வவுனியா – பன்றிகெய்தகுளம் பகுதியில் தனிநபர் ஒருவரால் அரச காணியை 16 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்கு அப் பகுதி சமூக அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் ஆகியோருடன் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் நேற்று (22) கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது, வவுனியா, பன்றிக்கெய்தகுளம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் கூட பலர் காணியின்றி இருக்கும் போது வெளிமாவட்டத்தவர்கள் உள்ளடங்களாக புதிதாக 16 குடும்பங்களை எமது கிராமத்தில் குடியமர்த்த வெளிநாட்டில் இருந்து வந்து நிற்கும் தனிநபர் ஒருவர் முயற்சி செய்கின்றார்.
அரசாங்கத்தால் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்ட காணியினை முறையான மாற்றீடு செய்யாது அரச காணியில் தனிநபர் தான் விரும்பிய குடும்பங்களை குடியமர்த்த முயல்கிறார். இதனை ஏற்க முடியாது.
எமது மாவட்டத்தில் பலர் காணியில்லாது இருக்கின்ற நிலையில் வெளி மாவட்த்தில் இருந்து மக்களை குடியமர்த்த முயல்வது பிழையான செயற்பாடு. அடுத்து, எமது மாவட்டத்திற்கு என 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
அவர்கள் அனுமதி வழங்காது வேறு அரசியல்வாதிகள், வேறு மாவட்ட எம்.பிகள் எமது மாவட்டத்தில் குடியேற்றத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கியதாக குடியமர்த்தும் வெளிநாட்டு நபர் கூறுகின்றார்.
இதற்கு எமது மாவட்ட எம்.பிகளே முடிவு காண வேண்டும். இதற்கு எமக்கு தீர்வு வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். மேலும், அரச சட்டதிட்டங்களுக்கு அமைவாக குறித்த காணி தனிநபரால் வழங்க முடியாது.
அதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டது என இதன்போது மாவட்ட அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் உறுதியளித்ததாக பொது மக்கள் தெரிவித்தனர்.