இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி விமான எரிபொருள் தட்டுப்பாடும் அங்கு தீவிரமாக உள்ளது. இதனால் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. எனினும் கொழும்புவில் இருந்து ஜெர்மனியின் பிராங்க்பர்ட், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு இயக்கப்படும் விமானங்களால் அதிக வருவாய் ஈட்டப்படுவதால் இந்த தடத்தில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த விமானங்களுக்கும் போதுமான எரிபொருள் கிடைக்கவில்லை. எனவே இந்த விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்து எரிபொருள் நிரப்பி செல்கின்றன. அத்துடன் ஊழியர்கள் மாற்றும் மையமாகவும் அந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றன. சென்னை விமான நிலையத்தை விட திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே இருப்பதால், அந்த விமான நிலையத்தை இலங்கை விமானங்கள் தேர்ந்தெடுத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்திய விமானங்களுக்கு வழங்கப்படும் அதே விலையில் இலங்கை விமானங்களுக்கும் எரிபொருள் வழங்கப்பட்டு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. இலங்கை விமானங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளால் விமானம் ஒன்றுக்கு1 லட்சம் டாலருக்கு மேல் வருவாய் கிடைப்பதாக திருவனந்தபுரம் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.