https://www.facebook.com/296289357796693/posts/770959300329694/
தொடர்ச்சியான கால இழுத்தடிப்புக்கள் மூலம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனது நாடாளுமன்ற கன்னியுரையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எமது மக்களின் அபிவிருத்தியும், அரசியல் தீர்வும் பொறுப்புக்கூறலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்ற நிலையில் அபிவிருத்தியை மட்டும் காட்டி மற்றவையை மழுங்கடிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது இன்று (27) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,
“1833ம் ஆண்டு பிரித்தானியர்களால் நிர்வாக வசதி கருதி இந்தத் தீவினுடைய இராச்சியங்கள் அனைத்தும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் இராச்சியமும் தென்பகுதி சிங்கள இராச்சியங்களும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.
அதற்குப் பின்னர், நாட்டிலும் இந்த நாடாளுமன்ற அவையில், எண்ணிக்கை அடிப்படையிலான பெரும்பான்மை என்பது எண்ணிக்கை அடிப்படையில் சிறிதாக்கப்பட்ட எமது இனத்தின் குரலையும் இருப்பையும் அடையாளத்தையும் கெளரவத்தையும் கேள்விக்கு உட்படுத்தப்பட்ட வரலாற்றில் இருந்துதான் இந்தத் தீவின் தேசிய அடிப்படைப் பிரச்சினை ஆரம்பமாகி இருந்தது.
ஜனநாயகத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கவேண்டிய இந்த உயரிய சபையானது குறிப்பாக ஜனநாயகத்துக்கு அப்பால் ஒரு இனநாயகமாக பரிணமித்துக்கொண்டிருக்கின்ற இந்த அவையில் ஜனநாயகத்தின் உண்மைத் தன்மையை எதுவித பேதமுமின்றி தாங்களும் இந்த சபா பீடமும் பேணவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளினை வரலாற்று ரீதியான தாயகமாகக் கொண்டு தனக்கென தனித்துவமாக மொழி, கலை, கலாசாரப் பண்புகளைப் பேணுகின்ற தேசிய இனத்தின் பிரதிநிதிகளாக தமிழ் தேச இறைமை மற்றும் சுய நிர்ணய அடிப்படையில் நாம் ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என்று நாம் முன்வைத்த கொள்கைகளை ஏற்ற எமது மக்கள் எமக்களித்த ஆணையின் பிரகாரம் அவர்களின் குரலாக இந்த அவையில் நாம் பிரசன்னமாகியிருக்கின்றோம்.
தொடர்ச்சியான போரின் காரணமாக இன அழிப்பின் ஒடுக்குமுறைகளாலும் வடுக்களை சுமந்து நிற்கின்ற மக்களாகிய நாங்கள் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையுடனும் எமது குரல்களை வெளிப்படுத்தியிருக்கின்றோம்.
உண்மையில் இருந்தே நேர்மையான சமாதானம் பிறக்கும். எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கவேண்டுமெனில் இங்குள்ள அனைவரும் பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்தே பிரச்சினையின் தீர்வுக்கான ஆரப்பப் படிகள் ஆரம்பமாகின்றன.
மாறாக பிரச்சினையின் மூலத்தையும் பிரச்சினையால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் அதற்கான நீதியான தீர்வு எது என்பற்றையும் மறைத்து, மறந்து வெறுமனே மேம்போக்கான நிலையில் பிரச்சினையை அணுகுவது ஒருபொழுதும் பிரச்சினைக்கான தீர்வினைக் கொண்டுவரப்போவதில்லை.
இதற்கு அப்பால் தார்மீக ரீதியிலும் சரி, தந்திரோபாய ரீதியிலும் சரி அது தவறான செயற்பாடாகும். அதனடிப்படையில் இலங்கைத் தீவில் தமிழர்களின் இருப்பை, அடையாளத்தை கேள்விக்கு உள்ளாக்குகின்ற இந்த இனப் பிரச்சினையின் மூலத்தையும் அதன் விளைவாக தமிழர்கள் மேல் இழைக்கப்பட்ட இனப் படுகொலைக்கான நீதி வழங்கலையும் ஏற்பதன் மூலமே இந்த நாட்டில் நிரந்தரமானதும் கௌரவமானதுமான சமாதானத்தை நாம் அடைய முடியும்.
அப்படியான ஒரு சமாதானம் இந்த தீவில் அனைவரையும் கெரவமான சம உரித்துடையவர்களாக அவர்களது அடையாளங்களுடன் வாழ்வதற்கு வழிவகுக்கும்.
எவரையும் இரண்டாம் தரப் பிரஜைகளாக கணிக்கும் ஒரு பிற்போக்குத் தனமான பழமைவாதத்தை விடுத்து நவீன அரசியல் உலகில் சிவில் பண்பாடுகளின் உச்சமாக விளங்குகின்ற நாடுகளின் முற்போக்கான அரசியல் அமைப்புக்களை முன்னுதாரணமாக் கொண்ட ஒரு அரசியல் தீர்வொன்றின் மூலமாக அத்தகைய உன்னதமான ஓர் எதிர்காலத்தை நாம் அடைய முடியும்.
இலங்கைத் தீவில் வடக்கு கிழக்கை வரலாற்றுத் தாயகமாக் கொண்டதனித்துவமான ஒரு மொழி கலை, கலாசாரப் பண்புகளைக் கொண்ட ஒரு தனித்துவமான இறைமை கொண்ட தேசமாக தமிழர்கள் ஒற்றுமை உணர்வுடனும் கௌரவத்துடனும் இந்த நாட்டினுள் வாழும் விருப்பை மீண்டும் மீண்டும் தமது ஜனநாயக ஆணையின் மூலம் வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்கள்.
செயல்கள் எவ்வாறாக இருப்பினும், அப்படியான ஒரு மக்கள் ஆணையின் மீதே வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெரும்பாலான உறுப்பினர்கள் இங்கு வந்திருக்கின்றார்கள்.
அவர்கள் எந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தமிழர்களுடைய உரிமைகளைப் பெற்றுத்தருவோம் என்றுகூறி தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமையைப் பெற்றுத்தருவோம், தமிழர் தேசம் தலைநிமிர உழைப்போம் என்று கூறித்தான் வடகிழக்கைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த சபைக்கு வந்திருக்கின்றார்கள்.
ஆகவே, சிங்கள தேசம் உங்களுடைய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்ற ஆணை எவ்வாறானதோ, அதேபோன்று வடக்கு கிழக்கிலே தமிழர்கள் தனித்துவமான இறைமை கொண்ட தேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றுதான் இந்த ஆணையை வழங்கியிருக்கின்றார்கள்.
அந்த அணைக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான ஒரு குரலாகத்தான் நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம் என்பதனை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம். ஜனநாயகத்தின் மிக உயர் சபையான இந்த நாடாளுமன்று எமது மக்களின் ஜனநாயக ஆணைக்கான மதிப்பை வழங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
தொடர்ச்சியான பொருளாதாரத்தடை, எமது தேசத்தின் மீதான யுத்தம், அடக்குமுறை காரணமாக ஒடுக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் முற்றாக அழிந்திருக்கின்றது. அது மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் இங்கிருக்கின்ற யாரும் கரிசனைகொண்டு கருத்துக்களை முன்வைத்திருக்காமை என்பது கவலைக்குரிய விடயம்.
அதேவேளையிலே, இந்தப் பகுதிகள் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கும் என நான் நினைக்கவில்லை. எமது மக்களின் பொருளாதார அபிவிருத்தியும் திட்டமிடலும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாறாக அந்த மக்கள் மீது மேலிருந்து கீழாக திணிக்கப்படுவதாக அது இருக்கக்கூடாது. அந்த மக்களிடம் இருந்து எழுகின்ற எதிர்பார்ப்புக்களின் அடிப்படையிலேதான் அந்த அபிவிருத்தி என்பது மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவே உண்மையான அபிவிருத்தியாக அமையும்.
எமது மக்களின் அபிவிருத்தியும், அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. எனினும் ஒன்றை மற்றொன்று பிரதீயீடு செய்ய முடியாது.
தொடர்ச்சியான கால இழுத்தடிப்புக்கள் மூலம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது என்பதனை எமது மக்கள் அவ்வப்போது நிரூபித்து வந்துள்ளார்கள்.
மேற்சொன்ன விடயங்களின் அடிப்படையிலே அபிவிருத்தியை மட்டும் முன்னிறுத்தி ஏனையவற்றை மழுங்கடிக்கலாம் என்ற பிழையான அணுகுமுறையை எமது மக்கள் நிராகரித்து வந்துள்ளார்கள்
மீண்டும் மீண்டும் ஜனநாயக தேர்தல்கள் மூலம் எமது மக்கள் வழங்கிய தீர்ப்புக்களின் ஊடாக பொறுப்புக்கூறலும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் வெவ்வேறாக அணுகப்பட வேண்டும் என்பதைனை மக்கள் வெளிப்படுத்தி வந்துள்ளார்கள்” – என்றார்.