காதலே உன்னதம்
காதலே பரிபூரணம்
காதலே நேசிப்பின் “நிலாவரை”
ஆதலால் மானுடனே!
காதல் செய்வாய்.
காதலிப்பதென்று முடிவெடுத்து விட்டாயானால்’
யாரை காதலிக்கலாம்?
எதிர்ப்பாலார் மீதான காதலெல்லாம்
இங்கு காமம் கலந்தே விற்பனையாகிறது.
தோலில் சுருக்கம் விழுந்தவுடனேயே
அதிகமான “காதல்கள்”
அஸ்தனமனமாகி விடுகின்றன
தெருநாயும் காதலித்தே கலவி செய்கிறது.
இதில் தெய்வீகம் இருப்பதென்பதெல்லாம்
சுத்தப் பம்மாத்து.
வேறேதைக் காதலிக்கலாம்?
அட மானுடனே!
தாயகத்தைக் காதலிக்கக் கற்றுகொள்.
பெற்றதாய் சுமந்தது பத்துமாதம்
நிலம் சுமப்பதோ நீண்டகாலம்.
அன்னை மடியிலிருந்து கீழிறங்கி
அடுத்த அடியை நீ வைத்தது
தாயகத்தின் நெஞ்சில் தானே.
இறுதியில் புதைந்ததோ
அல்லது எரிந்ததோ எருவாவதும்
தாய்நிலத்தின் மடியில் தானே.
நிலமிழந்துபோனால் பலமிழந்துபோகும்
பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்.
ஆதலால் மானுடனே!
தாய் நிலத்தை காதலிக்க கற்றுகொள்..
கவியாக்கம் :புதுவை இரத்தினதுரை