இன்று
எட்டாம்நாள்
உலகத்தில் ஒரு சொட்டு
தண்ணீரும் அருந்தாமல்
உணவு ஒறுப்பு போராட்டத்தினை
உறுதியோடு முன்னெடுக்கும்
முதலாவது ஈகப்பிள்ளையாய்
கண்முன்னே சுருண்டு கிடக்கிறான்
தியாகச்செம்மல் திலீபன்!
புலிப்பிள்ளையாய்
எதிரிகளை கிலிகொள்ள வைத்து
களங்களில் சாதனைகளை நிகழ்த்தியவன்
அறப்போராட்டத்தினையும்
தமிழனால் உறுதியோடும்
இதயசுத்தியோடும் நிகழ்த்திக்
காட்ட முடியுமென
உலகத்தையே திரும்பிப்
பார்க்கவைத்துவிட்டு
பார்த்தீபன் பார்கமுடியாமல்
வார்த்தைகளை உதிர்க்க முடியாமல்
வறண்ட நிலமாய் மேனிபிளந்து போய்
நீரின்றி சுருண்ட பயிராய்
காய்ந்துபோய்க் கிடக்கிறான் ஈகப்பெருமகன்!
தமிழீழம் எங்கணும்
உணவு தவிர்ப்புப்போராட்டம்
மக்களாலும் போராளிகளாலும்
முன்னெடுக்கப்பட்டது!
யாருமே எதிர்பார்க்கமுடியா
மக்கள்திரள் நல்லூரை மண்ணை
நிறைத்தது!
வடகிழக்கெங்கும் மக்கள் புரட்சி
வெடித்தது!
ஏன் அவனியெங்கும் திலீபனின்
ஈகம் எரிதணலாய் மூண்டது!
மண்ணின் விடுதலை பற்றி சிந்திக்கத்தவறிய
மாணவ சமூகத்தினரின்
மனதிலே விடுதலைத்தீ
கனன்றது!
யாழ் நகரமே மக்கள் நெரிசலால்
நிரம்பி வழிய
ஆக்கிரமிப்பு படையின் உலங்கு
வானூர்தி
படமெடுத்து நெளிய
ஊரேழு மைந்தனின்
உண்ணாநிலைப்போராட்டம்
மண்ணின் உரிமைக்காய்
உயிரை மெல்ல மெல்ல தின்று
சரிதம் எழுதிக்கொண்டு இருக்கிறது!
பாரதமோ கண்ணிருந்தும் குருடாய் வஞ்சனையை
பிரசவித்துக்கொண்டிருக்கிறது!
✍தூயவன்