யாழ்ப்பாணக் குடாநாட்டில் தீபாவளிப் பண்டிகைக்கு விற்பனை செய்யவென தெற்கில் இருந்து 4 ஊர்திகளில் கொண்டு வரப்பட்ட வெடிகள் சுகாதார அதிகாரிகளினால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா நெருக்கடி நிலைமைகளினால் தெற்கில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார அதிகாரிகளிற்கு கடந்த 12ம் திகதி இரவு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீபாவளிப் பண்டிகைக்காக 13ஆம் திகதி யாழ். நகரில் விற்பனை செய்வதற்காக 4 வாகனங்களில் வெடி எடுத்து வந்த பலர் யாழ் நகரில் உள்ள ஓர் விடுதியில் தங்கி நிற்பதாக தகவல் கிட்டியுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் 4 வாகனங்களில் வெடி எடுத்து வந்தவர்களை இனம்கண்டு உடனடியாக அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தல் உத்தரவை வழங்கியதனால் மறுநாள் வெடிகள் விற்பனைக்கு விடப்படவில்லை.
இவ்வாறு வெடியும் விற்பனை செய்யப்படவில்லை வாகனங்கள் நீண்ட நாட்களாக யாழில் தடுப்பதோடு வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களும் யாழில் தடுக்கப்படுவதனால் ஏற்படும் இடர் நெருக்கடி தொடர்பில் சுட்டிக்காட்டியதனால் நேற்று மாலை வெடி ஏற்றிவந்த வாகனங்கள் மீண்டும் தெற்கிற்கே திருப்பி அனுப்பப்பட்டது.