காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் குறிவைத்து அழிப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
காபூல் விமான நிலையத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்பு தாக்குதல்களில் அமெரிக்க படையைச் சேர்ந்த 13 பேர் உட்பட குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்தத் தாக்குதல் நடத்திவர்களை மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டோம். தக்க பதிலடி கொடுப்போம். அவர்களை இலக்குவைத்து ஒழிப்போம் என வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பைடன் கூறினார்.
பயங்கரவாதிகளால் அமெரிக்காவை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவா் தெரிவித்தார்.
சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தலிபன்களால் விடுவிக்கப்பட்டவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதலை தாங்களே நடத்தியதாக ஐஸ்.எஸ்.ஐ.எஸ்.-கே என்ற பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளதையும் அவர் கூட்டிக்காட்டினார்.
ஏனையோர் உயிரைக் காப்பாற்றும் தன்னலமற்ற நோக்கத்துடன் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் நாயகர்கள் என்று பைடன் புகழாரம் சூட்டினார்.
இதேவேளை, காபூலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். -கே பயங்கரவாதிகளால் இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் மேலும் தாக்குதல்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து தாலிபன்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அமெரிக்க மத்தியப் படைப்பிரிவின் தலைவர் பிராங்க் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.