சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய விரைவு பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்துவதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், சீனாவிடமிருந்து வாங்கிய விரைவு பரிசோதனை கருவிகள் தரமற்றவை என்று பிரிட்டனிலும் புகார் எழுந்துள்ளது.
சீன நிறுவனங்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற பிரட்டன் அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
சீனாவின் ஆல் டெஸ்ட் பயோடெக் (All Test Biotech) மற்றும் வொண்ட்ஃபோ பயோடெக் (Wondfo Biotech) ஆகிய இரண்டு நிறுவனங்கள் விரைவு பரிசோதனைக் (Rapid Test) கருவிகளை உற்பத்தி செய்கின்றன. இதில், Wondfo Biotech நிறுவனத்திடமிருந்து இந்தியா விரைவு பரிசோதனைக் கருவிகளை வாங்கியுள்ளது. தமிழக அரசும் இதே நிறுவனத்திடம் இருந்து கருவிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தி வந்தது.
இந்த கருவிகளை கொண்டு பரிசோதனை செய்ததில், கொரோனா இருப்பவர்களுக்கு இல்லை என்றும், இல்லாதவர்களுக்கு இருக்கிறது என்றும் தவறான முடிவுகளை வெளிப்படுத்துவதாக சந்தேகம் எழுந்தது. இந்த கருவிகளின் செயல்பாட்டில் சந்தேகம் இருப்பதாக முதன் முதலில் ராஜஸ்தான் மாநிலம் புகார் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து அவற்றை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இதே போன்ற கருவியை இறக்குமதி செய்திருந்த பிரிட்டனும், விரைவு பரிசோதனை கருவிகளின் தரம் குறித்து தற்போது புகார் கூறியுள்ளது. விரைவு பரிசோதனை கருவிகள் மருத்துவ ரீதியாக நிரூபணம் செய்யப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கடந்த ஏப்ரல் 8-ஆம் திகதி அறிவித்தது. இருந்தபோதும், கொரோனா பரிசோதனையை அதிகரிப்பதற்காக உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு விரைவு பரிசோதனை கருவிகளை வாங்க முனைப்பு காட்டின.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சீன நிறுவனங்கள் விலையை உயர்த்தியும், வாங்கப்பட்ட கருவிகளை சீனாவிலிருந்து அந்தந்த நாடுகளே எடுத்துச் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், All Test Biotech, Wondfo Biotech ஆகிய இரண்டு நிறுவனத்திடமிருந்து சுமார் 20 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகளை பிரிட்டன் அரசு வாங்கியுள்ளது. இவற்றில் 5 லட்சம் கருவிகள் கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவை தவறான முடிவுகளை தெரிவிப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சீன நிறுவனங்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற பிரட்டன் அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அடுத்த 20 நாட்கள் கழித்தே அவருக்கு ரத்தத்தில் எதிர்ப்பு சக்தி உருவாகும் என பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே, அந்த 20 நாட்களுக்குள் விரைவு பரிசோதனை செய்தால் கொரோனா தொற்றை உறுதி செய்ய முடியாது என்று கூறியுள்ள பிரிட்டன் மருத்துவர்கள், விரைவு பரிசோதனை உபகரணம் குறித்து அரசு தவறான தகவலை தந்துள்ளதாக குற்றச்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீன நிறுவனங்கள், பிரிட்டிஷ் அரசு தவறான புரிதலை கொண்டுள்ளதாகவும், வேண்டுமென்றே பெரிதுபடுத்துவதாகவும் குற்றச்சாட்டியுள்ளன. ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருக்கு கூடுதலாக பரிசோதனை செய்யவே விரைவு பரிசோதனை கருவியை பயன்படுத்த வேண்டும் என்று Wondfo Biotech நிறுவனம் கூறியுள்ளது.
பிற நாடுகளில் பயன்படுத்தும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே, சீனாவில் இந்த கருவிகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதற்கு தேவையான மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்வதாகவும் சீனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான கருவிகளை கொண்டு தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் முடிவுகள் தற்போது கேள்விக்குறியாகி உள்ளதால், இந்த முடிவுகளை அறிந்து உடல்நிலையை உறுதி செய்த மக்களும் மருத்துவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.