ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பிடியில் இருந்த ராணுவ அதிகாரிகள் 62 பேர் சிறையை உடைத்து மீட்கப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பட்கிஸ் மாகாணத்தில் உள்ள பாலா முர்ஹாப் மாவட்டத்தில் இருக்கும் தலீபான்கள் சிறையில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவத்தை சேர்ந்த அதிகாரிகள் 62 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். தலீபான்களிடம் இருந்து அவர்களை மீட்க ராணுவம் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை உள்ளூர் அதிகாரிகளின் உதவியோடு தலீபான்களின் சிறையை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர். சிறைக்கு காவலாக இருந்த தலீபான் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர்கள் சிறையை உடைத்துக்கொண்டு அதிரடியாக உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த ராணுவ அதிகாரிகள் 62 பேரையும் பத்திரமாக மீட்டு சென்றனர்.
முன்னதாக நேற்று முன் தினம் மாலை பக்லான் மாகாணத்தில் கவ்ஜா அல்வான் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் போலீஸ் சோதனை சாவடியை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இதில் போலீசார் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை உறுதிப்படுத்திய மாகாண தலைமை போலீஸ் அதிகாரி, போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக கூறினார். எனினும் எத்தனை பயங்கரவாதிகள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் மேற்கு மாகாணமான ஹெரட்டில் உள்ள ஷாவால் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதிகள் 2 பேர் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த போர் விமானங்கள் தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை குறிவைத்து குண்டு மழை பொழிந்தன.
இதில் தலீபான் தளபதிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் ஆயுதங்கள் நிரப்பப்பட்ட அவர்களின் வாகனங்களும் நிர்மூலமாக்கப்பட்டன. கொல்லப்பட்ட இந்த 2 தளபதிகளும் ஹெரட் மாகாணம் உள்பட நாடு முழுவதும் நடந்த பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் என ராணுவம் தெரிவித்துள்ளது.