துக்கநாளினால் வெறிச்சோடியது மன்னார்!!

You are currently viewing துக்கநாளினால் வெறிச்சோடியது மன்னார்!!

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக இன்றைய தினம் திங்கட்கிழமை (5) மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு துக்க தினம் அனுஸ்ரிக்கப்பட்டு வருகிறது.

வீதிகள் வீடுகள் எங்கும் கறுப்பு மற்றும் வெள்ளை நிற கொடிகள் பறக்க விடப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இன்றைய தினம் இறந்த ஆயருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

வடக்கு கிழக்கு மாத்திரமன்றி இலங்கை முழுவதும் உள்ள பொதுமக்கள் அரச அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் மதத் தலைவர்கள் என இலட்சக்கணக்கான மக்கள் இணைந்து இன்றைய தினம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் உள்ள ஆயரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை(4) மாலை 3 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்திற்கு அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் இறுதி நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ஆயரின் பூதவுடல் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணி வரை மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு ஊர்தி பவனியூடாக கொண்டு செல்லப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் பல ஆயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்தினர். -இன்று திங்கட்கிழமை அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படுள்ள நிலையில் இன்று மதியம் 2 மணி வரை அஞ்சலிக்கு வைக்கப்பட்டு மாலை 3 மணியளவில் இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன், ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாகங்களிலும் கறுப்பு,வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்ட நிலையில் மன்னார் மறைமாவட்டம் சோக மயமாக காணப்படுகின்றது.

-குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு, தனியார் போக்கு வரத்து சேவைகளும் இடம் பெறவில்லை.

பகிர்ந்துகொள்ள