ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தில் பலியான உறவுகளின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, வடமராட்சி கிழக்கு, உடுத்துறையில் உள்ள சுனாமிப் பொது நினைவாலயத்தில் இன்று (26) நடைபெற்றது.
இதன் போது உயிரிழந்த உறவுகளின் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது தமது உறவுகளின் கல்லறைகள் முன்பாக கண்ணீர் மல்க அங்கு வந்திருந்த உறவுகள் கதறியழுதனர்.
உடுத்துறை
கள்ளப்பாடு
ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம்(26) காலை கள்ளப்பாடுஎ உதயம் விளையாட்டுக் கழக மைதானத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அழிப்பேரலையில் உறவுகளைப் பறிகொடுத்த இராசதுரை தவராசா மற்றும், மேரிஜோசெப் தங்கரத்தினம் ஆகியோர் இணைந்து பொதுச்சுடரை ஏற்றிவைத்தனர்.
தென் தமிழீழம்
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் நடைபெற்றது.
மிக உயரமான சுனாமி நினைவுத்தூபியை கொண்டிருப்பதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்ததின்போது அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்டதுமான நாவலடி கிராமத்தில் உள்ள சுனாமி நினைவுத்தூபியில் இன்றைய தினம் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு நாவலடி, புதுமுகத்துவாரம் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக சுமார் 1100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு தசாப்தகாலங்கள் கடந்துள்ளன.
கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவான மக்கள் உயிரிழந்தனர்.
இவ்வாறு ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் 26.12.2024 இன்று உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.
உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர்.
அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபைச் செயலாளர் இராஜஜோகினி ஜெயக்குமார், முல்லைத்தீவு மாவட்ட சமுகசேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் நடராசா தசரதராஜகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
வவுனியா
வவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களின் 20 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று (26) இடம்பெற்றது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ஆழிப்பேரலையின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம்(26) உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
உலகெங்கும் குறிப்பாகத் தமிழ்த் தேசத்தில் இப் பேரலை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் இதன்போது கருத்துரையாடப்பட்டதுடன், உயிரிழந்தவர்களுக்காக ஒளிச்சுடர் ஏற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.