யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அண்மையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் கொலைக்கு அவரது( பேர்த்தியார்) அம்மம்மாவே காரணம் என்பது விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
கடந்த (12.09.2023) செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி பிரபல தனியார் மருத்துவமனைக்கு அருகான விடுதி ஒன்றில் இருந்து சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட துடன் வயோதிபப் பெண் ஒருவரும் சுய நினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந் நிலையில் அவர் மருத்துவ சிகிச்சைகளின் பின் உடல் தேறிய நிலையில் சம்பவம் குறித்து கோப்பாய் சிறீலங்கா காவல்த்துறையினர் அவரிடம் நடாத்திய விசாரணைகளின் போதே உயிரிழந்த சிறுமி தனது பேர்த்தி என்றும் அதாவது தனது மகளது மகள் என்றும் அவரைத் தானே ஊசியூடாக உடலில் விஷ மருந்தைச் செலுத்தி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
தனது இந்த முடிவுக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் தான் திருகோணமலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும்தனது பெயர் நாகபூசணி-அகவை- 55 என்றும் தனது பேர்த்தியின்பெயர் பாத்திமா ஹீமா-அகவை-12,என்றும்
தனது மகள் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர்களுக்கு தற்போது உயிரிழந்த சிறுமி பிறந்த சிறிது காலத்திலேயே அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருவரும் மறுமணம் செய்து கொண்டதாகவும் இதனால் தனது பேர்த்தியை தானே வளர்த்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் தனது பேர்த்தியை அவரது தந்தை தன்னிடம் தருமாறு கேட்டதாகவும் அதற்கு தான் சம்மதித்து சிறிது நாட்கள் தந்தையுடன் வாழ்வதற்கு அனுப்பி வைத்ததாகவும் இதனால் தான் மன அழுத்தத்திற்கு உள்ளாகிய நிலையில் மீண்டும் அவரைத் தன்னுடன் அழைத்து வந்து வைத்திருந்த தாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த நிலையிலேயே சிறுமியையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் வந்து திருநெல்வேலி உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பேர்த்திக்கு சிகிச்சை பெற வந்தோம் எனத் தெரிவித்து அதன் அருகான தனியார் விடுதியின் அறை ஒன்றை உரிமையாளரிடம் வாடகைக்குக் கேட்டுப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பேர்த்தியின் எதிர்காலம் குறித்த மன அழுத்தம் அதிகரித்த நிலையில் அவரையும் கொன்று விட்டு தானும் சாவதற்கு முடிவெடுத் தாகவும்
அதற்காகத் தான் மருத்துவ தாதியாகப் பணியாற்றியபோது வழங்கப்பட்ட அடையாள அட்டையைப் பயன் படுத்தி பார்மசி ஒன்றில் தூக்க மாத்திரைகள் மற்றும் மருந்து செலுத்தும் ஊசி மற்றும் மருந்துகளை வாங்கியதாகவும்
முதலில் தூக்க மாத்திரைகளை தேனீரில் கலந்து பருகக் கொடுத்து நித்திரை செய்தவுடன் ஊசி மூலம் மருந்தை ஏற்றிய தாகவும் பின்பு தானும் தனது உடலில் ஊசிமூலம் அதே மருந்தை ஏற்றிக்கொண்டதாகவும்
தெரிவித்தார் என விசாரணைகளை மேற்கொண்டகோப்பாய் சிறீலங்கா காவல்துறையினரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.