போய் வராதே 2024
பொய்களும் கயமைகளும்
இழுக்கும் அழுக்குமாய் நீ
தமிழர் வாழ்வில் புலர்ந்தாய்!
பிரித்தலும் உரித்தலுமாய்
உரிமைக்கான பாதையில்
உவமையாய் கிடந்தாய்!
வேண்டாம்
புத்தம் புது ஆண்டே
நீயும் அப்படி புலர்ந்து விடாதே!
கூன் நிமிர்த்தி மேதகு வழியில்
வான் நிமிர எமை உயர்த்திவிடு!
வரலாறு தந்த வல்லமைகளின்
தியாகத்திலே செதுக்கிவிடு!
மொழியாகி எங்கள் மூச்சாகி
விழி மூடி தூங்கும் வீரர்கள் மீது
உறுதி பூண்ட இனமாக மிளிர!
இழி நிலையை இழுத்தெறிந்து
இனமானம் காக்க!
இனி ஒரு விதிசெய்வோமென
சபதம் எடு ஆண்டே!
வா
புத்தாண்டே
எட்டு தசாப்தங்களாய்
அடக்கப்படும் இனத்தில்
பேரொளியை பிரசவித்துவிடு!
காடு கடல் சேறு நிலமென
நாடு வேண்டுமென போராடி
உதிரம் ஊற்றிய வீரரின்
கனவுகள் மெய்ப்பட!
சாவுகள் மேலிருந்து
ஒரு சரித்திரம் பிறந்திட!
ஊதும் சங்கொலியில்
உரிமை கீதம் இசைத்திட!
ஓர்மையில் நின்று
உலகத்தை வென்றிட!
அறத்தினை ஆன்மாவில்
இருத்தி விடு ஆண்டே!
இயலாமை எனும்
கொடிய நோயை
குணப்படுத்தி!
பிரியாமை எனும்
நற் செயலை
எமக்களித்து!
அறியாமை போக்கி
அறிவுக்கண் திறக்க!
ஆணவம் அடங்கி
ஆனந்தம் பெருக!
ஆசைகள் நீங்கி
அறம் மலர!
பிறந்து வா
புத்தாண்டே!
கொத்துக் கொத்தாக
மாண்டவரை
மனதில் ஏற்றி!
மண்பற்றும் மனிதநேயம்
திடமாய் நிலைத்திட!
மேகத்திரள் போல்
யாகப்பயணத்தில்!
ஓயாத செயலால்
ஓர்மை வளர்த்து!
கூர்மையாய்
அடைகாக்கும்
தாய்மைபோல்!
தாய்நிலம் காப்போமென
ஆன்மபலம் தா
ஆண்டே!