலம் தான் எதிர்காலத்தில் எமது இனவிழுமியங்களை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

பகிர்ந்துகொள்ள