எதிர்வரும் ( 15.09.2023) வெள்ளிக்கிழமை அதாவது நாளை மறு நாள் ஆரம்பமாகவுள்ள தியாகி திலீபன் அவர்களின்- (36) வது, ஆண்டு நினைவு நாட்களை முன்னிட்டும்,
அவரது தியாகத்தை நினைவு கூரும் வகையிலும், எமது இளம் சந்ததியினரிடம் அவரது தியாகத்தை எடுத்துச் சொல்லும் வகையிலும், வடிவமைக்கப் பட்ட ஊர்திப் பவனி ஒன்று இம் முறை தமிழர் தாயகம் முழுவதிலும் முன்னெடுக்கப் படவுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப் படவுள்ள இந்த ஊர்திப் பவனி ஆனது அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் இருந்து நாளை மறு நாள் காலை-09.45,மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
அங்கிருந்து நகர்ந்து தாயகம் முழுவதிலும் சென்றடைந்து அவர் ஈகைச் சாவடைந்த நாளான ஒக்ரோபர்
மாதம் 21,நாள் முற்பகல்-10,மணிக்கு, யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் அவர்களது திருவுருவச் சிலையை வந்தடைந்து நிறைவடையவுள்ளது.
1987 ம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கை என்ற கூட்டுச் சதி நடவடிக்கை மூலம் அமைதிப் படை என்ற போர்வையில் இந்தியப் படைகள் இலங்கை வரவளைக்கப் பட்டு தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்றவேளை
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாகி திலீபன் அவர்கள் (15.09.1987 ) அன்று காலை- 09,மணியளவில் நல்லூரின் முன்றலில் உணவு நீராகாரம் இன்றிய உண்ணா நோன்புப் போராட்டத்தை
ஆரம்பித்தார்.
அவரது கோரிக்கைகளான-
(1) மீள்குடியேற்றம் என்ற பெயரில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாகத் திட்ட மிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
(2) சிறைக்கூடங் களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப் பட வேண்டும்.
(3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
(04) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.
(05) தமிழ்ப் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
என்ற அவரது கோரிக்கைகள் எவையும் இந்தியப் படைகளாலும் இந்திய அரசாலும் கண்டு கொள்ளப் படாத நிலையில் தனது கோரிக்கையிலும், கொள்கையிலும், உறுதியாக இருந்த தியாகி திலீபன் அவர்கள்( 21.10.1987) அன்று காலை- 10.48,மணிக்கு ஈகைச் சாவடைந்திருந்தார்.
தியாகி திலீபன் அவர்களின் ஈகைச் சாவானது அகிம்சையின் பிறப்பிடம் எனத் தன்னைக் காட்டிக் கொண்ட இந்திய தேசத்தின் போலி முகத்திரையை உலகறியச் செய்ததுடன் ஈழத்தமிழர் வரலாற்றில் இந்திய தேசம் தொடர்பில் என்றும் அழியாக் கறையை ஏற்படுத்திக் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.