தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரகளின் ஒன்பதாம் நாள் தியாக வேள்வி.!

You are currently viewing தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரகளின் ஒன்பதாம் நாள் தியாக வேள்வி.!
Lieutenant Colonel Thileepan

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.

ஆனால் இந்தக் குயில்…?

எம்மை – எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..?

திலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன்.

அவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன.

உதடுகள் அசைகின்றன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை.

உதடுகள் பாளம், பாளமாக வெடித்து வெளிறிவிட்டிருந்தன.

கண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன.

இன்று காலை எட்டரை மணியில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்துக் கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் யாழ். கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்து, இந்தியப் படையினர் வெளியே வராதவாறு மறியல் செய்யத் தொடங்கினர்.

பொதுவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வந்த அதே வேளை பொது மக்களின் குமுறலும் அதிகரிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

இன்று காலையில் இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டனர்…… ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான் !

கோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக் கணக்கான பொது மக்களின் எழுச்சியைக் கண்ட பின்னர் தான் தளபதியவர்கள் தலைவர் பிரபாகனைக் காணப் பறந்து வந்திருக்க வேண்டும்.

இன்று காலை 10 மணியளவில் திலீபனின் மேடைக்கு அருகேயுள்ள மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.

இந்திய வம்சாவழியினர் சார்பில் பேசிய திரு.கணேசராசா என்பவர் ‘பாரத அரசு விடுதலைப் புலிகளின் ஐந்து அம்சக் கோரிக்கையை ஏற்று திலீபனின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டுமென்றும் இல்லையேல் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப் பேற்க வேண்டும்’ என்றும் பேசினார்.

திலீபனை பார்வையிட வருவோர் தங்கள் கருத்துக்களை சில நாட்களாக எழுத்து மூலம் வழங்கி வருகின்றனர். இதற்காக நான்கு போராளிகள் கை ஓயாமல் ஓர் மூலையில் அமர்ந்திருந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 1500 இற்கும் மேற்பட்டோர் தமது கருத்துக்களை மிக உருக்கமாக எழுதியிருந்தனர்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சகல அரச அலுவலகங்களிலும் வேலைகள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்.

சங்கானை உதவி அரச அதிபர் பிரிவிலும் புங்குடுதீவு அரசாங்க அதிபர் பிரிவிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திலீபனுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மறியலும் இருந்தனர். இதைப் போல் பல கிராமங்களில் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து மக்கள் உண்ணா நோன்பு அனுஷ்டித்தன்.

எங்கும் – எதிலும் திலீபன் என்ற கோபுரம் மக்கள் சக்தியினால் உயர்ந்து விட்டதைக் காண முடிந்தது. ஆம் ! மக்கள் புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது.

திலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள், இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கு மகஐர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

1. யாழ் பிரஐகள் குழுக்களின் இணைப்புக்குழு. (இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது)
2. வட பிராந்திய மினி பஸ் சேவைச் சங்கம். (பிரதி தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டது)
3. வட மாகாணம் பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஐம்
4. தொண்டைமானாறு கிராம மட்ட கடற் தொழில் சமூக அபிவிருத்திச் சங்கம்
5. வட பிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன அவற்றில் சிலவாகும்.

இன்று மன்னாரிலுள்ள இந்திய அமைதிப்படை முகாமுக்கு முன், திலீபனுக்கு ஆதரவாக மகஐர் ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்ற போது ஆத்திரமடைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது ஒருவர் அதில் இறந்து விட்டதாகவும், 18 பேர் படுகாயமடைந்ததாகவும் எமது தகவல் தொடர்புச் சாதனச் செய்திகள் கூறுகின்றன.

இன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்தியத் தூதுவர் டிக்ஷிற்-தலைவர் பிரபாவைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பது தான் அது! ஆம் பிற்பகல் 1-30 மணியிலிருந்து பிற்பகல் 6-30 மணிவரை, இரு குழுக்களும் அமைதியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்தியத் தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள்:-

தூதுவர் திரு. ஜெ. ஏன். டிக்ஷிற்
இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்
அமைதி காக்கும் படைத் தளபதி மேஐர் ஜெனரல் ஹர்கீத் சிங்
பிரிகேடியர் பெர்னான்டஸ்
இந்தியத் தூதரகப் பாதுகாப்பு அதிகாரி, கப்டன் குப்தா ஆகியோர்

விடுதலைப் புலிகளின் தரப்பில்:-

தலைவர். திரு. வே. பிரபாகரன்
பிரதித் தலைவர். திரு. கோ. மகேந்திரராசா (மாத்தயா).
திரு. அன்ரன் பாலசிங்கம் (அரசியல் ஆலோசகர்)
திரு. செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்)
திரு. சிவானந்தசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்ததும், என்னை அறியாமலே என் மனம் துள்ளிக் குதித்தது. ஒன்பதாம் நாளான இன்று ஒரு நல்ல முடிவு எப்படியும் ஏற்படும்……. அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட சிகிச்சைகள் அளித்தால் 24 மணித்தியாலங்களில் அவர் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்…..

எமக்காக இத்தனை நாட்களாகத் துன்பப்பட்டு அணு, அணுவாகத் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம், நிச்சயம் பூத்துக் குலுங்கத்தான் போகிறது…….. என்ற கற்பனைக் கடலில் இரவு 7-30 மணிவரை நானும், என் நண்பர்களும், மிதந்து கொண்டிருந்தோம்.

இரவு 7-30 மணிக்கு அந்தச் செய்தி என் காதில் விழந்தபோது இந்த உலகமே தலை கீழாக சுற்றத் தொடங்கியது….. அந்தக் கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்த்து தவிடு பொடியாகியது.

ஆம் ! பேச்சுவார்த்தையின் போது இந்தியத் தூதுவரால் வெறும் உறுதி மொழிகளைத்தான் தர முடிந்தது…. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. எழுத்தில் எந்தவித ஊறுதி மொழிகளையும் தர இந்தியத் தரப்பு விரும்பவில்லை என்பதை அவர்களின் நடத்தை உறுதி செய்தது. திலீபனின் மரணப் பயணம் இறுதியானது என்பதையும் அது உணர்த்தியது.

– தியாக வேள்வி தொடரும்….!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பகிர்ந்துகொள்ள