தாலிபான்களின் கட்டுப்பாட்டில் காபூல் விமான நிலையம்: ஆபத்தான நிலையில் அப்பாவி மக்கள்!

You are currently viewing தாலிபான்களின் கட்டுப்பாட்டில் காபூல் விமான நிலையம்: ஆபத்தான நிலையில் அப்பாவி மக்கள்!

பிரித்தானியா, கனடா உட்பட பல நாடுகள் மீட்பு நடவடிக்கையை முடித்துக்கொண்டுள்ள நிலையில், தாலிபான்கள் காபூல் விமான நிலையத்தின் பெரும்பகுதியை மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இனி காபூல் விமான நிலையம் ஊடாக அப்பாவி மக்கள் எவரும் வெளியேற முடியாத இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

கனடா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் மீட்பு நடவடிக்கைகளை முடித்துக்கொண்டாலும், தங்கள் நாட்டவர்கள் உட்பட, ஆப்கன் அப்பாவி மக்களை கைவிட்டு செல்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆகத்து 15ம் திகதி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர், மொத்தமாக 100,000 மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவும், சனிக்கிழமை தங்கள் மீட்பு நடவடிக்கைகளை முடித்துக்கொள்வதாகவும், இனி ராணுவ துருப்புகள் மற்றும் தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து, அப்பாவி மக்கள் பலர் வெளியேற காத்திருந்தாலும், அவர்களை அனைவரையும் மீட்க முடியாமல் போயுள்ளது என குறிப்பிட்டுள்ள பிரித்தானியா, அவர்களை தாங்கள் கைவிட்டுவிடவில்லை எனவும்,

அவர்களுக்காக தொடர்ந்து பாடுபட உள்ளதாகவும், அவர்களுக்கு உதவ எங்களால் முடியும் எனவும், ஆப்கன் அப்பாவி மக்களை எவராலும் மறக்க முடியாது எனவும், அவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ தகுதியானவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான நாடுகள் மீட்பு நடவடிக்கைகளை முடித்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தாலிபான்கள் விமான நிலையத்தில் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு வெளியே, தாலிபான் தலைவர்கள் சனிக்கிழமையன்று கூடுதல் படைகளை நிறுத்தியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த பேரழிவு தரும் தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு அதிக மக்கள் கூடுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தாலிபான்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply