திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 61 புதிய தொற்றார்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். 31 ஆண்களும் 30 பெண்களும் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக கந்தளாய் 15, பதவி சிரிபுர 10, ஹோமரன்கடவெல 9, மூதூர் 9, சேருவில 7, உப்புவெளி 5, குறிஞ்சாகேணி 3, கிண்ணியா 3 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் 48 பேர் கொவிற் காரணமாக மரணத்தை தழுவியுள்ளனர். சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் வாரியாக திருகோணமலை 13 கிண்ணியா 10 உப்புவெளி 9 குறிஞ்சாக்கேணி 7, மூதூர் 5, கந்தளாய் 3, குச்சவெளி 1 என மரணங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
கிளிநொச்சி
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த தகவல்கள் தொற்றாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் திணைக்களத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்த எண்ணிக்கையுடன் கடந்த 24 மணி நேரங்களில் வடக்கில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று
யாழ்ப்பாணம்
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குடாநாட்டினைச் சேர்ந்த 32 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குடாநாட்டினைச் சேர்ந்த 165 பேருக்கு இன்று யாழ்.பல்கலைக்கழக ஆய்கூடத்தில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல யாழ். மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவற்றில் ஒருவர் உயிரிழந்த இணுவில் கந்தசுவாமி ஆலயத்தின் குருக்கள் ஆவார்.
இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் வடக்கில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 42 என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று
மட்டக்களப்பு
மட்டக்களப்பு சிறைச்சாலையில் எழுமாற்றாக 62 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.