துருக்கிய-பல்கேரிய எல்லையில் 100க்கும் மேற்பட்ட புலம்பெயர் மத சிறுபான்மையினர் கைதாகியுள்ள நிலையில், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் பெறத் தவறினால் கடும் சிக்கல் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த புலம்பெயர் மக்கள் நீண்ட கால சிறைவாசம் அல்லது மரணதண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் வெளியாகியுள்ளது. அஹ்மதிய முறையைப் பின்பற்றுபவர்களே துருக்கிய எல்லையில் திரண்டுள்ளதுடன் ஐரோப்பாவிற்கு பாதுகாப்பாக செல்லும் முயற்சியில் இறங்கியவர்கள்.
அரபு உலகின் சில பகுதிகள் முழுவதும் மதவெறியாளர்கள் என்று கண்டிக்கப்பட்ட இஸ்லாத்தின் ஒரு பகுதியினர் இவர்கள். துருக்கிய எல்லையில் வந்ததும், துருக்கிய எல்லைக் காவலர்களால் தீவிர வன்முறையைச் சந்தித்தது இந்த குழு.
மட்டுமின்றி, கூட்டத்தை கலைக்க வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், கொடூரமான தாக்குதலையும் முன்னெடுத்துள்ளனர். அத்துடன் எல்லையில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள காவல்நிலையத்திற்கு அஹ்மதியர்களை இழுத்துச் சென்றுள்ளனர்.
கைதானவர்கள் கூட்டத்தில் இரு பிரித்தானிய குடிமக்களும் உள்ளனர் எனவும், ஆனால் அவர்கள் பத்திரிகையாளர்கள் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. முதியவர்கள், பெண்கள், சிறார்கள் உள்ளிட்ட 103 பேர்கள் கொண்ட இந்த குழுவானது தற்போது அடுத்த 7-10 நாட்களுக்குள் நாடு கடத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
புகலிடம் மறுக்கப்பட்டால், நாடுகடத்தப்படும் ஒவ்வொருவரும் அவர்களின் நாடுகளில் மரணதண்டனைக்கு விதிக்கப்படலாம் என்றே அஞ்சப்படுகிறது. அஹ்மதிய மக்கள் பொதுவாக ஈரான், ஈராக், அல்ஜீரியா, எகிப்து, மொராக்கோ, அஜர்பைஜான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வேட்டையாடப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, கடத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு பயமுறுத்தப்படுகிறார்கள்.
இந்த நிலையில், தாங்கள் தூக்கிலிடப்படும் அபாயம் இருப்பதால், தங்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படாமல் இருப்பது மிகவும் முக்கியம் எனவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் பெறுவது தங்களது எதிர்காலத்திற்கான கடவுச்சீட்டாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட மனித உரிமைச் சட்டங்களின்படி எல்லையைத் தாண்டுவதற்கு முன் அவர்கள் புகலிடம் கோருவதற்காக அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றினார்கள் என்றே தெரியவந்துள்ளது.