“நேட்டோ” கூட்டமைப்பில் இணைந்துகொள்ளும் உக்ரைனின் கனவு தள்ளிப்போவதாக, ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில், சர்வதேச நீதித்துறை வல்லுனராக பணியாற்றும் “Stian Øby Johansen”, உள்ளூர் நாளிதழொன்றுக்கு வழங்கிய கருத்துப்பகிர்வில் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன், நேட்டோவின் அங்கத்துவ நாடாக இணைந்துகொள்ளுவதற்கு சட்டரீதியிலான தடைகளேதும் கிடையாது என்றாலும், அமெரிக்கா எதை விரும்புகிறதோ அதனடிப்படையிலேயே இந்த விடயமும் கையாளப்பட்டு வருகிறது எனவும் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், நேட்டோவில் உக்ரைனை இணைத்துக்கொள்வதற்கு ஹங்கேரி பலத்த எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும், எனினும், ஹங்கேரியின் இந்த எதிர்ப்பை போலந்து, ஹங்கேரியுடனான தனது அரசியல் உறவுகளை பயன்படுத்தி ஹங்கேரியை சமாதானம் செய்துவைக்க முயன்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதுவாயினும், போரொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ள உக்ரைனை தற்சமயம் நேட்டோவுக்குள் உள்வாங்குவதை அமெரிக்காவும் விரும்பவில்லை என தெரிவிக்கப்படும் அதேவேளை, நேட்டோ கூட்டமைப்பின் விதிகளின் பிரகாரம், நேட்டோ கூட்டமைப்பில் உள்ள ஏதாவது ஒரு நாடு தாக்குதலுக்குள்ளானால் அது, முழு நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் மீதான தாக்குதலாகவே கொள்ளப்படும் என்பதால், நேட்டோ கூட்டமைப்பில் உள்ள அத்தனை நாடுகளும் எதிர்த்தாக்குதல்களுக்கான தத்தமது உதவிகளை அனைத்து வழிகளிலும் வழங்க வேண்டியது அவசியம் என்பதும் உற்று நோக்கத்தக்கது.
இந்நிலையில், உக்ரைன்மீது முழு அளவிலான இராணுவ நடவடிக்கையொன்றுக்கு ரஷ்யா 400.000 படையினரோடு தயாராகி வரும் நிலையில், எதிர்வரும் இளவேனில் காலத்தில் ரஷ்யாவின் மும்முரமாக தாக்குதல்கள் உக்ரைனில் இடம்பெறுமென பெரிதும் எதிர்பார்க்கப்படுவதால், உக்ரைனை இப்போது நேட்டோவில் உள்வாங்கினால், ரஷ்யாவால் உக்ரைன் தாக்கப்படும்போது அனைத்து நேட்டோ நாடுகளும் போரில் இறங்கவேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும் என்பது கவனிக்கத்தக்கது.
ரஷ்யாவோடு நேட்டோ கூட்டமைப்பு நேரடியான மோதல்களில் ஈடுபடுவதானது, நேட்டோ நாடுகளின் ஆயுத வல்லமையை சேதாரமாக்கும் என்பதோடு, உக்ரைன் விவகாரத்தால் ஏற்கெனவே ஆட்டம் கண்டுள்ள மேற்குலக பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படலாமென்ற அச்சம் நேட்டோ நாடுகளுக்கு இருப்பதை மறந்துவிடலாகாது.
நேட்டோவில் உக்ரைன் இணைவது சாத்தியமாகி வருகிறது என, உக்ரைனிய அதிபர் அடிக்கடி தெரிவித்து வருவதானது, உக்ரைனிய மக்களை தைரியப்படுத்தும் வழிமுறையாக உக்ரைனிய அதிபர் கையாண்டுவரும் உத்தியேயன்றி, உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதென்பது உக்ரைனுக்கு எட்டாக்கனியாகவே தள்ளிப்போகிறது என மேலும் குறிப்பிடும்”Stian Øby Johansen”, எதுவாயினும் அமெரிக்க எதை விரும்புகிறதோ, எதை நினைக்கிறதோ அதன்படியே அனைத்தும் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.