என் இனம் என் சனமென
கண்ணை இமை
காப்பதுபோல்
மண்ணையும்
மக்களையும்
மானசீகமாக
காதலித்து
ஓயாத புயலாக
தேசத்தின் தெருக்களெல்லாம்
துள்ளித்திரிந்த
புரட்சிப்புலியொன்று
சுயநினைவின்றிப்
போனது!
எப்போதவது இருந்து
ஒரு தடவை அசைவதை மட்டுமே
அருகிலிருந்தவர்
கண்ணுற்று
கதிகலங்கி நின்றனர்!
ஒரு அகிம்சைத்தீ
வெளிச்சத்தைப்
பரப்பிவிட்டு
தன்னுடைய
செயற்பாடுகளை
நிறுத்திக்கொள்ள
தயாராகிவிட்ட நிலையில்
சூழ்ந்துவரும்
இலட்சக்கணக்கான
மக்களின் இதயங்கள்
விம்மி வெடித்துக்கொண்டே
இருக்கிறது!
அடையாள உண்ணாநிலைப் போராட்டங்களும்
மடை உடைத்துப்பாயும்
மக்களின் கண்ணீரும்
ஆர்ப்பரிக்கும் உணர்வலைகளும்
தொடர்ந்தாலும்!
என்னசெய்வது
சுய அரசியல்
வியாபாரிகளின்
விற்பனை அரியலில்
எங்கள் வித்தகன்
நெஞ்சடைக்க
நெடுமூச்செறிய
வல்லரசொன்றின்
வடுக்களை தாங்கியவாறு
தகித்துக் கொண்டிருக்கிறான்!
எங்களுக்காய்
தன்னையே உருக்கும்
அண்ணைத்தாயின்
பிள்ளையை
அன்னைத்தமிழால்
அலங்கரித்து
உள்ளங்களில்
உணர்வுகளால்
தாங்கியவாறு
உரிமைக்காய்
ஒன்றாவோம்
பார்த்தீபனின்
கனவை
வென்றாவோம்!
✍தூயவன்