ஐந்து நாட்களாய்
படுத்தபடுக்கையாய்
உணவொறுத்தும்
நீர் தவிர்த்தும்
ஐந்தம்சக்கோரிக்கையோடு
இந்திய அரசிடம்
நீதிக்காய்
காத்துக்கிடக்கும்
சத்தியநாயகன்
இன்று
அதிசயமாய்
ஐந்து மணிக்கே
படுக்கையை விட்டு
கண்விழித்துவிட்டார்!
சிறுநீர்கழிக்க முடியாது
அணுவணுவாக
வலிகளையும்
வதைகளையும்
தாங்கிநின்ற
தியாகத்தின் பிள்ளை
இன்றுதான்
சிறுநீர் கழிக்க
முடிந்தது!
ஆனாலும்
அவர்பட்ட இன்னல்களை
அருகிருந்தவர்
உருகி உருகி
பகிரும் வார்த்தைகள்
உதிரத்தை
உறைய வைக்கிறது!
மெல்ல மெல்ல
கருகும் மலராய்
கண்முண்ணே
தேயும் நிலவாய்
தளபதிகள் போராளிகள்
மக்கள் மாணவர் முன்னே
தமிழினத்திற்காய்
தன்னை உருக்கும்
தற்கொடையாளனின்
தன்னம்பிக்கையில்
உன்னத தியாகப்பயணம்
மண்ணில் வரலாறாய்
எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது!
ஆனாலும்
அமைதி முகத்தோடு
ஆக்கிரமித்து நிற்கும்
அந்நிய அரசின்
அதிகார வர்க்கமோ
மனிதத்தை இழந்துபோய்
சுய அரசியலுக்காய்
அசுரமனம்கொண்டு
மரக்கட்டையாய்
மாறியது!
✍தூயவன்