திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது! மருதங்கேணிக்கு அழைத்துச்செல்லும் காவல்துறை!!

You are currently viewing திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது! மருதங்கேணிக்கு அழைத்துச்செல்லும் காவல்துறை!!

ஸ்ரீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முதற்கட்டமாக கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் அங்கிருந்து மருதங்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்படுவதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரு. கஜேந்திரகுமார், 08.06.23 அன்று, மருதங்கேணி காவல் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்கவேண்டும் என முன்னதாக அழைப்பாணை அவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும், முதல் நாளே, அதாவது 07.06.23 அன்றே அவசர அவசரமாக அவர் கைது செய்யப்பட்டமையானது, முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த அவரது நாடாளுமன்ற உரையை தடுப்பதற்காகவே என கூறப்படுகிறது. இன்று, 07.06.23 அன்று, சிறப்புரிமை மீறல் தொடர்பாக பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்து திரு. கஜேந்திரகுமார் உரையாற்றவிருந்த நிலையில், அவரது உரை ஸ்ரீலங்கா அரசுக்கு நெருக்கடிகளை உண்டாக்குமென எதிர்வு கூறப்பட்டதால், எவ்வாறாயினும், திரு. கஜேந்திரகுமார் நாடாளுமன்றத்துக்கு செல்லமுடியாதவாறு தடுக்கப்படும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திட்டமிட்டபடி தனது நாடாளுமன்ற உரையை நிறைவு செய்த பின்னர், மருதங்கேணி காவல்நிலைய ஆணைக்கமைய, நாளைய தினம் 08.06.23 அன்று மருதங்கேணி காவல் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலத்தை வழங்குவதாகவும், நாடாளுமன்றம் சென்று உரையாற்ற அனுமதிக்குமாறும் சபாநாயகருக்கு திரு. கஜேந்திரகுமார் விடுத்திருந்த வேண்டுகோள் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையிலும், நாடாளுமன்றத்துக்கு திரு. கஜேந்திரகுமார் செல்வதை தடுக்கும் ஒரே குறிக்கோளோடு, நாடாளுமன்ற உறுப்பினரொருவரை கைது செய்வதற்கான முறையான ஆவணங்ககேதும் இல்லாத நிலையில், இன்று அதிகாலையில் திரு. கஜேந்திரகுமாரது கொள்ளுப்பிட்டி வீட்டில் கூடிய காவல்துறையினரால் அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சபாநாயகரை திரு. கஜேந்திரகுமார் தொடர்புகொண்டபோது, கைதுக்கான ஆவணங்கள் காவல்துறையிடம் உள்ளதாவென விசாரிக்கப்பட்டபோது, அவ்வாறான ஆவணங்கள் தன்னிடம் கையளிக்கப்படவில்லையென திரு. கஜேந்திரகுமார் சபாநாயகரிடம் தெரிவித்ததாகவும், இதுவிடயம் பற்றி, காவல்துறையினரிடம் பேசுவதாக சபாநாயகர் உறுதியளித்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், திரு. கஜேந்திரகுமாரை அழைத்துச்செல்வதிலேயே காவல்துறை குறியாக இருந்த நிலையில், மீண்டும் சபாநாயகரை தொடர்புகொள்ள முயற்சிக்கப்பட்டபோது சபாநாயகர் தொடர்பில் வராத நிலையில், காவல்துறையினரின் வாகனத்தில் ஏறிய திரு. கஜேந்திரகுமார் முதற்கட்டமாக கொள்ளுப்பிட்டி காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்டு, பின், அங்கிருந்து மருதங்கேணி காவல்நிலையம் கொண்டு செல்லப்படுவதாக இறுதிக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருதங்கேணியில் திரு. கஜேந்திரகுமார் துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தப்பட் விடயத்தில், நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமையை திரு. கஜேந்திரகுமார் மீறியதாக அவர் மீது காவல்துறை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதாகவும், அது தொடர்பிலான வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் மருதங்கேணிக்கு அழைத்து கிச்செல்லப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படும் நிலையில், வாக்குமூலம் பெறப்படும் நாளாக 08.06.23 அன்று நாள் குறிக்கப்பட்ட நிலையிலும், குறிக்கப்பட்ட நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே, கைது செய்வதற்கான முறையான ஆவணங்களேதும் இல்லாமலேயே திரு. கஜேந்திரகுமார் அவசர அவசரமாக கைது செய்யப்பட்டுள்ளமையானது பலத்த கண்டங்களுக்குள்ளாகியிருப்பதோடு, அவரது சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உரையை தடுப்பதற்கான முயற்சியே இதுவென, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய செயலாளர் திரு. செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply